நீண்டகாலத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றமில்லை – மனித உரிமைகள் சபையில் இந்தியா அங்கலாய்ப்பு
தனது பாதையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இலங்கைக்கு உண்டு என்பதை உறுப்பினர்கள் மனதில் கொள்ள வேண்டும் – சீனா
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வின்போது கருத்துத் தெரிவித்த இந்திய குழு இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினையத் தீர்ப்பதில் போதியளவு முன்னேற்றம் காணாமை குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. “ஐ.நா. சாசனத்தின் வழிகாட்டலுக்கமைய, சர்வதேச ஊடாடல் மற்றும் ஒத்துழைப்புடன் மனித உரிமைகளை முன்னெடுக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாடுகளுக்கும் இருக்கிறது என்பதில் இந்தியா பெரு நம்பிக்கை வைத்துள்ளது. அந்த வகையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் குறிப்பாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து அவற்றின் தேர்தல்களை மிக விரைவில் நடத்தி இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்” என இந்திய குழு தெரிவித்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் மைய நாடுகளால் தயாரிக்கப்பட்ட தீர்மான வரைவு உறுப்பு நாடுகளின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வரைவு மீதான கருத்துக்கள் உறுப்பு நாடுகளால் தற்போது சபையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
2009 இலிருந்து இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட வாக்கெடுப்புக்களில் இந்தியா, மூன்று தடவைகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், இரண்டு தடவைகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது (2014, 2021) நடுநிலை வகித்தும் வாக்களித்திருந்தது. ஆனாலும் ஒவ்வொரு தடவை வாக்களிப்பின்போதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றைக் காண்பதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாட்சைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது.
இந்த தடவை மனித உரிமைகள் சபையின் பிரதி ஆணையாளர் இலங்கை தொடர்பாக வழமைக்கு மாறான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். “இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு, முன்னாள் மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கான உரிய தண்டனைகள் வழங்கப்படாமை (impunity), பொருளாதாரக் குற்றங்கள் (economic crimes) மற்றும் ஊழல் (corruption) ஆகியனவே மூல காரணம்” என ஆணையாளர் இலங்கையைச் சாடியிருந்தார்.
“தற்போதைய பொருளாதார்ச் சிக்கலிலிருந்து மீளவேண்டுமானால் அதிகாரப் பகிர்வின் மூலம் தனது குடிமக்கள் ஒவ்வொருவரையும் இலங்கை வலுப்படுத்துவது தலையான தேவையாகும். அந்த வகையில் மாகாண சபைகளின் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதே நாட்டினதும் அதன் மக்களினதும் சுபீட்சத்துக்கு வழிவகுக்கும். எனவே இலங்கை உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்” என மனித உரிமைகள் சபையில் இந்திய குழு தனது கருத்தை முன்வைத்துள்ளது.
வரைவு தொடர்பாகக் கருத்துக்கூறிய சீனா ” இலங்கை தனது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக சீனா எப்போதுமே தனது ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது. தனது அபிவிருத்திப் பாதையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இலங்கைக்கு உண்டு என்பதைச் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.