பசில் ராஜபக்சவின் இந்திய வருகை | நான்கு அம்ச நிபந்தனைகளின்கீழ் இலங்கைக்கு இந்தியா கடனுதவி

திருகோணமலை எண்ணை வயல் அபிவிருத்தி, இந்திய முதலீடுகள் துரிதப்படுத்தப்படும்



இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக உதவி கேட்டு இந்தியா சென்றிருந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நிபந்தனைகளுடன் கூடிய வெற்றியோடு திரும்புவதாக இலங்கைத் தரப்பினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த வருடம் இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவு அண்மிக்கும் வேளையில் இலங்கயின் அன்னியச் செலாவணி இருப்பு வரலாற்றில் முதல் தடவையாக 1.5 பில்லியன் டாலர்களுக்குக் குறைந்துள்ளது. இந் நிலையில் மேலதிக கடனைக் கேட்டு பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்தார்.

2020 இல் ஜனாதிபதி ராஜபக்ச இந்தியப் பிரதமர் மோடியிடம் நாணயப் பரிமாற்றத்தின் அடிப்படையில் (currency swap) $1 பில்லியன் டாலர்கள் கடனைக் கேட்டிருந்தார். வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில் பொதுவாகக் கையாளப்படும் இம்முறையில் கடன் பெறும் (இலங்கையின்) வட்டி வீதமே முழுத் தவணைக்கும் (fixed rate at local currency) அறவிடப்படும். இதனால் கடன் வாங்கும் நாடு அதிக பலனைப் பெறுகிறது.

ஆனால் கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் இலங்கை இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட படியால் பிரதமர் மோடி இக் கடன் வழங்குவதைத் தாமதப்படுத்தியிருந்தார். மஹிந்த ராஜபக்ச பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும் இக் கடன் விடயமாகப் பேசியிருந்தார். அதற்கும் பிரதமர் மோடி மசியவில்லை. இப்போது மூன்றாவது ராஜபக்ச பசில் புயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அதுவும் நிபந்தனைகளுடன் தான் சாத்தியமாகியிருக்கிறது.

நான்கு அம்ச நிபந்தனைகள்

இந்தியா உடன்பட்டிருக்கும் இந் நாணயப் பரிமாற்றம் நான்கு அம்ச முன்னெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உணவு, மருந்து, எரிபொருள் இறக்குமதிகளுக்கான கடனுதவி (lines of credit), இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு விடயங்களுக்கான நாணயப் பரிமாற்றத்துடனான கடன் (currency swap); திருகோணமலை எண்ணை வயல்களைத் துரிதமாக நவீனமயப்படுத்தும் திட்டம்; வேறு பல இந்திய முதலீட்டு முயற்சிகளை வசதிப்படுத்த இலங்கையின் உத்தரவாதம் ஆகியனவே அவை.

பசில் ராஜபக்சவின் இரண்டு நாள் இந்திய வருகையின்போது, புதனன்று, புது டில்லியில், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜயசங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரைச் சந்தித்திருந்தார். இலங்கை தரப்பில் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.



திருகோணமலை எண்ணை வயல் நவீனமயமாக்கல் தொடர்பாக 2017 இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தும் ராஜ பக்ச அரசு, சீன முதலீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தமையால் இத் திட்டங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டன. இந் நிலையில் மே 2020 இல் ஜனாதிபதி ராஜபக்சவின் $1 பில்லியன் கடன் கோரிக்கையை பிரதமர் மோடி உதாசீனம் செய்திருந்தார். இப்போது அக் கடனை றிசேர்வ் பாங்க் ஒஃப் இந்தியா கொடுக்கவிருக்கிறது. அதே வேளை இலங்கை இந்தியாவுக்கு ஏற்கெனவே கொடுக்கவேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணையை நீடிக்கும்படி மஹிந்த ராஜபக்ச முன்வைத்த கோரிக்கையையும் பிரதமர் மோடி இன்னும் ஆலோசனைக்கு எடுக்கவில்லை. இந் நிலையில் இந்தத் தடவை இந்தியா தனது நிபந்தனைகளை மிகவும் இறுக்கமாகப் பிரயோகித்திருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் கைநழுவியதற்குப் பின்னர் இலங்கையில் இந்தியாவின் புதிய அபிவிருத்தித் திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் திருகோணமலை எண்ணை வயல் அபிவிருத்தித் திட்டத்தை தற்போது இந்தியா முன்வைத்திருப்பது இலங்கையின் அடுத்த நகர்வுகளைப் பரீட்சிப்பதற்காக இருக்கலாம்.