Spread the love

டெங்கு நோய் 77% த்தால் குறைப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசிய நகரமொன்றில் பரிசோதனை முயற்சியொன்றைச் செய்திருந்தார்கள். அதில் நுளம்புகளைப் பிடித்து அவற்றில் ஒரு வகை பக்டீரியாக் கிருமியைத் தொற்றவைத்து அந்நகரத்தின் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் விட்டிருந்தார்கள். புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அந் நகரத்தின் டெங்கு நோயின் புள்ளிவிபரம் எடுக்கப்பட்ட போது நோயின் தொற்று 77% த்தால் குறைவடைந்திருந்ததை அதிகாரிகள் அவதானித்தார்கள்.

இப் பரிசோதனையின் வெற்றியினால் மகிழ்ச்சியடைந்த விஞ்ஞானிகள், டெங்கு நோயை மட்டுமல்ல நுளம்பினால் பரம்பலடையும் இதர நோய்களையும் இந்த முறையில் கட்டுப்படுத்த முடியுமா என இப்போது ஆராய்கிறார்கள்.

எப்படி?

வொல்பாச்சியா (Wolbachia), பூச்சியினங்களில் இயற்கையாக வாழும் பக்டீரியா. ஆனால் டெங்கு, சிக்குன்குன்யா, ஜீகா, மஞ்சள் காய்ச்சல் ஆகிய நோய்களைப் பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற நுளம்பினத்தில் இப் பக்டீரியா வளர்வதில்லை. 2008 இல் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட உலக நுளம்புத் திட்டம் (World Mosquito Program (WMP)) என்ற ஆராய்ச்சிக் குழுவொன்று ஒரு விடயத்தைக் கண்டுபிடித்தது. அதாவது ஏடிஸ் ஏஜிப்டி என்ற நுளம்பினங்களில் வொல்பாச்சியா என்ற பக்டீரியா வாழும்போது அவை டெங் வைரஸைப் பரப்புவதில்லை. காரணம் வொல்பாச்சியா பக்டீரியா வாழும் இடத்தில் டெங் வைரஸ் தன்னை இனப்பெருக்கம் செய்யாது.

பரப்புவது எப்படி?

இந்த வொல்பாச்சியா பக்டீரியாவை நுளம்புகளில் புகுத்தி வெவ்வேறு இடங்களில் விடும்போது அவ்விடங்களிலுள்ள உள்ளூர் நுளம்புகளோடு கலந்து இனப்பெருக்கம் செய்யும்போது புதிதாகப் பிறக்கும் நுளம்புகள் இந்த பக்டீரியாவையும் சேர்த்தே பரம்பலடைகின்றன. இப்படியான நுளம்புகள் அந்த இடத்தில் அதிகம் வாழும் போது டெங்கு போன்ற வைரஸ்கள் தம்மை இனப்பஎருக்கம் செய்ய முடியாமல் போய்விடுகிறது.



இந்தோனேசியப் பரிசோதனை

ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரை 24 பிரிவுகளாகப் பிரித்தார்கள். இவற்றில் 12 பிரிவுகளில் வொல்பாச்சியாவைக் காவும் நுளம்புகளை, விடுவித்தார்கள். 27 மாதங்களின் பின்னர் அங்குள்ள ஏறத்தாள அத்தனை நுளம்புகளும் வொல்பாச்சியா பக்டீரியாவைக் காவியது மட்டுமல்லாது இப் பக்டீரியாக் காவி நுளம்புகளை விடுவிக்காத இடங்களிலுள்ள மனிதர்களோடு ஒப்பிடுகையில், டெங் வைரஸின் தொற்றும் 77 வீதத்தால் குறைந்திருந்தது.

உலக நுளம்புத் திட்டம் இப் பரிசோதனைகளை முதலில் அவுஸ்திரேலியாவிலும், பின்னர் 11 வேறு நாடுகளிலும் மேற்கொண்டது. இருப்பினும் இந்தோனேசியப் பரிசோதனைகளே முதலி செய்யப்பட்ட எழுந்தமானமான (randomized test) பரிசோதனை. இந்தோனேசியாவின் தஹிஜாஅறக்கட்டளை மற்றும் கட்ஜா மாட பல்கலைக்கழகத்துடனும் இணைந்து உலக நுளம்புத் திட்டம் இப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் 3.12 இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

Related:  கோவிட்-19 தடுப்பு மருந்து | 114 மில்லியன் அளவுகள் மருந்துகளைக் கனடா வாங்குகிறது

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி, வருடமொன்றுக்கு 39 கோடி பேர்கள் டெங் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றில் 9.6 கோடியே நோயறிகுறிகளைக் காட்டுகிறார்கள்.

Print Friendly, PDF & Email
நுளம்பைக் கொண்டு டெங்கு நோயை ஒழிக்கும் விஞ்ஞானிகள்

நுளம்பைக் கொண்டு டெங்கு நோயை ஒழிக்கும் விஞ்ஞானிகள்