• Post category:CANADA / NEWS
  • Post published:April 19, 2020
Spread the love

Updated April 20, 2020 :

  • நோவா ஸ்கோஷியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 என அம்மாகாணத்தின் காவற்துறை அறிவித்திருக்கிறது.
  • கனடாவில் துப்பாக்கிதாரியால் அதிகம் பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.
  • சம்பவம் நடைபெற்று 9 மணித்தியாலங்களின் பின்னரே துப்பாக்கிதாரியான வோர்ட்மானின் பெயரைக் காவற்துறை பகிரங்கப்படுத்தியது.
  • என்ப்பீல்ட் என்னுமிடத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து வோர்ட்மான் காவற்துறையினரால் கொல்லப்பட்டார்.
  • அவரது மரணம் தொடர்பாக சுயாதீன காவற்துறைக் கண்காணிப்பு அலுவலகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
  • வோர்ட்மான் ஒரு பல் பராமரிப்பாளர் (denturist) எனவும் கொள்ளப்பட்ட பலர் அவருக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள் எனவும், சிலர் அவருக்குத் தெரியாதவர்கள் எனவும் அறியப்படுகிறது.
  • அவர் காவற்துறையின் ( RCMP ) சீருடையை அணிந்துகொண்டு காவற்துறையினர் பாவிக்கும் வாகனம் போல் வடிவமைக்கப்பட்ட ஒன்றில் சென்றபடியால், காவற்துறையினரின் கவனத்தை ஈர்க்காமல், 16 வெவ்வேறு இடங்களுக்குச் சென்று இக் கொலைகளைச் செய்ய முடிந்திருக்கிறது.
  • வோர்ட்மானின் பூர்விகம், அயலிலுள்ள மாகாணமான நியூ பிரன்ஸ்விக்கின் பெருநகரமான மொங்கடனிலுள்ள ரிவர்வியூ என்ற ஊராகும். நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் 1980 களில் தன பட்டப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் நோவா ஸ்கொஷியாவிற்கு இடம் பெயர்ந்து அங்கு அத்திலாந்திக் டென்ஷர் கிளினிக் என்ற பெயரில் இரண்டு பற்களைப் பராமரிக்கும் அலுவலகங்களை நடத்தி வந்தார் என ‘குரோனிக்கிள் ஹெரால்ட் ‘ என்ற உள்ளூர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
  • காவற்துறையில், குறிப்பாக RCMP யில் அவருக்கு நீண்டகாலமாக ஒரு பித்து இருந்ததென்றும், அவர் மொடடார் சைக்கிள்களையும், கார்களையும், குறிப்பாகப் பழைய போலீஸ் கார்களையும் சேர்த்து வருபவர் என அவரையறிந்த அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ‘ஹெரால்ட் ‘ தெரிவிக்கிறது.
  • அவரது இரண்டு கிளினிக்குகளின் பின்னால் இரண்டு பழைய போலீஸ் (RCMP) வாகனங்கள் எப்போதும் தரித்து நின்றதாகவும் அறியப்படுகிறது.

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

துப்பாக்கிதாரி கப்றியேல் வோற்ட்மான்
துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான்

துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார்.

23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்ட அதிகாரியாவார். இவருடன் பணியாற்றிய இன்னுமொரு அதிகாரி இச் சம்பவத்தின்போது காயப்பட்டுள்ளார்.

இக் கொலைகள் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு, நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் சுயாதீன காவற்துறைக் கண்காணிப்பு அலுவலகத்திடம் (Serious Incident Response Team (SIRT)) கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது காவற்துறையினர் சம்பந்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களிலேயே சுயாதீன கண்காணிப்பு அலுவலகம் தலையிடுவது வழக்கம்.

இச் சம்பவம் Hwy 102 / Portapique Rd. அருகே நடைபெற்றிருக்கிறது

இச் சம்பவம் எழுந்தமானமாக நடைபெற்ற ஒன்றல்ல எனவும், துப்பாக்கிதாரி ஆர்.சீ.எம்.பீ. பாவிக்கும் வாகனத்தைப்போல ‘உருமாற்றிய’ வாகனமொன்றில், அக் காவற்துறைக்குரிய சீருடை போன்று ஒன்றை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சனி மாலை 11 மணிபோல் இச் சம்பவம் நடைபெற்றதாகச் சாட்சிகள் மூலம் தெரியவருகிறது. இன்று (ஞாயிறு) காலை இச் சம்பவம் பற்றிய தகவல்கள் காவற்துறையினரால் வெளியிடப்பட்டிருந்தன. (சீ.பி.சீ செய்திகள்)

Print Friendly, PDF & Email