நூல் அறிமுகம்: தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப் பார்வை
அகத்தியன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு ஆய்வு நூலொன்றை வாசிக்க நேர்ந்தது. முனைவர் பால சிவகடாட்சத்தினால் எழுதப்பட்ட தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப் பார்வை என்ற இந்த நூல் தொன்று தொட்டுத் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் நலம் பேணும் முறைகளை மீள் வாசிப்புக்குட்படுத்துகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைய மேற்கத்தைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கெல்லாம் முன்னோடிகளாக இந்திய மருத்துவ முறைகள் இருந்துள்ளன என்பதே.
முனைவர் பால சிவகடாட்சம் கனடாவில் வாழ்பவர். ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் அவரது முன்னோர்கள் ஈடுபட்டு வந்ததன் காரணமாக அதன் சாயல் நிரம்பவே அவர்மீது படிந்திருக்கிறது. தற்போதுள்ள மருத்துவ முறைகள் பெரும்பாலும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவையாதலால் அவற்றைப் புரிந்துகொள்வதற்கு ஓரளவு உயிரியல் விஞ்ஞானம் இருந்தால் போதுமானது. இம் மருத்துவமுறைகளின் பிரயோகங்களைத் தொழில்நுட்பம் இலகுவாக்குகிறது என்றாலும் மருத்துவர்கள் அத் தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் தற்போதைய மருத்துவக் கல்வி கவனித்துக் கொள்கிறது. ஆனால் பண்டைய மருத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒருவருக்கு உயிரியல் பற்றிய அறிவு மட்டும் போதாது. அவர் பெரும்பாலும் ஒரு பல்துறை வித்தகராக இருப்பது அவசியம். அந்த வகையில் முனைவர் பால சிவகடாட்சம் நமது பண்டைய மருத்துவ முறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பகுத்துணர்த்தவல்ல கல்வியைப் பெற்றவர். அவரது வடமொழிப் புலமை, தமிழ் இலக்கியப் புலமை, ஆங்கிலப் புலமை என்று பல்வகைத் திறமைகள் கைகூடியிருப்பது இந்நுலைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

இந் நூலில் காணப்படும் பல முக்கிய தகவல்களில் சில…
ஆதுலர் சாலை
சோழராட்சிக் காலத்தில் அரச உதவி பெற்று இயங்கிவந்த ‘ஆதுலர் சாலை’ எனப்படும் மருத்துவமனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு செங்கற்பட்டு திருமுக்கூடால் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் சுவர்களில் இடம்பெற்றுள்ள சாசனம் ஒன்று பெரிதும் உதவுகின்றது. வீரராஜேந்திர சோழனின் (கி.பி.1063 -1069) ஐந்தாம் ஆட்சியாண்டுக்கு உரிய இச்சாசனத்தில் ‘வீரசோழன் ஆதுலர்சாலை’ என்னும் பெயருடன் இயங்கிவந்த மருத்துவமனை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
பதினைந்து படுக்கைகளே கொண்ட இம் மருத்துவமனையின் முதன்மை அதிகாரியாக (Chief Medical Officer) இருந்தவர் ‘வைத்தியம் சொல்வோன்’ என்று அழைக்கப்பெற்றார். இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரி ‘பரிஹாரம் பண்ணுவோன்’ (தற்கால அப்போதிக்கரி?) என அழைக்கப்பட்டார். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ‘சல்லியக் கிரியை பண்ணுவோன்’ என அறியப்படும் அறுவைச் சிகிச்சை வைத்தியராவார் (surgeon). இவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளங்களிலும் வேறுபாடுகள் இருந்தன. இதை நோக்குமிடத்து அந்தக் காலத்திலும், அறுவைசிகிச்சை வைத்தியருக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படவில்லை என்பது புலனாகிறது.
அறுவைச் சிகிச்சயின்போது இரத்தம், சீழ் போன்ற ‘அருவருக்கத்தக்க பதார்த்தங்களைக் கையாள பிராமண குலத்தைச் சேர்ந்த ‘வைத்தியம் சொல்வோர்’ மறுத்த காரணத்தால் அறுவை வைத்திய ‘அம்பஸ்தர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றொரு கருத்தும் உண்டு. இந்த ‘அம்பஸ்த’ வகுப்பினர் பிராமணரும் சத்திரியரும் கலந்த ஒரு சாதியாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. இவர்கள் சவரத் தொழில் புரிந்தவர்கள் அல்லர். அதே வேளை, ‘நாவிதர்’ என அறியப்படும் சவரத் தொழிலாளி அறுவை வைத்தியருக்கு உதவியாளராக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
சோழருக்குப் பின்னர் வந்த பாண்டியராட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களின்படி பிராமணரல்லாதோரும் பொது மருத்துவத்தில் ஈடுபட்டனரெனவும் அறுவை சிகிச்சைக்கு உதவியாளராக இருந்த சவரத் தொழிலாளரிடம் அறுவை சிகிச்சை முற்றுமுழுதாக ஒப்படைக்கப்பட்டது எனவும் அறிய முடிகிறது.
