“நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமாகப் போராடியவர் மங்கள” – சமாந்தா பவர்


“இலங்கையை உலகத்துக்குத் திறந்து விடுவதற்கும், அங்கு நீதியும், இனங்களுக்கிடையேயான நல்லிணக்கமும் பரிபாலிக்கப்படுவதற்குமென அயராது போராடியவர் மறைந்த மங்கள சமரவீரா” என அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி ஆணையத்தின் (USAID) நிர்வாகியும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான சாமந்தா பவர் தனது இரங்கலுரையில் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (24) காலமானார். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன்காரணமாகவே மரணம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டதும் நான் மிகவும் மனமுடைந்து போனேன். அவர் ஒரு சிறந்த நாட்டுப் பற்றாளர், தேசப் பெருமகன் (Statesman), ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் முன்னெடுக்கப் போராடியவர், ஒரு விலைமதிப்பற்ற நண்பர். அவரது குடும்பத்தினருக்கும், இலங்கைவாழ் மக்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்” என பவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கவும், பொறுப்புக்கூறலை துரிதப்படுத்தவுமென ‘அன்னையர் முன்னணி’ என்னும் அமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் மங்கள செயற்பட்டிருந்தார் எனவும், நல்லாட்சி அரசில் அவர் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது காணாமற் போனோருக்கான மற்றும் நட்டஈடுவழங்கலுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

மங்கள சமரவீரவின் உடல் இன்று (25) தகனம் செய்யப்பட்டது. கோவிட் வரையறைகளின் பிரகாரம் அவரது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்தார்கள்.