Art & LiteratureBooksVideos

நூலறிமுகம்: பனி விழும் பனை வனம்

எழுத்தாளர் ‘காலம்’ செல்வத்தின் நான்காவது நூலான பனி விழும் பனை வனம் என்னும் தன் வரலாற்றுப் புனைவு நூல் எதிர்வரும் மே 14, 2023 அன்று ஸ்காபரோவில் மார்க்கம் / எக்லிங்டன் சந்திப்பிலுள்ள ஸ்காபரோ விலேஜ் தியேட்டரில் மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படவிருக்கிறது.

‘காலம்’ என்ற இலக்கிய சஞ்சிகையைக் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கனடாவிலிருந்து வெளியிட்டுவரும் செல்வம் அருளானந்தத்தின் நான்காவது நூல் இது. 1986 இல் பாரிசிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்பான கட்டிடக் காட்டுக்குள் இவரது முதலாவது நூலாகும். இதன் பின்னர் சொற்களில் சுழலும் உலகம், எழுதித் தீராப் பக்கங்கள் ஆகிய தன்வரலாற்றுப் புனைவுகள் இவரது இதர நூல்களாகும்.

70 களின் காலகட்டத்து யாழ்ப்பாணத்தைப் படம்பிடித்துக்காட்டும் பனி விழும் பனை வனம் என்ற இந்த நூல் அக் காலத்து உறவாடல், உரையாடல்களின் சம்பவ விபரிப்புகளினூடு பகிடி, நையாண்டி, அரசியல், சமூகப் பிறழ்வுகள், சோகம் போன்றவற்றைத் தொட்டுக்காட்டிச் செல்லும் சரட்டைத் தழுவி நகர்கின்றது. யாழ்ப்பாணத்தின் குறுஞ்சமூகங்களிடையே காணப்படும் கதையாடல்கள், சொற்பிரயோகங்கள், இளையோரின் சில்மிசங்கள் போன்றவற்றுக்குப் பரிச்சயமானோருக்கு இவரது மொழி ரசிக்கத் தோன்றும். 70 களுக்குப் பின்னான தலைமுறையினருக்கும், தமிழ்நாட்டு வாசகர்களுக்கும் முதலாவது வாசிப்பு அன்னியமாகத் தோற்றமளித்தாலும் ஒரு முழுமையான வாசிப்பின் பின்னர் அவரது சொல்லாடல்களே இயற்கையான பதவுரைகளையும் தந்துவிடுவனமாக உணரப்படலாம். புரியாதோருக்கு தேடல் அவசியப்படலாம் ஆனால் அதுவே யாழ்ப்பாணத்தின் கலாச்சார இடுக்கு முடுக்குகளினூடு வாசகர்களை அழைத்துச்சென்று பல புதிர்களையும் விடுவிக்கும்.

இந்நூல் பற்றிய அறிமுக உரையாடலை இணைக்கப்பட்ட காணொளியில் கேட்கலாம்.