Sri LankaWorld

நில அபகரிப்பும் சிங்கள மயமாக்கலும் வட-கிழக்கில் துரிதப்படுத்தப்படுகிறது – அமெரிக்க அமைப்பு

நில அபகரிப்பும் சிங்கள மயமாக்கலும் வடக்கு கிழக்கில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது - ஓக்லாண்ட் இன்ஸ்டிட்யூட்

இராணுவம் உட்பட அரச நிறுவனங்களால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகள் அங்குள்ள தமிழர் பெரும்பான்மையைக் குறைப்பதற்காகவென அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைப்பொன்று தெரிவித்திருக்கிறது.

“Endless War: The Destroyed Land, Life, and Identity of the Tamils in Sri Lanka” என்ற தலைப்பில் Oakland Institute எனப்படும் அமைப்பினால் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தரும் இவ்வறிக்கையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ச் சமூகங்கள் எவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த 44 பக்க அறிக்கையில், போர் முடிந்து 12 வருட காலமாக எவ்வாறு இலங்கை தமிழரின் பாரம்பரிய நிலங்கள் அரசினால் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்குள்ளாக்கப்படுகின்றன எனத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் நிலங்களைத் துண்டு போடுதல்

“”அபிவிருத்தித் திட்டங்கள்” என்ற பெயரில் தமிழர் வாழும் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களும், தமிழருக்கு மறுக்கப்படும் காணிப்பகிர்வுகளும், அப்பிரதேசங்களில் தமிழரின் பெரும்பான்மையைத் திட்டமிட்டுக் குறைக்கும் கபட நோக்கத்துடனானவை” என ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திட்டங்கள், இராணுவக் குடியிருப்புகள், தொல்லியல் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு, விசேட பொருளாதார வலயங்கள் என்பவற்றினூடாக வட கிழக்கில் நில அபகரிப்பு மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என இவ்வாய்வறிக்கையின் ஒருங்கிணைப்பாளரான அனுராதா மிற்றல் தெரிவிக்கிறார்.

“வடக்கு கிழக்கிலுள்ள தமிழர் பாரம்பரிய பிரதேசங்களைத் துண்டு போடுவதன் மூலமாக தமிழர் பெரும்பான்மையைக் குறைக்க அரசு திட்டமிட்டுச் செயற்படு வருகிறது” என்கிறது இந்த அறிக்கை.

விலகிப்போகும் தீர்மானம்

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிக மோசமான இனவழிப்பை அவதானிக்கும்போது, அமெரிக்கா, பிரித்தானியா தலைமையில், இணைத்தலைமை நாடுகளால் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் முன்மொழியப்படவுள்ள முதலாவது வரைவு நீதியையும், பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதில் பாரிய குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது எனவும் இவ்வரைவு குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பகெலெவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள், முன்னாள் ஆணையாளர்களின் கருத்துக்கள, 9 விசேட அறிக்கையாளர்களின் அறிக்கைகள், ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எல்லாமே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கவேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றன” என மிற்றல் மேலும் தெரிவித்தார்.