Spread the love

மாயமான்

கோவிட் பட்டியில் நடைபெற்ற ‘கொறோணா வைரஸ் அடக்கும் போட்டியில்’ வென்றவர்கள் அனைவரும் பெண்கள்; நியூசீலந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேர்ண் மற்றும் ஜெர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கெல். (படு மோசமாகத்) தோற்றவர்கள் எல்லோருமே ஆண்கள்; ட்றம்ப், பொறிஸ் ஜோன்சன், மோடி, பொல்சனாறோ, கோதாபய (peoples’ choice). இதை நான் சொல்லவில்லை., சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) தலைவி கிறிஸ்டீன் லெகார்டே கூறுகிறார் (ஏறத்தாழ). இப் பெண் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!

காரணம்? ஆண் தலைவர்களோடு ஒப்பிடும்போது, பெண் தலைவர்கள் முன்கூட்டிய செயற்பாடுகளைச் (pro-active) செய்பவர்கள் (வருமுன் காப்போர்); அவர்களது பரி பாஷை (communication style) முறை மிகவும் துல்லியமானது என்கிறார் கிறிஸ்டீன். அவரும் ஒரு பெண்ணாக இருப்பதால் இது ஒரு same side goal எனச் சந்தேகிப்பவர்களும் இருக்கலாம். கொறோணாவைரஸே ஒரு பெண் எனவும் அதனால் பாரபட்சம் காட்டியிருக்கிறது எனவும் சில யூ டியூப் ஆய்வாளர் அறிக்கைகளைத் தயாரித்துக்கொண்டிருக்கலாம்.

தரவுகள் கிறிஸ்டீனை ஆதரிக்கின்றன. அவ்வளவுதான்.

“பெண்கள் வேலைகளைத் திறம்படச் செய்கின்றனர் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் அவர்.

கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக மோசமான முறையில் மேற்கொண்ட நாடுகளில் முதற் 10 நாடுகளின் தலைவர்களும் ஆண்கள். மொத்த சனத்தொகையின் எண்ணிக்கை, மொத்த நோய்த் தொற்றுக்கள் ஆகிய இலக்கங்கள் ‘இப் போட்டியில்’ ஆராயப்பட்டன. உலகின் 10 வீதமான நாடுகளையே பெண் தலைவர்கள் ஆள்கிறார்கள் என்பது மேலும் உறைப்பைத் தரும் விடயம்.

இந்த ஆய்வை பொருளாதார நிபுணர்களான சுப்பிரியா கரிகிபதி, உமா கம்பாம்பதி ஆகியோர் செய்திருக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புகளைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாது தமது நாடுகளை ஆரம்பத்திலேயே முடக்கிவிட்டிருந்தார்கள் இந்த பெண் தலைவர்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் முடக்கல் நடவடிக்கைகளைத் தாமதமாகக் கையாண்டதற்குக் காரணம், பொருளாதாரப் பாதிப்பு பற்றிய அவர்களது அச்சமே.இதன் விளைவுகளாக, ஜூன் மாதத்திலேயே கொறோணாவைரஸைக் கட்டிப்போட்டுவிட்டார் ஜசிந்தா. அதற்காக அவர் உலகம் முழுவதாலும் (அமெரிக்கா தவிர்ந்த) பாராட்டப்பட்டார். பின்னர் எல்லைகள் திறக்கப்பட்டதும் சிறிய அளவுகளில் தொற்றுக்கள் அங்குமிங்குமாக வந்திருந்தாலும் பெருமளவிலான நோய்த்தொற்று நியூசிலாந்தில் ஏற்படவில்லை.

ஆய்வாளர்களது தரவுகள் இவை:

நாடுதொற்று எண்ணிக்கைதலைமை
பாஹ்ரெயின்22,100ஆண்
சிலி17,600ஆண்
பனாமா13,000ஆண்
ஆர்மீனியா12,200ஆண்
அமெரிக்கா12,000ஆண்
பெல்ஜியம்5,600பெண்
பொலிவியா5,500பெண்
சுவிட்சர்லாந்து4,000பெண்
ஜெர்மனி2,400பெண்
டென்மார்க்2,300பெண்

உடன்படத்தான் வேண்டியிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  உலகின் முதலாவது கோவிட்-19 தடுப்பு மருந்து ரஷ்யாவில் பாவனைக்கு அனுமதி