Columnsசிவதாசன்

நேட்டோவின் விரிவாக்கம் – ரஷ்யாவின் அடுத்த நகர்வு என்ன?

சிவதாசன்

நேற்று மாட்றிட், ஸ்பெயினில் நடைபெற்று முடிந்த G7 நாடுகளின் மாநாட்டில் பின்லாந்துக்கும் சுவீடனுக்கும் நேட்டோவில் அங்கத்துவம் கொடுக்கும் தீர்மானம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் 30 பாராளுமன்றங்கள் தலையசைத்தால் இந் நாடுகள் நேட்டோ அமைப்பின் நிரந்தர அங்கத்து நாடுகளாகிவிடும். 1949 இல் 12 நாடுகளுடன் ஆரம்பித்த அமைப்பு 1991 இல் சோவியத் கூட்டரசின் உடைவிற்குப் பிறகு பல்கிப் பெருகி இப்போது பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுடன் 30 ஆகி நிற்கிறது. இதுவரை 755 மைல்கள் எல்லையை ரஷ்யாவுடன் கொண்டிருந்த நேட்டோ நாடுகள் பின்லாந்து இணைவுடன் அதை 830 மைல்களாக அதிகரிக்கின்றன.

பின்லாந்து 1917 இல் ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியபோது ‘சோவியத் குடியரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டோமென்று’ நட்பு ஒப்பந்தமொன்றை (Agreement of Friendship) எழுதியிருந்தது. ஆனால் சோவியத் குடியரசின் உடைவோடு அந்த ஒப்பந்தமும் உடைந்துபோக அது மேற்கு நாடுகளுடன் பல்வேறுபட்ட பாதுகாப்பு உடன்படிக்கைகளைச் செய்திருந்தது. ஆனால் நேட்டோவில் இணையாமல் அது நடுநிலைமையை வகித்து வந்தது. சுவீடன் 1800 களிலிருந்தே நடுநிலைமையை வகித்து வந்தது. ஆனால் யூக்கிரெய்ன் படையெடுப்புக்குப் பின்னர் இவ்விரண்டு நாடுகளின் மக்களும் நேட்டோவில் இணைய ஏகோபித்த விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் என்ற செய்திகள் பரவலாக வெளிவந்தன.

இருப்பினும் அவற்றை நேட்டோவில் அங்கத்தவர்களாக்க துருக்கி தொடர்ந்து மறுத்து வந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளில், துருக்கி பயங்கரவாதிகள் எனக் கருதும் குர்திஷ் போராளிகள் நிலைகொண்டிருப்பது துருக்கிக்குப் பிடிக்கவில்லை. சிரியப் போரின்போது மேற்கு நாடுகளின் எரிச்சலுக்கு மத்தியிலும் ரஷ்யாவுடன் துருக்கி நட்பை வளர்த்துக் கொண்டமை இரண்டாவது. இதற்குக் காரணம் சிரியாவில் நிலைகொண்டிருந்த மேற்கின் ஆதரவில் இயங்கிய குர்திஷ் போராளிகளை ‘அழிக்க’ ரஷ்யா செய்த உதவி. ஆனால் இப்போது துருக்கி ரஷ்யாவுக்கு எரிச்சலைக் கொடுத்தபடி மேற்கிடம் தாவிவிட்டது. இதற்குப் பரிசாக, மேற்கின் குர்திஷ் போராளிகளுக்கான ஆதரவு முற்றாகக் கைவிடப்படுமென மேற்கு பேரம் பேசியிருக்கலாம். துருக்கியின் இந்தக் கையுயர்த்துதலோடு பின்லாந்தும் சுவீடனும் சேட்டோவிற்குள் நுழைகின்றன.

