Columnsமாயமான்

பக்சர் ‘அக்கிரஹாரத்தில்’ குழப்பம்?

கோதா வீட்டிற்கு வெளியே Moving Trucks?

மாயமான்

“நாட்டில் அரசியல் ஸ்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் 19 ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டும்” என மஹிந்தர் இன்று தெரிவித்திருக்கிறார். அவருடைய கனவு மெய்ப்படும் காலம் கனிந்து வருகிறது போலத் தெரிகிறது.

20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்திடமிருந்து அதிகாரங்களைப் பறித்து அனைத்தையும் தம்பி கோதாவிடம் கொடுத்த காலத்திலிருந்து அவர் உள்ளுக்குள்ளே புழுங்கிக்கொண்டுதான் இருந்தார். வியத்மக என்ற மூடர் கூடமும், வீரவன்ச, வாசு, கம்மன்பில போன்ற தெருக்குளறிகளும் சேர்ந்து சதி செய்து 20 ஆவது திருத்தத்தை அவசரம் அவசரமாகக் கொண்டுவந்து மஹிந்தவை ஏறத்தாள ஒட்டாண்டியாக்கியிருந்தார்கள். ஆனால் குடும்பத்தில் பலர் அமைச்சர்களாக்கப்பட்டதால் மஹிந்த பற்களை நறும்பிக்கொண்டு பேசாமல் இருந்தார்.

இப்போது நாடு கொந்தளிக்கிறது. தனது முடியை மகனது தலையில் சூட்டி அழகுபார்க்க விரும்பிய மகாதேவியின் ஆசையில் மண்ணள்ளிப் போட்ட கோதாவின் மீது குடும்பம் எல்லாமே பழியைப் போடும் சூழ்நிலை. ஒரு காலத்தில் வீட்டு வாடகை கட்ட முடியாமல் இருந்த பக்சர் குடும்பத்தைக் காப்பாற்றி விட்டது சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பார்கள். இப்போது பண்டாரநாயக்கா குடும்பத்தையே தூக்கி வெளியில் போட்டுவிட்டது பக்சர் குடும்பம்.

கோதா விரும்பினால் இதிலிருந்து இலகுவாகத் தப்பியோடி கலிபோர்ணியாவில் சொந்தமாகவே ஒரு 711 கடையொன்றை வாங்கி நடத்திக்கொண்டு இருக்கலாம். வேண்டுமானால் ஞானாக்காவுக்கும் அங்கு ஒரு வேலையைக் கொடுத்து சந்தோசமாக இருக்கலாம். ஆனால் மிச்ச பக்சக்களுக்கு அது உசிதமான முடிவாக இருக்க முடியாது. கோதா ஓடுவதானாலும் ஆட்சியைத் தங்களிடம் வைத்திருக்கவேண்டுமென்பது பக்சர் விருப்பம்.

உதாரணத்துக்கு, இந்த நிலையில் கோதா ஓட்டம் பிடித்தால், இன்னுமொரு தடவை, இந்தியா பருப்புத் தூவும் மட்டும் அல்லது தமிழ்ப் பையன்கள் துவக்குத் தூக்குமட்டும் பக்சர் குடும்பம் ஆட்சிக்கு வர இயலாது. கோதா ஓடுவதைப் பக்சர்கள் மட்டுமல்ல கோதாவின் நிழலில் தாங்களும் ரவுடிகள் என்று நெஞ்சை நிமிர்த்தித் திரிந்தவர்களும் விரும்பவில்லை. எனவே அவர் கம்பி நீட்டுவதற்கு முதல் அவருக்கு அள்ளிக் கொடுத்த அதிகாரங்கள் அனைத்தையும் மீளப்பறித்து பாராளுமன்றத்திடம் கொடுத்துவிட்டால் இவர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு கிடைப்பது மட்டுமல்ல தங்களை வளைவெடுத்துக்கொண்டு பக்சக்கள் திரும்ப ஆட்சியைக் கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைப்பதற்கான சாத்தியங்களும் உண்டு என அவர்கள் நம்பலாம். வயிறுகள் நிறைந்தவுடன் மனங்கள் வறுமையாவதும் மூளைகள் மந்தமடைவதும் வழக்கம்.

