Spread the love

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். சிறு குழந்தை முதல் எந்தக் கையால் எழுத ஆரம்பீத்தீர்களோ ( அடி மட்டத்தால் மொழியில் அடிவங்கிக் கை மாறியவர்கள் தவிர) அதே கைப் பழக்கம் பெட்டியில் போகுமட்டும் உங்களுடன் வர்ம் என்கிறார்கள். ஏன் என்பதற்கு மட்டும் இன்னும் வலுவான காரணங்கள் தரப்படவில்லை.

நீங்கள் இடது கைப்பழக்கம் உள்ளவரா? உப்ஸ்... 1
இடதுககிக்காரர் விளையாட்டில் திறமையுள்ளவர்கள்

இரண்டு கைகளாலும் சரளமாக எழுத வல்ல வெகு சிலரைத் தவிர, பெரும்பாலோர் ஒரு கைப்பழக்கம் உள்ளவர்கள், 85-90% வலதுகைக்காரர்களே. உலகத்தில் எந்த இடத்திலும் இடதுகைக்காரர்கள் பெரும்பான்மையாக இருந்த வரலாறே இல்லை. அதற்காக அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. செம்பு தாராளமாகக் கிடைக்கிறது, தங்கம் அருமையாகத்தான் கிடைக்கிறது!

ஆனால் இடதுகைக்காரர்கள் மீது வியாபாரிகள் அதிகம் இரக்கம் காட்டுவதில்லை. பெருமாபாலான நுகர்வுப் பண்டங்கள் வலதுகைக்காரருக்கெனவே தயாரிக்கப்படுகின்றன. இதர சிறுபான்மையினரைப் போல் அவர்கள் மனித உரிமைகள், பாரபட்சம் காட்டப்படுதல், ஒதுக்கப்படுதல் என்றெல்லாம் வழக்குப் போடுவதில்லை. அரசியல்வாதிகள், ஏன் பிரித்தானிய முந்நாள் அரசர், இடதுகைக்காரர் ஆறாம் ஜோர்ஜ் கூட தமது கட்சிக்காரருக்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவரவில்லை. மரபணுவில் வேண்டுமென்றே மாறாம் கொண்டு வந்தாலே தவிர, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவர்கள் சிறுபான்மையினர் தான்.

வரலாற்று ரீதியாக இடதுகைக்காரர்கள் கொஞ்சம் தாழ்த்தப்பட்ட ‘இனமாகவே’ இருந்து வந்துள்ளனர். ஆங்கிலத்தில் “Right” என்பது எப்போதுமே சரியாக இருக்கவேண்டுமென்பதே விதியாக்கப்பட்டுவிட்டது. அதன் அனுமானம் என்னவென்றால் “left” என்றால் பிழை என்பது தான், ஆனால் அழுத்திச் சொல்லப்படுவதில்லை. இன்றும் அரசியலில் இடது என்றால் சிறுபான்மை தான். லத்தின் மொழியில் “sinister” என்பது கெட்ட / இடது / பாவம் என்பதைக் குறிக்கும்.

பெண்களை இடது பக்கத்தோடு இணைத்துக் கூறுவதும் வரலாற்று ரீதியாகத் தொடர்வதுண்டு. இடது விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதும், கெட்டது என்று தெரிந்தும் ‘அறிவுக் கனியைப்’ பறித்துத் தரும்படி ஆதாமை வற்புறுத்தியால் பின்னால் ஏற்பட்ட விளைவுகளுக்கு ஏவாள் காரணமென்று கருதப்படுவதாலும் பெண் மீது சுமத்தப்பட்ட சம்பந்தம் இது. சிவபெருமானும் உமாதேவியாரை ஏன் இடப்பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற் புதிரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

நாகரீக உலகம் இடது / வலதுச் சண்டையிலிருந்து வெகுதூரன் வந்துவிட்டதெனினும், விஞ்ஞானிகள் திருப்தியடையுமளவுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.

குழந்தைகள் கருவிலுள்ள போதே கை விரலைச் சூப்புவதன் மூலம் தாம் இடதோ வலதோ என்பதைக் காட்டிவிடுகின்றார்கள் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் ( The journal Neuropsychologia 2005).

மரபணுவில் இடது / வலது என்ற வேறுபாடு எதுவும் காணப்படவில்லையாயினும் கைத் தேர்வில் டி.என்.ஏ. ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் விஞ்ஞானிகள் உடன்படுகிறார்கள். சமீபத்தில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆரய்ச்சியில் 400,000 பிரித்தானிய மக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் மரபணுத் தொகுதியில் நான்கு பகுதிகள் இடதுகைப் பழக்கத்தோடு தொடர்புடையனவெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த் நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் மூளை விருத்தி / ஒழுங்கமைப்பு விடயங்களை மேற்பார்வை செய்வன.

Related:  இன்று முதல் பாவனைக்கு வருகிறது - ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட்-19 தொற்றாளரைக் கண்டுபிடிக்கும் Covid Alert app!

முற்கால மனிதர்களின் எலும்புக்கூடுகளில் காணப்பட்ட அங்கங்களில் அவதானிக்கப்பட்ட எலும்புத் தேய்வுகள், பற் தேய்வுகள், பாவிக்கப்பட்ட கருவிகளின் வடிவமைப்புகள், தேய்வுகள் போன்றவற்றை ஆராய்ந்து கைப்பழக்கத்தைக் கூர்ப்பு எப்படிக் கையாண்டிருக்கிறது (வலதாகக் கையாண்டுள்ளத அல்லது பிழையாகக் கையாண்டுள்ளதா என்று மண்டையை உடைக்க வேண்டாம்) என்பதை அறிவதில் விஞ்ஞானிகள் பொருதிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் கடந்த 500,000 வருட வரலாற்றுத் தரவுகளின்படி வலது கைக்காரரே பெரும்பான்மையாக இருந்து வந்திருக்கிறார்கள். இது வலதா அல்லது பிழையா என நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இடதுகைக்காரர்களில் ஏன் இந்தக் கொலை வெறி என்று ‘பிழை’க்கைக் காரர் அல்லது ‘கக்காக்’ கைக்காரர் ஆத்திரப்படலாம். ஆனால் இடதுகைக்காரர் கற்கையில் கொஞ்சம் பிந்தங்கியவர்கள் எனவும் திக்குவாய் போன்ற பேச்சுப் பிரச்சினையை எதிர்கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனவும், வலதுகைக்காரர் போல் படிப்பில் அதிகம் பிரகாசிக்கமாட்டார்கள் எனவும் ஆய்வாளர் கருதுகின்றனர். ஆனால் இடதுகைக்காரர்களில் பலர் சதுரங்கம் ஆடுவதில் மகா கெட்டிக்காரர் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படிப்பார்க்கில் அவர்களது மூளையின் வேகம் வலதுகாரரை விட அதிகமாக இருக்க வேண்டும்.

எதற்கும் ஆய்வாளர்களைச் சிறைகளிலும் கொஞ்சம் ஆராய்ச்சிகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.

-லைஃப் சயன்ஸ் சஞ்சிகையிலிருந்தும் எனது (வலது) கையிருப்பிலிருந்தும் – சிவதாசன்

Print Friendly, PDF & Email