Sri Lanka

நீதிமன்ற உத்தரவையும் மீறி மஹிந்த ராஜபக்ச, தேசபந்து தென்னக்கூன் ஆகியோர் கடவுச்சீட்டுகளை இன்னமும் கையளிக்கவில்லை


நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்து மஹிந்த ராஜபக்ச மற்றும் தேசபந்து தென்னக்கூன் உள்ளிட்ட பலர் இன்னும் தமது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்திடம் கையளிக்கவில்லை என சட்டமா அதிபர் இன்று தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்ரன் ஃபெர்ணாண்டோ, சனத் நிஷந்தா, பவித்திரா வன்னியாராய்ச்சி, சஞ்சீவ எதிரிமன்ன, றோஹித அபயகுணவர்த்தன, சீ.பீ.ரத்னாயக்கா, சம்பத் அத்துக்கொறல, காஞ்சனா ஜயரட்ண, தேசபந்து தென்னக்கூன், மஹிந்த கஹண்டகம, ரேணுகா பெரேரா, அமிதா அபய்விக்கிரம, டிலித் ஃபெர்ணாண்டோ மற்றும் புஷ்பலால் ஆகியோர் தமது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்திடம் கையளிக்கவேண்டுமென மே 12 அன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் திலினா கமகே உத்தரவிட்டிருந்தார்.

மே 09 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மாஜிஸ்திரேட் திலினா கமகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது மஹிந்த ராஜபக்ச, தேசபந்து தென்னக்கூன் உள்ளிட்ட பலர் இன்னும் அவர்களது கடவுச்சீட்டுகளைக் கையளிக்கவில்லை என குற்றவிசாரணைப் பிரிவின் சார்பாக, மேலதிக சட்டமா அதிபர் அயீஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனாலும் பவித்திரா வன்னியாராய்ச்சி, நாமல் ராஜபக்ச, றோஹித அபயகுணவர்த்தன, காஞ்சனா ஜயரட்ண ஆகியோர் தமது கடவுச் சீட்டுக்களைக் கையளித்துள்ளனரெனவும், தனது கடவுச்சீட்டு வீட்டுடன் சேர்ந்து எரிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் ஃபெர்ணாண்டோ தெரிவித்ததாகவும் ஜினசேன தெரிவித்துள்ளார்.

இதே வேளை சட்டமா அதிபரின் கட்டளையின்படி மேற்கு மாகாண மூத்த டி.ஐ.ஜி. தேசபந்து தென்னக்கூனை ஏன் இன்னும் இடமாற்றம் செய்யவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி பொலிஸ் மா அதிபருக்கு மாஜிஸ்திரேட் திலினா கமகே உத்தரவிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக தேசபந்து தென்னக்கூனை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி மே 23 அன்று சட்டமா அதிபர் பணித்திருந்தார்.