நைஜர்: முகம் மாறும் ஆபிரிக்கா
சிவதாசன்
சமீபத்தில் மேற்காபிரிக்க நாடான நைஜரில் நடைபெற்ற இராணுவச் சதியொன்று அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். மேற்குலகம் குய்யோ முறையோ என மாரடிக்கிறது. கூடவே நைஜீரியா போன்ற நாடுகளும் கூலிக்கு மாரடிக்கின்றன. காரணம் ஜனநாயகம் தோற்றுப்போனதென்பதற்காக அல்ல, தங்கள் வளச்சுரண்டலுக்கு வாய்ப்பில்லாமல் போகப்போகிறது என்பதற்காகத் தான். இதைப் புரிந்துகொள்ள ஆபிரிக்க கண்டத்தின் வரலாற்றை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆபிரிக்கா நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள். உலகிலேயே அதிக இயற்கை வளங்கள் இங்குதானுள்ளன. ஆனாலும் இன்றுவரை உலகின் வறுமையான பிரதேசங்களில் ஆபிரிக்கா முதன்மையானதாக இருக்கிறது. காரணம் அதன் வளங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளால் சுரண்டப்படுகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டினால் காலனிகளாக்கப்பட்ட மேற்காபிரிக்க நாடுகள் அநேகம். அவை இப்போது கிளர்ச்சி செய்கின்றன. பல பிரஞ்சு படையினரைக் கப்பலேற்றி திருப்பி அனுப்பிவிட்டன. நைஜர் ஆட்சி மாற்றம் இந்த ஆபிரிக்க கிளர்ச்சியின் இன்னுமொரு கள வெற்றி. அல்லது காலனித்துவ சக்திகளின் தொடர் தோல்வியில் இன்னுமொரு மைல்கல்.
கினி, பேர்க்கினா ஃபாசோ, மாலி, நைஜர் ஆகியவை மேற்கு ஆபிரிக்காவின் பிரஞ்சு காலனித்துவ நாடுகளில் சில. பிரான்ஸுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இயற்கை வளங்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தவை இவை. பிரான்ஸின் அணு உலைகளுக்குத் தேவையான 15% யூரேனியத்தை நைஜரே வழங்கி வந்தது. பேர்க்கினோ ஃபாசோ தங்க ஏற்றுமதியில் முக்கியமானதொரு நாடு. கினி பிரான்ஸின் காலனிகளின் கடவுப் பாதை. மாலி இன்னுமொரு தங்கச் சுரங்கம்.
2021 இல் மேற்காபிரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரஞ்சு ஆதரவு ஆட்சிகள் இராணுவப் புரட்சிகள் மூலம் கவிழ்க்கப்பட்டன. மே 2021 இல் மாலியில் அஸிமி கோயிட்டாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவப்புரட்சியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்ததும் முதல் நடவடிக்கையாக பிரஞ்சு இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டது. இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களைக் குற்றம்சாட்டி மேற்குலகு அங்கு தனது ஆதிக்கத்தை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தது. இதுவரை அது சாத்தியமாகவில்லை. ஜூன் 2021 இல் பிரஞ்சுப் படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2021 இல் மமடி டூம்போயா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் கினி நாட்டிலிருந்தும் பிரஞ்சு நட்பு ஆட்சி தூக்கியெறியப்பட்டது.
ஒரு வருடத்தின் பின்னர் பேர்க்கினா ஃபாசோவில் ட்றாவோர் புரட்சியிநால் ஆட்சியைக் கைப்பற்றி உலகின் அதி வயது குறைந்த ஜனாதிபதியானார். பெப்ரவரி 2023 இல் பேர்கினா ஃபாசோவிலிருந்து பிரஞ்சு இராணுவம் வெளியேற்றப்பட்டது. அடுத்தது நைஜர். ஜூலை 26 இல் அப்டூரஹ்மானி ரக்கியானி சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதுமல்லாது பிரஞ்சுப் படைகளை வெளியேற்றியும் பிரான்ஸுக்கான யூரேனிய ஏற்றுமதியை நிறுத்தியும் சாதனை புரிந்தார். ஜனநாயகம் பற்றிக் கத்திக் குளறும் மேற்குலகம் யூரேனியம் பற்றி வாய் திறக்கவில்லை.
இப்புரட்சிகளுக்குப் பின்னால் ரஸ்யா இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது இலகு. சமீபத்தில் ரஸ்யாவின் செயின்ட் பீற்றர்ஸ்பேர்க்கில் ரஸ்ய-ஆபிரிக்க உச்சிமாநாடு ஒன்று நடந்தது. 49 ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றினர். இதில் பேசிய ட்றவோர் “ரஸ்யா ஆபிரிக்க குடும்பத்தின் ஒரு அங்கம்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பிய சக்திகளால் ஆபிரிக்கா சுரண்டப்படுவதைக் கண்டித்த அவர் “தாயகமோ, இறப்போ வெற்றி எமக்குத்தான்” என்ற சேகுவேராவின் பிரபல வாசகங்களை உரத்துக் கூறியிருந்தார். சோவியத் குடியரசு காலத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் மறுபடியும் ஆபிரிக்காவில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்குப் பின்னால் ரஸ்யா இருக்கிறதென்பதற்கு இதைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. உலகின் இரு / பல்துருவ ஒழுங்கு சாவகாசமாகத் திரும்பிக்கொண்டிருக்கிறது. பனிப்போர் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.
