Sri Lanka

நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகல்: சிங்கள-பெளத்த மேலாதிக்கத்திற்கு எதிராக யாழ்-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்

சிங்கள-பெளத்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், விடுக்கப்பட்ட மிரட்டல்களுக்கு அஞ்சியே நீதிபதி சரவணராஜா பதவி விலக வேண்டி ஏற்பட்டது

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

குருந்தூர்மலை புத்த கோவில் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் தாக்கங்கள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

குருந்தூர்மலையிலிருந்த சைவர்களின் கோவிலை இடித்துவிட்டு அதில் புத்த விகாரை ஒன்றை சிங்கள-பெளத்த தீவிரவாதிகள் எழுப்பி வருகின்ற நிலையில் அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் மேற்கொண்ட முறையீட்டை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா புத்த விகாரை நிர்மாணத்தை உடனடியாக நிறுத்தும்படியும் அங்கு ஏற்கெனவே வழிபாடுகளைச் செய்துவந்த சைவர்கள் தொடர்ந்தும் தமது வழிபாடுகளைச் செய்ய அனுமதிக்கும்படியும் தீர்ப்பளித்திருந்தார். எனினும் அரச உதவியுடன் சிங்கள-பெளத்த தீவிரவாதிகள் அதை உதாசீனம் செய்ததுடன் நீதிபதி சரவணராஜாவைப் பதவியிலிருந்து நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். இந்நடவடிக்கைகளின் பின்னால் இலங்கை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பெளத்த பீடாதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருந்துவருகிறார்கள். சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா நீதிபதி சற்குணராஜாவை விமர்சித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

இருப்பினும் தனது கடமைகளை நேர்மையாக ஆற்றுபவர் எனப் பெயர் பெற்ற நீதிபதி சற்குணராஜா மேற்படி அச்சுறுத்தல்களுக்கு துணிச்சலாக முகம் கொடுத்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்த்து தீர்ப்புகளை வழங்கியிருந்தார்.

சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரட்ணம் மிரட்டல்?

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ம் திகதி (2023) அன்று இலங்கையின் சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரட்ணத்தின் பணிப்பின் பேரில் நீதிபதி சரவணராஜா சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் எனவும் அங்கு நீதிபதிக்கு புத்தி கூறும் பாசாங்குடன் குருந்தூர் மலை விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றும்படி கேட்டிருந்தார் எனவும் இதன் பின்னரே நீதிபதி சரவணராஜா தனது அனைத்து பதவிகளையும் துறந்துவிட்டு உயிர் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டாரெனவும் கூறப்படுகிறது.

நீதிபதி சரவணராஜாவின் இத் திடீர் பதவி விலகல் தமிழ் மக்களை மட்டுமல்லாது இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) உட்பட நீதித்துறையைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அது நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் “நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய நீதியைப் பரிபாலித்த ஒருவருக்கு இப்படியான நிலை ஏற்படுமானால் நாட்டிலுள்ள இதர இன மக்கள் எப்படியான இன்னல்களை எதிர்கொள்வார்கள்” எனக் கேட்டுள்ளது.

“சிங்கள-பெளத்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், விடுக்கப்பட்ட மிரட்டல்களுக்கு அஞ்சியே நீதிபதி சரவணராஜா பதவி விலக வேண்டி ஏற்பட்டது. ஜனநாயகத்தை மதிப்பவர்கள் மத்தியில் இது பாரிய அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுயாதீனமான நீதிபரிபாலனம் எந்தளவு மோசமாகிவிட்டது என்பதனையே இது காட்டுகிறது” என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.