பக்க வாதம் (stroke) - பாகம்2 -

பக்க வாதம் (stroke) – பாகம்2

Spread the love
பாகம் 2/3 – தொடர்ச்சி…
Dr. Kanaga Sena, MD
Yael School of Medicines, Bridgeport CT

Dr. Kanaga Sena MD
மூளை இரத்தோட்ட வியாதிகளின் வகை

மூளையில் இரத்தோட்டத் தடைகள் பல காரணங்களினாலும் ஏற்படுகிறது. அவற்றில் சில:

 1. ஸ்ட்றோக் (stroke ) – மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்படுதல்
 2. தற்காலிக இரத்தக் குறைபாடு (transient ischemic attack (TIA)) – மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு தற்காலிகமாகக் குறைவடைவதனால் கலங்களுக்குப் போகும் உயிர் வாயுவும், உணவும் தற்காலிக தடைக்குள்ளாதல்.
 3. இரத்தக் கசிவு (subarachnoid hemorrhage) – மூளைக்கு இரத்தம் வழங்கும் குழாய்களிலிந்து இரத்தம் கசிந்து வெளியேறுதல்
 4. மறதி நோய் (vascular dementia) – மூளையின் சில பகுதிகளுக்குப் போகும் இரத்தம் தடைப்படுவதனால் ஞாபகசக்திக்குப் பொறுப்பான கலங்கள் இறந்துபோதல்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எவ்வகையாக இரத்தம் தடைப்பட்டாலும், விளைவு ஏறத்தாழ ஒன்றுதான். அது தான் பக்கவாதம்.

பக்கவாதம் ஒரு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும் நோய். எவ்வளவு விரைவாகச் சிகிச்சையளிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக மூளைக் கலங்கள் இறந்துபோவதைத் தவிர்க்கலாம்.

‘ஸ்ட்றோக்’ (stroke) இரத்தக்குழாயில் அடைப்பு

இது பொதுவாக மூளையின் உட்பகுதிகளில் ஏற்படுபடுகிறது. சடுதியாகவும், முழுமையாகவும் இரத்தம் தடைப்படுதலினால் வருவது. இதன்போது தோன்றும் அறிகுறிகள் சிகிச்சையளிக்கும்வரை நீடிக்கும்.

இச் சடுதியான அடைப்புகள் இரண்டு வழிகளில் ஏற்படலாம்.

 1. தக்கையடைப்பு (embolism) – உடலின் வேறொரு பகுதியில் உருவாகும் இரத்தக் கட்டி, (உதாரணத்திற்கு இருதயம்), அல்லது குழாய்களின் உட்சுவர்களிலிருந்து விடுபட்டு மிதந்துவரும் சிறிய பாகங்கள் போன்றன நாடிகளினூடு இரத்தத்தால் கொண்டுவரப்பட்டு மூளையிலுள்ள சிறு குழாய்களை அடையும்போது அது தக்கையால் போத்தலை அடைப்பதுபோல் சிறிய குழாய்களை அடைத்து இரத்தோட்டத்தை நிறுத்தி விடுகிறது. இரத்தம் வழங்கப்படாத மூளையின் கலங்கள் இதனால், இறக்க நேரிடுகின்றது.
 2. இரத்த உறைவு (thrombosis) – நாடிகளின் உட் சுவர்களில் காயங்கள் ஏற்படும்போது அவ்விடங்களில் இரத்தம் உறைந்து கட்டியாவதினால் ஏற்படும் அடைப்பு.
சவ்வுக் கசிவு (Subarachnoid hemorrhage)

இது பொதுவாக மூளையின் மேற்பரப்பில் உள்ள இரத்தக்குழாய்களிலிருந்து இரத்தம் மெதுவாகக் கசிவதன்மூலம் ஏற்படும் பக்கவாதம் (stroke). ஒப்பீட்டளவில் இந்நோயினால் பாதிக்கப்படுபவர்கள், முன்னையதை விடவும் மிகக்குறைவு.

இருப்பினும், இதுவும் ஒரு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவையான ஒரு வியாதியே. 75 வீதமான இரத்தக்கசிவுப் பக்கவாதங்கள் இரத்தக்குழாய்கள் வெடிப்பதால் (aneurysm) ஏற்படுகிறது. சிலரின் இரத்தக்குழாய்களின் சுவர்கள் மெல்லியதாக இருப்பதால் இவ்வெடிப்பு நிகழ்கிறது.