யூக்கிரெய்ன் நேட்டோவில் இணைவதை நிறுத்துவதற்காகப் போரைத் தொடங்கிய புட்டின் மாட்றிட் முடிவுகள் தொடர்பாக இதுவரை சீறிப்பாயவில்லை. யூக்கிரெய்னைப் போலவே பின்லாந்தும், ரஷ்யாவைப் பொறுத்தவரை ஒரு ‘எல்லைக் கிராமம்’ தான். ஆனாலும் யூக்கிரெய்ன் விடயத்தில் எரிந்து விழுந்த புட்டின் பின்லாந்து விடயத்தில் அமைதி காப்பது விநோதமாக இருக்கிறது எனச் சிலர் கூறுகிறார்கள். “பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேர்வது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் நேட்டோவின் படைகள் என் அயலில் வந்தமர்ந்தால் அப்போது பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி வரும்” என ஆரம்பத்தில் புட்டின் கூறியிருந்தார். ஆனால் யூக்கிரெய்ன் விடயத்தில் மட்டும் “யூக்கிரெய்ன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது எனக்கொன்றும் பிரச்சினை இல்லை ஆனால் நேட்டோவில் மட்டும் இணையக் கூடாது” என எச்சரித்திருந்தார். காரணம் யூக்கிரெய்னின் பொருளாதார, கனிம, துறைமுக, கேந்திர வளங்கள் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல உயிர்வாழ்தலுக்கும் முக்கியம் என்பதால்.

யூக்கிரெய்ன் 44 மில்லியன் மக்களைக் கொண்டது. அவர்களில் 200,000 பேர் இராணுவத்தினர். யூக்கிரெய்னில் நேட்டோ நிலைகொண்டால் ரஷ்யாவின் எரிவாயுவை ஐரோப்பாவுக்குக் கொண்டுபோகும் குழாய்கள் மூடப்படலாம். அதே வேளை ஐரோப்பாவின் தானியவழங்கலிலும் யூக்கிரெய்னுக்குப் பாரிய பங்குண்டு. எனவே யூக்கிரய்னை எந்த வகையிலும் நேட்டோவுக்குத் தாரைவார்க்க ரஷ்யா தயாரில்லை.

இதுவரை நடைபெற்ற போரில் ரஷ்யா கணிசமான பிரதேசத்தைக் கைப்பற்றியது மட்டுமல்லாது யூக்கிரெய்னின் மனித வளத்தையும், பொருளாதார உற்பத்தித் திறனையும் ஏறத்தாள நிர்மூலமாக்கியிருக்கிறது. இதற்குள் அத்துமீறிப் புகுவதற்கு நேட்டோ அஞ்சுகிறது. அப்படியொரு முயற்சி அணுவாயுதப் போரில் முடியுமென்பதால் பின்லாந்து, சுவீடன் போன்ற கோடிப் பிரதேசங்களில் போய்க் குந்தி ஒரு உளவாயுதப் போரை நடத்தலாமென நேட்டோ நினைக்கிறது. ஆனால் அதன் விளைவு புட்டினின் ஆவேசத்தை மேலும் கிளப்பி யூக்கிரெய்ன் மீதான தாக்குதல்களை மேலும் உக்கிரப்படுத்தலாமெனவே நான் கருதுகிறேன்.

போர் ஆரம்பித்த நாளிலிருந்து மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தாக்குதல்களை முடுக்கிவிட்டுக்கொள்வதாகக் குரலெழுப்பி வருகின்றன. யூக்கிரெய்னுக்கு பல பில்லியன்கள் பெறுமதியான ஆயுதங்களை வாரி வழங்குவதாகவும் முழங்கி வருகின்றன. ஆனாலும் மேற்கு விதித்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அப்படி நடிபெற்றிருந்தால் புதிய பொருளாதாரத் தடைகளை அவ்வப்போது அறிவிக்கத் தேவையில்லை. ரஷ்யாவின் எண்ணை விலைக்கு உச்ச வரம்பை அறிவிக்க வேண்டுமென்பது இறுதியான மாட்றிட் கூட்டத்தின் முடிவு. மேற்கின் கையாலாகாத் தனம் இதில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

