நீதிமன்றத் தடையையும் மீறிக் கொழும்பில் கண்டனப் பேரணி
சபிக்கப்பட்ட அரசுக்கெதிராகத் திரண்ட மக்கள் சக்தி
நீதிமன்றம் விதித்த தடை, பொலிஸ் த்டுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் மீறி ஆயிரக் கணக்கானோர், அரசுக்கெதிராக, இன்று தலைநகர் கொழும்பில் கண்டனப் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.
உணவு, எரிபொருள் மற்றும் முக்கியாமான பொருட்கள் பற்றாக்குறை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை எதிர்த்து “சபிக்கப்பட்ட அரசுக்கெதிரான மக்கள் சக்தி’ என்ற சுலோகத்தின் கீழ் எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவினால் இவ்வூர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

புறநகர்ப் பகுதிகளிலிருந்து இவ்வூர்வலத்துக்காக வாகனங்களில் வந்த பல்லாயிரக்கணக்கானோரை பொலிசார் தடுத்து திருப்பி அனுப்பியிருந்தபோதும் ஊர்வலம் எவ்வித தடையுமின்றிக் கொழும்பில் நடைபெற்றது. கோவிட் தொற்றைக் காரணம் காட்டி அரசு ஏற்கெனவே பெறப்பட்டிருந்த இவ்வூர்வலத்துக்கான அனுமதியை மீளப்பெற்றிருந்தது.
கண்டனப்பேரணியைத் தொடர்ந்து காலிமுகத் திடலில் அமைந்திருக்கும் வட்டத் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேசும்போது, பிரேமதாசாக்களையும், ராஜபக்சக்களையும், சேனநாயக்காக்களையும் கொண்டிராத ஊழலற்ற, செயற்திறன் மிக்க அரசாங்கத்தை உருவாக்கி தனது கட்சி நாட்டை மீளவும் கட்டியெழுப்பும் என உறுதியளித்தார். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு புதிய நோக்குடன், புதிய காலமொன்றை உருவாக்க ஒத்துழைக்கும்படி அவர் அறைகூவல் விடுத்தார்.
“இன்று வரிசையில் நிற்கும் காலம் ஆரம்பித்திருக்கிறது. எரிபொருளுக்கு வரிசை, எண்ணைக்கு வரிசை, பால் மாவுக்கு வரிசை, அரிசி, சீனி எல்லாவற்றிற்கும் வரிசை. இந்த நாட்டுக்கு அரிசியைத் தந்த தந்தை டட்லி சேனாநாயக்கா. 1967 இல் அவர் உருவாக்கி 1969 இல் திறந்துவைத்த எண்ணை வடிக்கும் நிலையம், டாலர் இல்லாமையால், ஐம்பது வருடங்களில் முதல் தடவையாக மூடப்பட்டிருக்கிறது”
“மசகு எண்ணை வாங்குவதற்கு பணம் இல்லாத அரசு வடித எண்ணையை வாங்குவதற்குப் பணத்தை வைத்திருக்கிறது. ஊழலாட்சியினால் மக்களின் வாழ்வு நசுக்கப்பட்டிருக்கும்போது தரகுப் பணம் பெறுவதற்காகச் செய்யப்படும் நடவடிக்கையே இது. அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்கும்போது பொலிஸ் நடவடிக்கைகளின் உதவியுடன் மக்களிடமிருந்து ஊழல் வழிகளில் மேலும் பணத்தைப் பிழிந்து எடுக்கிறது இந்த அரசாங்கம்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.