பரராசசேகரம், செகராசசேகரம்..
இதே வேளை, பண்டைய தமிழ் மருத்துவத் துறைக்கு யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர்கள் ஆற்றிய பங்குகள் பற்றி நிறைய தகவல்களை இந் நூல் தருகிறது. சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், வரலாறு, மருத்துவம், சோதிடம், தாவரவியல், இயற்பியல், வேதியியல் எனப் பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒருவராலேயே இப்படியான் நூலொன்றை, அதுவும் எளிமையான தமிழில், சாமானியனொருவனுக்குப் புரியும் வகையில், எழுத முடியும். அந்த வகையில் முனைவர் பால சிவகடாட்சம் தமிழுலகுக்கு அரியதொரு நூலைத் தந்திருக்கிறார்.
நூலின் தலைப்பு ‘தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப்பார்வை’ என இருந்தாலும், பரந்த இந்தியாவில் வட மொழியில் இயற்றப்பட்ட ஆயுர்வேத மருத்துவ மரபு பற்றியும், பின்நாளில் வந்த சித்தர்களின் தமிழ்க் கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய சித்த மருத்துவ மரபு பற்றியும் இதனிடையில் சீன அரசர்கள், வைத்தியர்கள் மற்றும் யாத்திரீகர்களது ஈடுபாட்டினால் சீன மருத்துவ மரபின் கூறுகள் பற்றியும் நூலாசிரியர் நிறைய ஆய்வுகளைச் செய்து கட்டுரைகளை ஆக்கியிருக்கிறார்.
மேற்கத்திய மரபின்படி, சமானியருக்குப் புரியாத வகையில் மருத்துவத் தகவல்களையும், சட்ட, நீதி பரிபாலனம் பற்றிய தகவல்களையும் சங்கேத மொழிகளில் (கிரேக்கம், லத்தின்) தருவது வழக்கம். இந்தியாவிலும் இப்படியான தகவல்களைத் தம்மிடையே மட்டும் வைத்திருக்க அல்லது சாமானியனால் அவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டாதிருக்க, அவற்றைச் சங்கேத மொழிகளில் பதிவு செய்து வைத்திருக்கலாம். இங்கே இம் மொழி சமஸ்கிருதமாகவும் அதைக் கற்றுத் துறைபோவது அரசர்களால் பிராமணருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒன்றாகவும் (intelectual property) இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. தமிழ்ச் சித்தர்கள் மரபில்கூட வாகடங்கள் எனப்படும் மருத்துவத் தகவல்கள் சங்கேத மொழியிலேயே பரிமாறப்பட்டன. நூலாசிரியர் கூறுமாப்போல், இரசவாதம் எனப்படும் ‘பாதரசத்தின்’ (Mercury) பாவனை தமிழ் நாட்டில் மட்டுமே இருந்ததெனவும் ஆயுர்வேதத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை எனவும் அறியப்படுகிறது. அப்படியாயின் அளவுக்கு மீறினால் நஞ்சாகிப் போகும் பாதரசத்தின் பாவனையைச் சாமானியன் கையாள்வது தவிர்க்கப்படவேண்டும். எனவே சில முக்கியமான தகவல்களைச் சித்தர்களும் ஆயுர்வேதியர்களும் சாமானியர்கள் அறிந்துகொள்வதை விரும்பியிருக்கவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
இந் நூல் தமிழர் மருத்தவ மரபின் பல கூறுகளைச் செய்யுள்களின் உதவியுடன் விளக்குகிறது. பல பதங்களுக்கு அதிசயமூட்டும் தமிழ்ச் சொற்களை ஆசிரியர் மீளறிமுகம் செய்கின்றார். பல வட மொழிச் சொற்கள் புதிய அர்த்தங்களோடு புரிய வைக்கப்படுகின்றது. மருத்துவம், இலக்கியம், வரலாறு மீது பற்றுள்ளவர்களுக்கு வாசிப்பதற்குச் சிறந்த நூல் இது.
இந் நூலை, Aazhi Publishers, 5 – K.K.Salai, Kaveri Rangan Nagar, Saligramam Chennai – 600 093 என்ற விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம். கனடாவில் முனைவர் பாலகடாட்சத்துசடன் sivakad@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.