உலகின் எண்ணை உற்பத்தி நாடுகளில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. இப்போது மேற்கின் உற்பத்தி கச்சா எண்ணை (crude) பீப்பாயொன்று $112 போகிறது. ஆனால் ரஷ்யாவின் எண்ணையோ பீப்பாயொன்று $30 இற்கு வாங்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவுக்கு வருமானம் வராது என நினைக்கும் மேற்கு நாடுகள் தாம் மட்டும் அதீத இலாபத்தைச் சம்பாதிக்கின்றன. அதுமட்டுமல்லாது சில மேற்கு நாடுகள் இன்னமும் ரஷ்ய எண்ணையிலும் அதன் எரிவாயுவிலும் தங்கியிருக்கின்றன. முற்றான இறக்குமதித் தடையை அறிவித்தால் இந் நாடுகளில் மக்கள் பஞ்சத்தாலும், குளிராலும் இறந்துபோய்விடுவார்கள். ஆனால் அமெரிக்காவும் கனடாவும் இத் திடீர் எண்ணை விலை உயர்வால் குளிர் காய்கின்றன. கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் எண்ணை உற்பத்தியில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. எண்ணை விலைச் சரிவாலும், குழாய்ப் போக்குவரத்து தடங்கல்களாலும் அம் மாகாணம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் $20 பில்லியன் பற்றாக்குறையில் (deficit) இருந்தது. இந்த வருடம் அது $6 பில்லியன் மேலதிகமாக (surplus) வைத்திருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் இந்த எண்ணை விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றன.

இவ்விலை அதிகரிப்பால் கிடைக்கும் இலாபம் பொருளாதார ரீதியான வெற்றியென்று கருத முடியாது. அதனால் ஏற்படும் பண வீக்கம் இதர துறைகளில் சம்பாதித்த இலாபங்களை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். எனவே ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடை நீண்ட காலத்தில் மேற்கு நாடுகளுக்கு எதிரானதாகவே வந்து முடியும். விலை அதிகரிப்பு, பணவீக்கம், வட்டி அதிகரிப்பு போன்றனவற்றால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்படும் மக்கள் எதிர்ப்பைப் போல் ஐரோப்பிய நாடுகளிலும் தானியம், எண்ணை, எரிவாயு ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்க முடியாது மக்கள் தெருவுக்கு இறங்கும் நிலை ஏற்படும். இதனால் தான் ரஷ்யா தனது போரை மெதுவாக நகர்த்துகிறது என நம்பவேண்டியுள்ளது. தானிய ஏற்றுமதியில் ரஷ்யா முன்னணி நாடுகளில் ஒன்று. எண்ணை வளமும், எரிவாயு வளமும் அதனிடம் இருக்கிறது எனவே அதன் மக்கள் வீதிகளுக்கு இறங்கவேண்டிய அவசியமில்லை.

இக் காரணிகளால் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை மேற்குநாடுகளுக்குத்தான் அவசியம். நேட்டோ விரிவாக்கம் ஒரு உளவியல் ரீதியான தாக்கத்தை ரஷ்ய மக்களிடம் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கலாமே தவிர இராணுவ ரீதியான அச்சுறுத்தலாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது. மூலைக்குள் முடக்கப்படும் சந்தர்ப்பம் வரும்போது ரஷ்யா தன்னிடமுள்ள அணுவாயுதங்களைப் பாவித்தாலும் ஆச்சரியபப்டுவதற்கில்லை. சமீப காலங்களில் மிகவும் துல்லியமாகவும் அதி வேகமாகவும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுவாயுத ஏவுகணைகளை (ICBM) ரஷ்யா தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள். அத்தோடு ரஷ்யாவின் விண்கலங்கள் (stellites) இப்போது நாம் கதவுகளில் பொருத்தும் CCTV காமெராக்கள் போலச் செயற்பட்டு எதிரிகளின் அனைத்து நகர்வுகளையும் காட்டிக் கொடுக்கின்றன. எனவே நேட்டோவின் ஆயுதக் குவிப்புக்கள் அந்தந்த நாடுகளுக்கே ஆபத்தாக வந்து முடியும்.

