நோவாக் ஜோகோவிச் நாடுகடத்தப்பட்டார்
அவுஸ்திரேலியா ஓப்பிண்: கோவிட் 1, ஜோகோவிச் 0
தொடர்ந்து 10 ஆவது தடவையாக அவுஸ்திரேலிய ஓப்பிண் ரென்னிஸ் சம்பியனாக வந்து உலக சாதனை புரியவிருந்த உலகின் முன்னணி ரென்னிஸ் ஆட்டக்காரரான நோவாக் ஜோகோவிச்சை கோவிட் தோற்கடித்திருக்கிறது. அவுஸ்திரேலியாவின் கோவிட் பாதுகாப்பு சட்டங்களை மீறி உட்புகுந்த ஜோகோவிச்சை அந்நாடு இன்று அவரது சொந்த நாடான சேர்பியாவிற்கு நாடு கடத்தியிருக்கிறது.
கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டிருப்பவர்களை மட்டுமே அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் உள்ளே வர அனுமதிக்கிறது. ஆனாலும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடமுடியாத சிலரையும் அதை உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு விதி விலக்கு வழங்கப்படுகிறது. இச் சட்ட இடைவெளியைப் பாவித்து, அவுஸ்திரேலிய ஓப்பிண் சுற்றுப் போட்டியில் விளையாட ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்தார். ஆனாலும் அவரது மருத்துவக் காரணம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனக்கூறி அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அவருக்கு அனுமதியை மறுத்திருந்தது. அதற்கு எதிராக அவர் செய்திருந்த விண்ணப்பத்தை மாநில நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தாலும் குடிவரவுத் திணைக்களம் அத்தீர்ப்புக்கு எதிராக மத்திய நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்து அவரை நாடுகடத்தும் உத்தரவை உறுதி செய்திருந்தார்கள். இதன் பிரகாரம் இன்று அவர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.
இந் நாடுகடத்தும் கட்டளையின் பிரகாரம், ஜோகோவிச் இன்னும் 3 வருடங்களுக்கு அவுஸ்திரேலிய மண்ணில் காலடி வைக்க முடியாது.
தொடர்ந்து 11 நாட்களாக நடைபெற்ற, கோவிட்டுக்கும் ஜோகோவிச்சுக்குமிடையிலான இந்த ‘அவுஸ்திரேலிய ஓப்பிணில்’ கோவிட் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்டம் முடிந்ததும் ஜோகோவிச், மிகுந்த ஏமாற்றத்துடன். முகக் கவசம் அணிந்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அறியப்படுகிறது.
“துர்ப்பாக்கியமாக இதுவரை நாட்களும் மக்களின் கவநம் முழுவதும் என் மீதே இருந்தது. இனிமேல் நாம் எல்லோரும், நான் வெகுவாக நேசிக்கும் ரென்னிஸ் விளையாட்டின் மீது கவநத்தைச் செலுத்துவோம்” என அவர் ரசிகர்களுக்கு இறுதியாக விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலிய நேரம் இரவு 11:00 மணிபோல் புறப்படும் அவர் எமிரேட் விமானத்தில் துபாய் வழியாக சேர்பியா செல்லவிருப்பதாகத் தெரிகிறது.
“தடுப்பூசி தொடர்பாக ஜோகோவிச் எடுக்கும் நிலைப்பாடு மேலும் பலரை ஊக்குவித்து அதனால் அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் முடுக்கிவிட வாய்ப்புண்டு. இதனால் பேலும் பல அப்பாவிகள் நோய்வாய்ப்படுவதற்கு நாம் காரணமாக இருக்கக்கூடாது” என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் தெரிவித்துள்ளார்.