நியூ யோர்க்: மம்தானியின் ‘சலாம் பொம்பே’
சிவதாசன்
நல்ல வழியிலோ அல்லது கெட்ட வழியிலோ வரலாற்றைப் படைப்பதில் அமெரிக்காவிற்கு நிகரில்லை. நியூ யோர்க் நகரத்தின் மேயராக ஒரு முஸ்லிம் மதத்தவரை, வயதில் இளையவரை, ஒரு தென்னாசியரை, ஒரு சோஷலிஸ்ட்டை மேயராகத் தெரிந்ததன் மூலம் அமெரிக்கா வரலாறு படைத்திருக்கிறது.
நியூ யோர்க் நகரில் மிகவும் நடுத்தரவர்க்க நகரமான குயீன்ஸ் இல் வதியும் மம்தானிக்கு எதிராக நகரில் அதிமிகு தனவந்த யூதர்களினதும், ட்றம்பின் இனத்துவேஷ அடியாட்களினதும் அட்டகாசங்களையும் மீறி 50% த்திற்கும் மேலான நியூ யோர்க் நகர வாக்காளர்கள் மம்தானிக்கு வாக்களித்து அவரை மேயராகத் தெரிந்திருக்கிறார்கள்.
ட்றம்பின் மிரட்டல், யூதர்களின் பணபலம், ஊடக பலம், பிரச்சார பலம், இலான் மஸ்க் போன்றோரின் பின்னரங்க காய் நகர்த்தல்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அமெரிக்க இளைய தலைமுறை இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதர போட்டியாளர்களுக்கு வால் ஸ்ட்றீட் முதலைகள் மில்லியன்களில் அள்ளிக் கொடுக்க மம்தானிக்கு ஏழைகள் டொலர் டொலராக வாரி வழங்கிச் சிறுகச் சேர்த்துப் பெரு விளைவை அறுவடை செய்திருக்கிறார்கள். சில மாதங்களாக நடைபெற்ற பிரச்சாரங்களில் தொடக்கம் முதல் முடிவு வரை பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள், இன, மத வேறுபாடுகளற்று பிரசாரங்களைச் செய்தார்கள். கனடா உட்பட உலகின் பல நாடுகளிலும், அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் காசா இனப்படுகொலையை முழுதாக விழுங்கி விட்ட நிலையில் ஆரம்பம் முதல் இறுதி வரை மம்தானி காசா மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் தவறவில்லை. இச்சூழலில் அவரின் வெற்றி மகத்தானது, போற்றப்பட வேண்டியது.
இத் தேர்தல் நியூ யோர்க் நகரத்துக்கானது மட்டுமல்ல. ஒட்டு மொத்த அமெரிக்காவின் மனநிலை மாற்றத்தின் ஆரம்பத்திற்கான கட்டியம் இது. ஜனநாயக, குடியரசு கட்சிகள் இரண்டுமே இஸ்ரேலிய பொம்மைகளாக ஆக்கப்பட்டபின் பணமே அங்கு ஆட்சி செய்தது. யூதர்களிடமிருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க ‘அமெரிக்கா முதல்’ என்ற வாதத்துடன் களமிறங்கிய ‘மாகா’ குழுவையும் யூத லொபி வாங்கிவிட்ட நிலையில் ‘மாகா’ உடைந்து போனது. ரக்கர் கார்ள்சன், மார்ஜரி கிரீன், கொலை செய்யப்பட்ட சார்ளி கேர்க் போன்ற கிறிஸ்தவ வலதுசாரிகள் ‘மாகா’ வை இஸ்ரேலிய லொபியிடமிருந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடும் நிலையில் நியூ யோர்க் நகரத்தில் மம்தானிக்கு எதிராக அவர்கள் களத்தில் இறங்கவில்லை என்பது குடியரசுக் கட்சி அங்கத்தவருக்கு வெறும் 8% வாக்குகள் கிடைத்ததிலிருந்து தெரிகிறது. யூத லொபி தனது முழுப் பலத்தையும் போட்டியாளர் கூமோவுக்கே வழங்கியிருந்தன. அப்படியிருந்தும் மம்தானி வெற்றியீட்டியிருக்கிறார். இது யூத லொபிக்கும், ட்றம்பிற்கும் கிடைத்த படு தோல்வி.
அதே வேளை, இஸ்ரேலின் பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்த பைடன் தலமையிலான ஜனநாயகக் கட்சிக்கும் இத் தேர்தல் புதியதொரு பாதையைத் திறந்து விட்டிருக்கிறது. இஸ்ரேலின் பணத்தாலும், எப்ஸ்டீன் மிரட்டல்களாலும் வாங்கப்பட்ட பல காங்கிரஸ் உறுப்பினர்கள் , செனட்டர்கள் இப்போது தொடை நடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மம்தானி அலை அமெரிக்க நடுத்தவணைத் தேர்தல்கள் வரை ஓயப்போவதில்லை. வேர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக வந்திருப்பது ஒரு ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர். நியூ ஜேர்சியின் 11 ஆவது மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் மிக்கீ ஷெரிலுக்கு (ஜனநாயகக் கட்சி) எதிராக ட்றம்ப் கடுமையாக உழைத்திருந்தும் ஷெரில் வெற்றியீட்டியிருக்கிறார். மம்தானிக்கு எதிராக ட்றம்ப் பலவிதமான பொய் வதந்திகளியும் மிரட்டல்களையும் விடுத்திருந்தார். அவை எல்லாவற்றையும் தகர்த்துக்கொண்டு பீரிட்டுப் பாய்கிறது மம்தானி அலை.
