நீதியை நிலைநாட்டுவதற்காகவே நான் மக்களுக்குச் சேவை செய்கிறேன்: வடமாகாண ஆளுனர்
“நீதியை நிலைநட்டுவதற்காகவே நான் மக்களுக்குச் சேவை செய்கிறேன். காலம் அதைத் தீர்மானித்திருக்கிறது”
வடமாகாண ஆளுனர் டாக்டர் சுரேன் ராகவன்

வலி-வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் 150 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு, சமீபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறக்கப்பட்டுப் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இத் திறப்பவிழா வைபவத்தில் வட மாகாண ஆளுனர் உரையாற்றினார்.
“வடமாகாண ஆளுனராக என்னைத் தெரிவு செய்தமைக்கு மாட்சிமை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவுக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் ஒரு அரசியல்வாதியோ அல்லது அரசாங்க நிர்வாகியோ அல்ல. நான் ஒரு கல்விப் பின்னணியிலிருந்து வந்தவன். ஒரு நாள், சிலர் சொல்வதைப் போல மார்கழி மட்டில், நான் மீண்டும் என் கல்வித் தொழிலுக்குப் போய்விடுவேன். அதற்கிடையில் நான் எடுத்துக்கொண்ட கடமையையைச் செய்து முடிக்க வேண்டும், அது இந்த மாகாணத்தின் மக்களுக்குச் சேவை செய்வது”
” சிறீலங்கா இந்து சமுத்திரத்திலுள்ள இரண்டாவது பெரிய தீவு. முதலாவது, மடகாஸ்கார். அது சிறீலங்காவைவிட ஒன்பது மடங்கு பெரியது. இந் நாட்டில் கடற் தொழிலைக் கட்டியெழுப்ப நாம் தவறிவிட்டோம். கரை மீன்பிடியே பெரும்பாலானது. ஆழ்கடல் மீன்பிடி இருப்பினும் சர்வதேச மீன்பிடி பற்றி நாம் சிந்திக்கவில்லை. 1982 இல் நாட்டின் மீன்பிடி வருமானம் வட-கிழக்கில், குறிப்பாக வடமாகாணத்தில் இருந்தே ஈட்டப்பட்டது”.
” துறைமுகங்களைக் கட்டுவதன் மூலம் வடக்கும் தெற்கும் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நிலை ஏற்படும். இவ் விடயத்தில் முயற்சியையும் தலைமத்துவத்தையும் எடுத்ததற்காக நான் பிரதமரைப் பாராட்டுகின்றேன். வட மாகாணத்திலுள்ள 1.3 மில்லியன் மக்கள் தென் மாகாணத்திலுள்ள 19 மில்லியன் மக்களுக்கான உற்பத்தியாளர்களாகவும் வழங்குனர்களாகவும் மாறலாம். சார்புடைய பொருளாதாரமாக அது இருக்கும். அப்படியான இடைச்-சார்புடைய பொருளாதாரம் சாத்தியமாகாது எனச் சில புத்திமான்கள் கூறலாம். சிறீலங்கா சிறிய நாடாயிருந்தாலும் அதன் உற்பத்திகளுக்குப் பெரிய சந்தையைக் கொண்டது”.
“இதற்கடுத்தபடியாக நாம் செய்ய வேண்டியது நீர் நிர்வாகம். சிறீலங்காவிற்கு 2500 வருட தொன்மையான எழுதப்பட்ட வரலாறு இருக்கிறது. பல விடயங்களைச் சாதிப்பதற்கான சாமர்த்தியம் எங்களிடம் இருந்திருக்கிறது. ஒன்று மழைத் தண்ணீர் சேகரிப்பு. இரண்டாவது, விலங்குப் புரதத்தை எமக்குத் தரும் மீன்பிடி”.
” கடந்த 15 வருடங்களாக, புத்தளத்திலிருந்து பொத்துவில் வரை 10 மீன்்பிடித் துறைமுகங்கள் மீள்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் வடக்கில் எதுவும் செய்யப்படவில்லை. பேசாலையிலிருந்து தொண்டமானாறு வரை நாம் ஐந்து மீன்பிடித் துறைமுகங்களை அடையாலம் கண்டுள்ளோம். அது ஒரு படி. அதற்காக நான் பிரதமருக்கு நன்றி கூறுகிறேன். அடுத்தபடியாக, பருத்தித்துறைத் துறைமுகம் மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும், அது முடிந்தால் அதுவே நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக இருக்கும்”.
“மன்னார் மாதோட்டம் சிறீலங்காவின் வரலாற்றில் முக்கிய துறைமுகமாகப் பார்க்கப்படுமொன்று. அது பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. இப்போதும் அது ஒரு பின்தங்கிய பிரதேசமாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.”
” ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் ஒருவர் உற்பத்தி செய்ய, ஒருவர் நுகர்வதும், ஒருவர் தீர்மானிக்க, ஒருவர் நடைமுறைப்படுத்துவதும் என்ற பங்கேற்கும் ஜனநாயகமே எங்களை முன்நோக்கி நகர வைக்கும்” என்று குறிப்பிட்டார் ஆளுனர்.