Uncategorized

நிறம் மாறும் பிரித்தானிய பாராளுமன்றம் | 65 உறுப்பினர்கள் வெள்ளையரல்லாதோர்

டிசம்பர் 15, 2019

நடந்து முடிந்த பிரித்தானிய தேர்தலில் 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளையரல்லாதோரெனவும் அவர்களில் 15 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரெனவும் தெரியவருகிறது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் மொத்தம் 650 ஆசனங்கள் உள்ளன. ஏறத்தாழ 1.5 மில்லியன் இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்கின்றனர்.

அதே வேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பிரதேசங்களில் வெள்ளையரல்லாதோர் எவரும் தேர்ந்தெடுக்க்கப்படவில்லை.

சேர் தாதாபாய் நவ்ரோஜி

127 வருடங்களுக்கு முதல் பிரித்தானிய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முதல் இந்திய வம்சாவளியினராக சேர் தாதாபாய் நவ்ரோஜி அவர்களின் பெயர் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

சேர் தாதாபாய் நவ்ரோஜி (செப்டம்பர் 4, 1825 – ஜூன் 30, 1917) பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச் சபை அங்கத்தவராக 1892 முதல் 1895 வரை லிபரல் கட்சியின் அங்கத்தவராக இருந்தார். இவரே அப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய வம்சாவளி பா.உ. அத்தோடு இவர் உத்தியோகபூர்வமற்ற இந்தியத் தூதுவராகவும் பணியாற்றினார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால உறுப்பினருமாவார். குஜராத் மாநிலத்தில் பார்சி குடும்பத்தில் பிறந்த இவர், ‘Poverty and Un-British Rule in India’ என்னும் அவரது நூலில் இந்தியாவிலிருந்து எப்படி இங்கிலாந்து செல்வத்தைச் சுரண்டியது என்பதுபற்றி எழுதி உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தவர்.

சேர் தாதாபாய் நவ்ரோஜி – பிரித்தானிய பாராளுமன்றத்தின் முதல் இந்திய வம்சாவளி அங்கத்தவர்

சேர் நவ்ரோஜிக்குப் பின்னர் மஞ்சர்ஜி புவனகிரி (1895), ஷாப்புர்ஜி சக்லத்வாலா (1922, 1924) ஆகிய இந்திய வம்சாவளியினர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாகவிருந்தனர்.

கடந்த பாராளுமன்றத்தில் 52 வெள்ளையரல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் 12 பேர் இந்திய வம்சாவளியினர். இவர்களில் தமிழ் பேசும் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை எனினும் றிச்மண்ட்-யோர்க்‌ஷையர் தொகுதிக்குத் தெரிவான றிஷி சுனாக் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனென அறியப்படுகிறது.

இந்த 65 பேர்களில் 37 பேர் பெண்களாவார். போறிஸ் ஜோன்சனின் முந்தய அரசாங்கத்தில் உள்ளக அமைச்சராகவிருந்த பிரிதி பட்டேல், சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகவிருந்த சர்மா, திறைசேரி முதன்மைச் செயலாளர் சுனாக் ஆகியோர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.

பிரீதி பட்டேல்
உள்ளக அமைச்சர் பிரிதி பட்டேல்

இந்திய வம்சாவளியினரான பிரீதி பட்டேல் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஒரு முக்கிய புள்ளி. கடந்த போரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் உள்ளக அமைச்சராக இருந்தவர். நாடு தழுவிய ரீதியில் பிரபலமான இவர் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமானவர். தெரேசா மெயின் அரசில் இவர் இஸ்ரேலுடன் இரகசியச் சந்திப்புகளை செய்துவருவது தெரிந்து அதனால் மே இவரைப் பதவி நீக்கம் செய்தவர். தேர்தலுக்கு முதல் இவர் லண்டனில் தற்காலிகபி பயணிகளாகவிருக்கும் ஜிப்ஸிகளையும் இதர ஐரோப்பியபயணிகளையும் அகற்றுவதற்குபி போலீஸ் அதிகாரங்கள் கொடுக்கப்படவேண்டுமெனகே கூறியதால் பலத்த எதிர்ப்புக்குள்ளாக்கியவர். இந்தத் தடவை 66 வீதா வாக்குகளுக்கு மேலால் வெற்றி பெற்றிருக்கிறார்.

கீத் வாஸ்
கீத் வாஸ்

தமிழர்கள் விவகாரங்களில் மிகவும் உறுதுணையாக இருந்துவரும் லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியின் தொழிற்கட்சிப் பிரதிநிதியான கீத் வாஸ், தனது தொகுதியில் மீண்டும் தெரிவாகியுள்ளார். இவர் இத் தொகுதியைக் கடந்த 32 வருடங்களாக (1987) பிர்தைநிதித்துவப்படுத்தி வருகின்றார். இவருக்கு எதிராகக் கன்சர்வேட்டிவ் கட்சியில் பூபென் டேவ் எனும் இன்னுமொரு இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டிருந்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் காஷ்மீரக் கொள்கை மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதம் ஆகிய விடயங்களில் தொழிற்கட்சி கோட்பாட்டுரீதியாகக் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்ததும், இஸ்லாமிய அடிப்படைவாத விடயங்கள், பாலஸ்தீன சார்பு நிலை, வட அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவு நிலைப்பாடு ஆகியவற்றில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பினுக்கு இந்திய வம்சாவளியினரின் ஆதரவு அதிகம் கிட்டியிருக்கவில்லை.

65 வெள்ளையரல்லாத உறுப்பினர்களை இங்கிலாந்து மக்கள் தெரிவுசெய்திருந்தாலும் இனத் துவேஷம் கொஞ்சமேனும் குறையவில்லை என்கிறார் ஸ்ரெதம் தொகுதிக்குத் தெரிவான டையான் அபோட் என்னும் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண். தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு பாரதூரமான துவேஷச் சொற்களைக் கேட்டிருக்கவில்லை என்கிறார் அவர். இருப்பினும் நான் விட்டு விட்டு எங்கும் ஓடிவிடப் போவதில்லை என்கிறார்.