பங்களூரு விமான நிலையச் சமபவம் – நடிகர் சேதுபதிக்கு சென்னை நீதிமன்றம் அழைப்பாணை

நவம்பர் 2ம் திகதி பங்களூரு விமான நிலையத்தில் வைத்து நடிகர் விஜே சேதுபதியின் குழுவினர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மஹா காந்தி என்பவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சேதுபதி குழுவினருக்கு அழைப்பாணை அனுப்பியிருக்கிறது.உள்ளூர் தொலைக்காட்சியொன்றிற்கு மஹா காந்தி அளித்த பேட்டியில், சம்பவம் நடைபெற்ற தினத்தன்று தமது பயணப் பெட்டிகளைப் பெறுவதற்காகக் காத்து நின்ற போது நடிகர் விஜே சேதுபதியிடம் தான் சென்று அவருக்கு கிடைத்த தேசிய விருதுக்காக அவரைப் பாராட்டியதாகவும் ஆனால் அதற்கு சேதுபதி மிகவும் கிண்டலானதும் கீழ்த்தரமானதுமான வார்த்தைகளைப் பாவித்து தன்னை அவமானப்படுத்தியிருந்தார் எனவும் அதனால் ஆத்திரமடைந்த தான் அவரை எச்சரித்து அனுப்பினார் என்றும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்கு வெளியே வரும்போது சேதுபதியுடன் வந்த அவரது குழுவினரில் ஒருவரான பாஸ்டர் ஜோன்சன் என்பவர் திட்ஈரெனத் தன்னைத் தாக்கியதுடன் கொலை அச்சுறுத்தல் செய்திருந்தார் எனவும் மஹா காந்தி தனது நீதிமன்ற முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மஹா காந்தி சென்னை வந்திறங்கியதும் இச்சம்பவம் தொடர்பாக சேதுபதி கொடுத்த ஊடகப் பேட்டியில் மஹா காந்தி மது வெறியில் தன்னைத் தாக்கியதாகக் கூறியிருந்தார் என்பதை அறிய முடிந்தது எனக் கூறியிருக்கிறார்.

இவ்வழக்கு ஜனவரி 2, 2022 இல் நீதிமன்றத்தால் எடுத்துக்க்கொள்ளப்படவிருப்பதாக அறியப்படுகிறது.