நேட்டோவின் உருவாக்கத்தின்போது அதன் செயற்பாடுகளை வரைவு செய்த கட்டளைகளில் 5 ஆவது கட்டளை (Article 5) இப்படிச் சொல்கிறது: “எங்கள் அங்கத்தவர்களில் ஒருவர் மீது விழும் அடி எல்லோர் மீதும் விழும் அடியாகவே பார்க்கப்படும்”. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி படும் கதைதான். பின்லாந்தில் நேட்டோ நிலைகொண்டால் ரஷ்யா அதைத் தாக்குமென மேற்கு எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமென நான் நினைக்கவில்லை. நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அழுத்தமும் யூக்கிரெய்ன் மீதான தாக்குதலின் உக்கிரமமாகவே மாற இடமுண்டு. முன்னர் யூக்கிரெய்னின் பாதியோடு பசியாற இருந்த ரஷ்யாவை போலந்து போன்ற இதர நேட்டோ நாடுகளின் எல்லைகள் வரை இழுத்துவரும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதையும் மீறி ரஷ்யாவிற்குள் முதலில் விழும் நேட்டோவின் குண்டு அணுவைத் தலையில் சுமந்துகொண்டு திரும்பி வந்து ஜேர்மனியிலோ அல்லது இங்கிலாந்திலோ விழக் காலம் எடுக்காது. இப் போரில் நேட்டோ நாடுகள் இதுவரை புரிவது ஒரு proxy war. ஆனால் ரஷ்யா இனிமேல் புரியப்போவது வாழ்தலுக்கான போர். எனவே அது தன் வாழ்வைத் தீர்மானிக்க எப்படியான ஆயுதங்களைத் தூக்கவேண்டுமென்பதை நேட்டோ நாடுகளே தீர்மானிக்கப் போகின்றன.

யூக்கிரெய்ன் போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடுணடு. இரண்டு பேரின் ஆணவத்தின் வெளிப்பாட்டில் ஒரு முட்டாள் தன்நாட்டையும் மக்களையும் அழித்துக்கொள்வதே இப் போர். அணுவாயுதம் பாவிக்கப்பட்டோ அல்லது மக்கள் வீதிக்கு இறங்கியோ இப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது புதிய உலக ஒழுங்கு நடைமுறையில் இருக்கும்.

பி.கு. இவ்விடயத்தில் ஏன் ரஷ்ய சார்பை நான் எடுக்கிறேன் எனச் சில நண்பர்கள் துளைத்து எடுக்கிறார்கள். நான் ஒரு இடதுசாரியல்ல. சோவியத் யூனியன் உடைவின்போது எல்லோரைப் போலவே நானும் மகிழ்ந்தேன். 1991 இல் கோர்பச்சேவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு – நேட்டோ என்ற அமைப்பு கலைக்கப்பட்டுவிடும்; கிழக்கு ஜேர்மனியைத் தாண்டி நேட்டோவின் நகர்வு இருக்காது. விளைவு 12 நாடுகளோடு இருந்த நேட்டோ 30 இல் வந்து நிற்கிறது. கோர்பர்ச்சேவை ஏமாற்றியது மட்டுமல்லாது இவ்விரண்டு வாக்குறுதிகளையும் மேற்குநாடுகள் தூக்கியெறிந்துவிட்டன. ஏமாந்துபோன ரஷ்யா நேட்டோவில் அங்கத்துவம் கேட்டது ஆனால் அது வழங்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் கேட்டது அதுவும் வழங்கப்படவில்லை. ‘தேவர்கள்’ உருவாக்கிய ‘அசுரனே’ புட்டின். முறைப்படி தவம் செய்து பெற்ற வரங்களை இனிக் கடவுள் பறிக்க முடியாது. அவன் அழித்த பிறகுதான் அவனை அழிக்கலாம். ‘தேவர்கள்’ வேண்டுமானால் இந்து சமுத்திரத்தைக் ‘கடையலாம்’. விஷம் சீனாவாக இருந்தால் கொம்பனி பொறுப்பல்ல.