இதனால் கோதா கழற்றப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பைத் திருத்தி மீண்டும் பிரதமராக இருக்கும் தன்னிடம் – அல்லது பராளுமன்றத்திடம் – அதிகாரங்களைக் குவித்துக்கொண்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எலும்புகளைத் தூக்கிப் போட்டுத் தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தலாமென மஹிந்தர் நம்புவதாகவே ஊகிக்க வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் கூட்டமைப்பினர், மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களைத் தவிர மற்றையவர் எல்லோரும் தவளைப் பாய்ச்சலில் கெட்டிக்காரர்கள். மஹிந்தரின் கனிவாய்மொழி இவர்களை இலகுவாகப் பாயவைக்கக்கூடியது. எனவே பாராளுமன்றத்தின் மூலம் தனது இச்சைகளைத் தீர்த்துவைப்பதற்கும் உகண்டாவில் பதுக்கப்பட்ட சொத்துக்களை இன்னுமொரு அரசாங்கம் கிண்டி எடுத்துவிடாமல் தவிர்ப்பதற்கும் பாராளுமன்றத்தைத் தன்வசம் எடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். எனவே இப்போதுள்ள சூழலில் ‘கோட்டா ஊருக்குப் போ” போராட்டக்காரரை முதலில் அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதற்கு கைவசம் இருக்கும் ஒரே கருவி 19 ஆவது திருத்தம் மட்டுமே.

இந்திய பருப்பும் அரிசியும் யாழ்ப்பாணத்தின்மேல் பொழியாத வரைக்கும் சிங்கள மக்கள் வயிறுகள் பொங்காது. இதையறிந்து இந்தியா அவர்களுக்கென விசேடமாகத் தரைவழியாக நேரே கொண்டுபோய் அரிசி பருப்புப் பொதிகளை அவர்கள் வாசல்களில் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டுக் கரையில் குழந்தைகளுடன் வந்திறங்கிய தமிழரைச் சிறையில் அடைத்துவிட்டோம் என தென்னிலங்கைப் பத்திரிகைகளுக்குச் செய்தியைக் கசியவிட்டால் வீரவன்ச போன்றவர்களது மனது குளிரும்; போராட்டக் காரர்கள் வீதிகளை விட்டு வீடுகளுக்குப் போய்விடுவார்கள் என மஹிந்தர் நம்பலாம்.

இதில் மஹிந்தரின் சாணக்கியத்தைப் போற்றாமல் இருக்க முடியாது. உண்மையில் கோதா இல்லாது மஹிந்தர் ஜனாதிபதியாக வந்திருந்தால் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் துர்ப்பாக்கியமாக 19 ஆவது திருத்தம் அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதைத் தடுத்துவிட்டது. ஆனால் 20 ஆவதைக் கொண்டுவந்து கோதா தன்னை ஏழையாக்கி விடுவார் என அவர் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. ஆனால் பசிலர் எதிர்பார்த்திருக்கலாம். இருப்பினும் பல்லைக் கடித்துக்கொண்டு அவர் தருணம் பார்த்துக்கொண்டு இருந்தாரெனவே ஊகிக்கவேண்டியிருக்கிறது. பக்சர் குடும்பத்தில் படுமுட்டாள் என்பதை ஒத்துக்கொண்ட ஒரே ஒருவர் கோதா என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவரை வைத்து தான் காரியம் சாதிக்கலாம் என நினைத்த மஹிந்தரை வியத்மக கூடம் முந்திவிட்டது. அதன் ஆலோசனையின்படி நடந்தபடியால் தான் நாடு இந்த நிலைக்குப் போயிருக்கிறது. இப்போது, ‘சொன்னேன் பார்த்தீர்களா’ என்று மஹிந்தர் துல்ளிக்குதிக்க சந்தர்ப்பம் கிட்டிவிட்டது. இருப்பினும் இடையில் ஒரு தடவை “என்னட்டை விடுங்கோ எல்லாத்தையும் ‘ஃபிக்ஸ்’ பண்ணுறன்” என்று கோதாவை நிமித்துவதற்கு பசிலர் வந்தாலும் பிரச்சினை புரையோஈடிப் போய்விட்டிருந்ததால் அவரால் முடியவில்லை.

இந்த நிலையில் ‘பழம் நழுவி மஹிந்தரின் பாலில்’ விழுந்திருக்கிறது. ஏற்கெனவே “20 ஆவது திருத்தத்தை மாற்றியே ஆகுவோம் எனக் கர்ச்சித்துக்கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே கல்லில் வீழ்த்த ஒரே வழி அதே கோஷத்தைத் தான் எழுப்புவது. இதன் மூலம் ‘ 19 ஆவது திருத்தத்தை மீள அமுல் செய்யும்’ பிரேரணையை எதிர்க்கட்சிகளிடமிருந்து மஹிந்தர் பிடுங்கிக்கொண்டார். இந் நிலையில் வாக்கெடுப்பு என்று வரும்போது அனைவரும் ‘மஹிந்தவின் பிரேரணைக்கு’ வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். மறுத்தால் ‘Sajith GO Gama’, ‘AKD Go Gama’ ஊர்வலங்கள் ஆராமபமாகிவிடும். ஒரு வேளை இப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தால் தனது தவளைகளைக் கொண்டு பிரேரணையைத் தோற்கச் செய்யவும் மஹிந்தரால் முடியும். மாறாக மஹிந்தர் அதைக் கொண்டுவந்தால் வெற்றி உறுதி என்பது மட்டுமல்ல அதே கல்லினால் கோத்தாவின் அதிகாரங்களையும் பறித்துவிடலாம். இந் நிலையில் அண்ணன் மீது எந்தக் கோபமும் இல்லாமல் கோதா கலிபோர்ணியாவுக்குப் பறந்து சென்று இனிதே வாழ்வார். பக்சர்களின் குடும்ப கெளரவம் ‘ஓரளவுக்குப்’ பாதுகாக்கப்பட்டுவிடும். ஆர்ப்பாட்ட சபை மகாசனங்களும் காலிமுகத்து வெக்கை தாங்காமல் வெறியை வெற்றியாக மாற்றிய பெருமிதத்துடன் வீடேகுவார்கள். மஹிந்தரும் ‘சுகவீனம் காரணமாக’ சக்கரவர்த்தி திருமகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சுப்பிரமணியசுவாமியிடம் தட்சிணையைக் கொடுத்து ஆசிகளை வாங்கிக்கொண்டு பட்டத்து மகிஷியுடன் ஊர்சுற்றக் கிளம்புவார்.

பசிலரோ கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்துடன் கலிபோர்ணியா திரும்பினாலும், மேற்கு மாகாண முதலைமைச்சராக புஷ்பா அன்ரிக்கு ஒரு பதவியைக் கொடுத்து ‘அக்கிரஹாரத்தில்’ மீண்டு அமைதியைக் கொண்டுவர எத்தனிக்கலாம்.

ஞானாக்காவின் பட்சி எதைச் சொன்னதோ தெரியாது, எனது பட்சி இப்படித்தான் கூறுகிறது. கோத்தாவுக்கு வியாழன் 10 இல் இருக்கிறதோ என்னவோ அவர் பதியை விட்டுக்கிளம்பும் காலம் வந்துவிட்டது. அதை ‘ஸ்மூத்தாக’ ஆக்குவதற்கான காலத்தைக் கிரகங்கள் மஹிந்தருக்கு வழங்கியிருக்கின்றன. வாய்களை மூடிக்கொண்டு சிரிப்பதும் சிரிக்காததும் தமிழர்களுக்கு இருக்கும் தேர்வு.

எல்லாம் ‘அவர்’ செயல்.