மம்தானி தன்னை ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட் என்று கூறிக்கொள்பவர். மேயராகத் தெரிவு செய்யப்பட்டால் தற்போதைய வீட்டு வாடகை அதிகரிக்கப்பட மாட்டாது; மலிவான வாடகைக் குடியிருப்புகளைக் கட்டுவோம்; சம்பளத்தை மணித்தியாலத்துக்கு குறைந்தது 30 டாலர்கள் எனச் சட்டம் இயற்றுவோம்; பஸ் வண்டிகளை இலவசமாக ஓட்டுவோம்; இதற்கெல்லாம் வருவாயாகப் பணக்காரர் மீது வரிச்சுமையை அதிகரிப்போம் என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். இவை ஒன்றையேனும் நிறைவேற்ற அவரால் முடியுமென நான் நினைக்கவில்லை. ஆட்சி நிர்வாக அனுபவம் எதுவுமில்லாதவர். பல வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ‘நியூ யோர்க் மாநிலமான’ ஒன்ராறியோவை நமது இடதுசாரி, ஜனநாயக் சோஷலிஸ்ட் பொப் ரே (NDP) யிடம் மக்கள் கொடுத்தார்கள். அவரோ ஆளமுடியாமல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என விட்டு விட்டு ஓடிப்போய் லிபரல் கட்சியில் தஞ்சமடைந்துவிட்டார். நியூ யோர்க் மம்தானியின் தேர் நியூயோர்க் தெருக்களில் ஓடுவதற்கு பல தடங்கல்கள் இருக்குமென்பது நிச்சயம்.
மம்தானியை வீழ்த்துவதற்கு பல விசைகள் முயற்சிக்கும். இதற்கான வேலைகள் மொசாட் அலுவலகத்தில் இப்போதே ஆரம்பித்திருக்கும். ஆனால் அவரது வீழ்ச்சிக்கு வழக்கம்போல அவரது ‘ஆட்களே’ காரணமாக அமைவார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஒன்று அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எழும் தடங்கல்கள், அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் என அவரது வாக்காளர் மத்தியில் ஏற்படும் அதிருப்தியை எதிர்த் தர்ப்பினர் சாதகமாகப் பயன்படுத்துதலும் அதனால் ஏற்படும் விளைவுகளும். இரண்டாவதும் மிக முக்கியமான ஒன்றாகவும் நான் கருதுவது ‘அவருக்கான உரிமை கோரும்’ அவரது இனசனம்.
இத் தேர்தலில் மம்தானியின் மதம், இனம், நிறம் ஆகியன ட்றம்ப், மஸ்க் போன்றவர்களால் வெளிப்படையாகக் கூறப்பட்டாலும் பெருமளவில் கிசு கிசுக்கப்பட்டவை. மம்தானி தனது பூர்வீகத்தை மறைத்து தன்னை ஒரு காலனித்துவ ‘ஆங்கிலோ-இந்தியராகக்’ காட்ட முனையவில்லை. கனடாவில் போல ‘தமிழ்ர் தமிழருக்கும்’, ‘சீக்கியர் சீக்கியருக்கும்’ , ‘யூதர் யூதருக்கும்’, ‘சீனர் சீனருக்கும்’ வாக்களிக்கவேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவரது வெற்றிக்கு அவரது சித்தாந்தமும், அம்பலமாகிவரும் யூத எதிர்ப்பும், ட்றம்பின் அராஜகமும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இவை தொடர்ந்தும் அவரைக் காப்பாற்றி வைத்திருக்குமா என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு.
மம்தானியின் வெற்றிக்குப் பிறகு அவரது உரிமையாளர்கள் பகிரங்கமாகப் பொதுவெளியில் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். அவர் ஒரு முஸ்லிம் எனவும் அவர் ஒரு இந்தியர் எனவும் அவரது பெற்றோர்களின் சாதனைகளைப் புகழ்ந்தும் அவரை நியூயோர்க்கிலிருந்து பொம்பேயில் கொண்டுவந்து நிறுத்தி சலாமடிக்கும் நிகழ்ச்சிக்கு சமூக மற்றும் பெருமூடகங்கள் தயாராகி வருகின்றன, கமலா ஹரிஸ், தேர்தலுக்கு முன்னர் தன்னை ஒரு இந்தியராகவும் தேர்தலின் போது தன்னை ஒரு ஆபிரிக்க அமெரிக்கராகவும் காட்ட முயற்சித்ததாக ஊடகங்கள் சித்தரித்து அவரை வீழ்த்தியமை நினைவுக்கு வரலாம்.
மம்தானி நியூ யோர்க் நகரத்தின் மேயராக வெற்றிகரமாக செயற்பட வேண்டுமாயின் அவர் தன்னை முதலில் அமெரிக்கராக நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். உலக அரசியலில் மூக்கை நுழைப்பதை விட்டுவிட்டு நியூ யோர்க் நகர அரசியலில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன, மத சமத்துவத்திற்காகப் போராடுவதை விட்டுவிட்டு மனித சமத்துவத்தை மட்டுமே முன்வைத்து அவர் செயற்படுவாரானால் அவர் தேறிக்கொள்வார்.
நிக்சனின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பணியைச் செய்த பற் புக்கான்னன் என்பவர் ஒரு தடவை சொன்னார் ” தேர்தலில் நிற்பவர் தனது வாக்குறுதிகளை முன்வைத்து போட்டியில் ஈடுபடலாம். ஆனால் வெற்றி பெற்றதும் அவர் நடு நிலைக்கு வந்து தோற்றவர் பக்கத்தின் கொள்கைகளையும் அனுசரித்துச் சமநிலை பேணவேண்டும்”.
ட்றம்பின் அமெரிக்காவில் அதை எதிர்பார்க்க முடியாதுதான். நமக்கேன் வம்பு?
வாழ்த்துக்கள் ‘யுவர் வேர்ஷிப் மம்தானி’ (Image Credit: Instagram)