ஆட்சியை மீண்டும் உரியவரிடம் கையளிக்கும்படி மேற்குலகம் நைஜரின் புரட்சியாளரை எச்சரித்தது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் நைஜருக்கும் அதன் சகாக்களுக்கும் கொடுக்கும் உதவிகளை நிறுத்திவிட்டன. ஜூலை 30 அன்று மேற்காபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States (ECOWAS)) நைஜருக்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்து ஆட்சியை மீளவும் ஒப்படைக்காவிட்டால் இராணுவ படையெடுப்பை நிகழ்த்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தது. ஈகோவாஸ் முன்னாள் பிரஞ்சுக் காலனிகளின் சமூகம். இதன் தலைவர் நைஜீரியா. இங்கிருந்து நைஜர் மீது படையெட்டுப்பு நிகழலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வாரம் முடிந்தும் எதுவும் நிகழவிலை. படையெடுப்புக்கு எதிராக நைஜீரியாவின் செனட் சபை வாக்களித்ததனால் அது பிசுபிசுத்துப் போய்விட்டது. நைஜர் இப்போது தனது வான்பரப்பை மூடிக்கொண்டுவிட்டது.
விவகாரம் இப்போ முற்றிவிட்டது. இது மேற்குலகம் அழுதூத்துவதைப் போல ‘ஒரு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இழுக்கு’ அல்ல. எப்போதோ தொடங்கிய ஒரு ஆபிரிக்க புரட்சியின் தொடர்ச்சி. நைஜருக்கு ஆதரவாக இப்போது பேர்க்கினா ஃபாசோவும் மாலியும் களத்தில் இறங்கியுள்ளன. நைஜர் மீதான படையெடுப்பு தம்மீதான படையெடுப்பு என அவை முழக்கமிட்டுள்ளன. அவர்களுக்குத் துணையாக ரஸ்யா இருக்கிறது. ஆபிரிக்காவின் ரஸ்ய நடவடிக்கைகள் பெரும்பாலும் வாக்னர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டதென்ற செய்தியொன்றும் உண்டு.
பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற ரஸ்ய-ஆபிரிக்க மாநாட்டில் உரையாற்றிய ரஸ்ய அதிபர் புட்டின் “ஆபிரிக்கா மீதான நவகாலனித்துவ முயற்சிகளை முறியடிக்க ரஸ்யா எப்போதும் துணையாகவிருக்கும்” என முழங்கியிருக்கிறார். ஆபிரிக்கா ரஸ்யாவுக்குத் தருமதியான 23 பில்லியன் டாலர் கடனைத் திருப்பித் தரவேண்டியதில்லை எனவும் அதே வேளை 50,000 தொன் அரிசியைத் தான் ஆபிரிக்காவுக்கு இலவசமாக வழங்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். அங்கோலாவில் MPLA, தென்னாபிரிக்காவில் ANC, கினி-பிசோவில் PAIGC போன்ற விடுதலை அமைப்புக்களுக்கு சோவியத் குடியரசு ஆதரவு வழங்கியிருந்தது. இன்றைய இளைய தலைமுறை இவற்றை இரைமீட்டுப் பார்க்கிறது. அதன் புதிய வடிவம்தான் பேர்க்கினா ஃபாசோவின் ‘இளைய தளபதி’ ட்றவோர். இவர்களைப் போன்றவர்களினால் ஆபிரிக்காவின் முகம் முற்றாக மாறி வருகிறது. “நாங்கள் தான் புட்டின், எங்களில் புட்டின் இருக்கிறார். அவருக்கு எதிராக முதலாளித்துவம் செயற்படுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை’ என்று ஆபிரிக்காவின் இளந்தலைவர்கள் கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
1983-1987 காலப் பகுதியில் பேர்கினா ஃபாசோவின் புரட்சித் தலைவராக இருந்தவர் தோமஸ் சங்காரா. ‘ஆபிரிக்காவின் சேகுவேரா’ என அழைக்கப்பட்ட இவர் பிரஞ்சுப் படைகளை அங்கிருந்து அகற்றியிருந்தார். நாட்டின் வளங்களைத் தேசியமயப் படுத்தியதோடு பொதுவுடமைக் கொள்கைகளையும் நடைமுறப்படுத்தினார். நான்கே வருடங்களில் பிரஞ்சு ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதியொன்றில் அவர் கொல்லப்பட்டார்.
எதுவும் நடக்கலாம். ஆனாலும் ஆபிரிக்கா தொடர்ந்தும் இருண்டகண்டமாக இருக்க முடியாது.