நீண்ட காலமாக விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளெனச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவதன் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதன் மூலமோ விரைவில் விடுதலை செய்யவேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பெரும் எண்ணிக்கையான விடுதலைப் புலி பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்களில் பலர் எவ்வித குற்றமும் செய்யாதவர்கள். அவர்களில் விடுதலைப் புலி பயங்கரவாதிகள் ஏராளம். உதாரணமாக, தடுப்புக் காவலில் உள்ளவர் ஒருவர் கொலைக்குற்றத்துடன் சம்பந்தப்பட்டவரென்ற சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் கொலை செய்யப்பட்டவரின் வீட்டிலுள்ள மரம் ஒன்றை வெட்டியது மட்டுமே. கொலையைச் செய்தவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுதலையாகி விட்டார்.
இவர்களில் 12,500 பேருக்கு நாம் புனர்வாழ்வு கொடுத்து 3,500 பேரை ஊர் காவல் படையில் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களது வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலமாக விரைவாக விசாரித்து கருணை நீதி வழங்க வேண்டும் அல்லது ஏதாவது வகையில் அவர்களுக்கு புனர்வாழ்வழித்து விடுதலை செய்யவேண்டுமென நான் சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது கேட்டுக்கொண்டார். (லங்கா நியூஸ் வெப்)