பசிபிக் தீவூகளருகே தொடர் நில நடுக்கம் – சுனாமி அபாய எச்சரிக்கை
இந்தோனேசிய நில நடுக்கம் இதுவரை 160 பேரைக் காவுகொண்டிருக்கிறது
பசிபிக் தீவுகளில் ஒன்றான சொலொமன் தீவுகளுக்குகருகில் இன்று (செவ்வாய்) 7.0 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. தலைநகர் ஹொனியாராவிலிருந்து 56 கி.மீ. தொலைவில் இந் நிலநடுக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரை மணித்தியாலத்தின் பின்னர் 6.0 றிக்டர் அளவிலான மேலுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கங்களால் கட்டிடங்களுக்கோ மக்களுக்கோ எதுவித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை அறியப்படவில்லை என சொலொமன் தீவுகளின் பிரதமர் மானசே சோகவரே அறிவித்திருக்கிறார். எனினும் பசிபிக் தீவுக் கூட்டத்திலுள்ள இதர தீவுகளான பபுவா நியூகினி மற்றும் வணுவாத்து ஆகியன சுனாமி அபாயத்துக்குள்ளாகலாமென அமெரிக்க புவியாய்வுத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
“தீ வளையம்” (Ring of Fire) என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய நிலத்தகடு (tectonic plate) மீது சொலொமன் தீவுகள் அமர்ந்திருக்கின்றன எனவும் இதற்கும் பசிபிக் நிலத்தகட்டுக்குமிடையே ஏற்படும் உரசலின்போது பாரிய நிலநடுக்கங்களும் அவற்றைத் தொடர்ந்து சுனாமிகளும் சமபவிக்கின்றன எனவும் அமெரிக்க எச்சரிக்கை நிலையம் கூறுகிறது.
இதே வேளை நேற்று இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான யாவாவில் நடைபெற்ற நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 160 பேர் மரணித்திருப்பதாக அந் நாடு அறிவித்துள்ளது. இந்தோனேசியாவும் ‘தீ வளையத்தின்’ மீது அமர்ந்திருக்கும் ஒரு நாடாகும். (Photo by Ilona Froehlich on Unsplash)