சவ்வுக்கசிவுகளுக்கான இதர காரணங்கள்:

 • தலையில் ஏற்படும் பாரதூரமான காயம்
 • பிறப்பிலேயே ஏற்படும் அசாதாரண நாடி / நாள உருவாக்கம்
Related:  What is dementia? Alzheimer's Research UK
‘சிறு பக்கவாதம்’ (Transient ischemic attack (TIA))

மூளையின் சில பகுதிகளுக்கு இரத்த விநியோகம் சடுதியாகவும், தற்காலிகமாகவும் வீழ்ச்சியடைதலினால் ஏற்படும் ‘சிறு பக்கவாதம்’ (mini stroke).

இதன் அறிகுறிகளும் முழுமையான பக்கவாதம் ஏற்படும்போது இருப்பதைப் போலவே உணரப்படும் ஆனால் பக்கவாதத்தைப் போல நீண்ட நேரத்துக்கு உணரப்படுவதில்லை (முழுமையான பக்கவாதத்தின் அறிகுறிகள் சிகிச்சை அளிக்கும்வரை உணரப்படும்) மாறாக, சிறு பக்கவாதத்தின் அறிகுறிகள் சில நிமிடங்களே உணரப்படும்.

இவ்வகையான ‘சிறு’ பக்கவாதங்கள் சில வேளைகளில் முழுமையான பக்கவாதங்கள் வருவதற்கு முன்னறிவிப்பாகவும் இருக்கலாம். ‘சிறு’ பக்கவாதங்கள் வந்த 5 பேர்களில் ஒருவருக்கு 4 வாரங்களுக்குள் முழுமையான பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களுண்டு.

உங்களுக்குத் தெரிந்தவர் எவருக்காவது ‘சிறு’ பக்கவாதம் வந்திருந்தால் அவருக்கு முழுமையான பரிசோதனைகளைச் செய்யும்படி குடும்ப வைத்தியர் மூலம் வற்புறுத்துவது நல்லது.

மறதி நோய் (Vascular dementia)

மூளையின் செயற்பாடுகள் அருகிப்போய்க்கொண்டிருக்கின்றன என்பதன் அறிகுறிகள் பலவற்றின் தொகுப்பான வெளிப்பாடே ‘மறதி நோய்’. அவற்றில் சில:

 • சிந்தனை (thinking)
 • மொழி (பேச்சு) (language)
 • ஞாபகம் (memory)
 • புரிந்துணர்வு (understanding)
 • முடிவெடுத்தல் (judgement)

மேற்கூறப்பட்ட விடயங்களில் ஒருவர் வழக்கத்திற்கு மாறாகச் செயற்படுகிறார் என அறிந்தால் உடனே மருத்துவரோடு ஆலோசிப்பது நல்லது.

மறதி நோய் இரண்டு முக்கிய காரணங்களினால் வருகிறது. ஒன்று அல்சைமர்ஸ் போன்ற வியாதியினால் மூளையின் கலங்கள் செயலிழந்து போவது. மற்றது இரத்த வழங்கல் தடையுறுவதால் (vascular) கலங்கள் செயற்றுப் போவது. இரண்டினதும் இறுதி விளைவு ஒன்றுதான் – அது மறதி நோய்.

‘வஸ்குலர் டிமென்ஷியா’ எனப்படும் இரத்த வழங்கல் தடைபடுவதற்கு முன்னணியான காரணங்கள் (risk factors) சில:

 • உயர் இரத்த அழுத்தம் (high blood pressure / hyper tension)
 • புகைபிடித்தல் (smoking)
 • உணவுப் பழக்கம் (diet)
 • உயர் இரத்தக் கொலெஸ்ட்றோல் (high blood cholesterol)
 • குறைவான தேகாப்பியாசம் (lack of exercise)
 • அதிகரித்த உடல் எடை / பருமன் (being overweight and obese)
 • நீரழிவு நோய் (diabetes)
 • தேவைக்குமதிகமான மது பாவனை (excessive alcohol consumption)

இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அது ஏனைய காரணிகள் உருவாகுவதற்கு அத்திவாரமாக அமைகின்றது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் (high blood pressure / hyper tension)

மூளைக்கு இரத்தம் போவது தடைப்படுவதற்கு காரணமான ஆபத்துக் காரணிகளில் முதலிடம் வகிப்பது உயர் இரத்த அழுத்தம். அதிக அழுத்தத்துடன் இருதயம் இரத்தத்தைப் ‘பம்ப்’ செய்யும்போது நலிவாக இருக்கும் இரத்தக் குழாய்களின் சுவர்கள் வெடித்துப் போகின்றன. இதனால் இரத்தம் மூளையின் தேவையான பகுதிகளுக்குப் போகாமல் கசிந்து வெளீயேறவோ அல்லது உறைந்து போகவோ நேரிடுகிறது. இதனால் இரத்தம் கிடைக்காத கலங்கள் இறந்து உடலின் ஒரு அங்கம் செயலற்றுப் போகிறது. உயரழுத்தம் உள்ளவர்களுக்குப் பக்கவாதம் வருவது மற்றயவர்களை விட நான்கு மடங்கு அதிகம்.

Related:  இந்தியா | மருத்துவமனையில், ஒரு மாதத்தில் 100 குழந்தைகள் மரணம்!

புகைத்தல் (Smoking)

பபுகையிலையில் இருக்கும் நச்சுப் பதார்த்தங்களினால் மூளையில் இருக்கும் மெல்லிய இரத்தக்குழாய்களைப் பாதிக்கச் செய்கின்றன. அத்தோடு புகை பிடித்தல் உயரழுத்தத்துக்கும் காரணமாகிறது. பாதிப்படைந்த இரத்தக் குழாய்கள் உயரழுத்தத்தினால் வெடிக்கவோ அல்லது இரத்தக்கசிவுக்குக் காரணமாகவோ அமையலாம். ஒரு நாளைக்கு 20 சிகரட்டுகளைப் புகைப்பவருக்கு ‘ஸ்ட்றோக்’ வரக்கூடிய ஆபத்து 6 மடங்கு அதிகம்.Paragraph

உணவுப்பழக்கம் (Diet)

செறிந்த கொழுப்புள்ள (saturated fat) உணவு உருவாக்கும் இரத்தக் கொலெஸ்ரெறோல் இரத்தக்குழாய்களில் படிந்து குழாய்களின் துளைகளைச் சிறுகச் செய்கிறது. உப்பு அதிகமுள்ள உணவு உயர் அழுத்தத்தை தோற்றுவிக்கிறது. ஒடுங்கிய குழாய்களில் அதிக அழுத்தத்துடன் இரத்தம் ஓடும்போது நலிந்த குழாய்கள் வெடித்துப்போக நேரிடுகிறது.

அதிகளவு இரத்தக் கொலெஸ்ரெறோல் (High blood cholesterol)Paragraph

இரத்தத்தில் இருக்கும் கொலெஸ்ரெறோல் அதிகரிக்கும்போது அது சுவர்களில் படிந்து குழாய்களை ஒடுங்கச் செய்கிறது. இப்படி ஒடுங்கிய (narrowed) குழாய்களில் சிலவேளைகளில் இரத்தம் தடைபட்டு உறைந்து கட்டியாகிவிட (clot) நேரிடுகிறது. இப்படி ஏற்படும் அடைப்பு மூளைக்குப் போகும் இரத்தத்தைக் குறைத்தோ அல்லது நிறுத்தியோ விடுவதால் ‘ஸ்ட்றோக்’ ஏற்படுகிறது.

குறைந்த தேகாப்பியாசம் (lack of exercise)

ஒழுங்காக தேகாப்பியாசம் செய்யாதவர்களின் உடலில் அதிக கொலெஸ்றெறோல், உயர் அழுத்தம், மன அழுத்தம் (stress) ஆகியன தோற்றம் பெறுகின்றன. இதனால் அவர்களது உடற் பருமனும் அதிகரிக்கிறது. உடற் பருமன் / எடை அதிகரிப்பதால் பலருக்கு நீரழிவு (diabetes) வியாதி உண்டாகிறது.

நீரழிவு (Diabetes)

இரத்தத்தில் அதிக குளுகோஸ் (glucose / sugar) இருந்தால் அவர்களுக்கு நீரழிவு நோய் இருக்கிறதென்று அர்த்தம். நீரழிவு நோயில் இரண்டு வகையுண்டு. அவை வகை 1 (type 1) வகை 2 (type 2) எனப்படும். இரண்டு வகைகளுமே இரத்தக்குழாய்களைப் பாதிக்கின்றன. உடற்பருமன் அதிகமுள்ளவர்களில் பெரும்பாலும் வகை 2 நீரழிவு நோய் காணப்படுகிறது.

அதிகளவு மது பாவித்தல் (Excessive alcohol consumption)

அதிகளவு மது அருந்துபவர்களுக்கு கொலெஸ்றெறோல் அதிகரிப்பதும் உயர் அழுத்தம் உருவாகுவதும் அறியப்பட்ட ஒன்று.

பாகம் 3 இல் நோய்த்தடுப்பு முறைகள்….தொடரும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *