Economyசிவதாசன்

‘நியூ செஞ்சுரி அரேபியா’ | உலகை மாற்றப்போகும் சவூதி அரேபியா

சிவதாசன்

உலகத்தின் அதி பெரிய எண்ணை ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா $100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தூதுவர் டாக்டர் சாவுட் பின் மொஹாமெட் அல் சாதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் சவூதி இளவரசரும்

“முதலீடு செய்வதற்கு மிகப் பொருத்தமான நாடாக இந்தியவை நாம் கருதுகிறோம். இரு நாடுகளுக்கான உறவை வளர்த்துக்கொள்ள நாம் விரும்புகிறோம்” என அவர் பேசியிருக்கிறார்.

உலகில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களுக்கான முன்னீடு இது.

பெற்றோலியம் சம்பந்தமான இரசாயனப் பொருட்கள், உட்கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிரது என சவூதி அரேபியா கருதுகிறது.

சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா 90 வயதில் மரணமாக மன்னர் சல்மான் 2015 இல் பதவியை ஏற்றார். இறுக்கமான வஹாபிசக் கலாச்சாரத்திலிருந்து, மன்னர் சல்மான் மிகவும் அவதானத்துடன் சமூக, பொறுளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இவர்கள் மிகவும் புத்திசாலிகள். தமது நாட்டுக்குள் பயங்கரவாதம் இறக்குமதியாகக்கூடாது என்பதற்காகப் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த நாடு அரேபியா என நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.

எண்ணை வளத்தில் மட்டும் சவூதி அரேபியாவின் பொருளாதாரம் தங்கியிருக்கக் கூடாது அதைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அரேபியாவின் மன்னர் சல்மான் மிகவும் ஊக்கத்தோடு நடைமுறைப்படுத்தி வருகிறார். குறிப்பாகப் பெண் விடுதலை போன்ற விடயங்களில் சமீப காலங்களில் பல தளர்வுகளைச் செய்திருக்கிறார். இதற்குப்ப் பின்புலம் உளப்பக்குவமா அல்லது அரசியல் சாணக்கியமா என்பதைத் தீர்மானிக்க காலம் போதாது.

உலகம் மத்திய கிழக்கின் அச்சில் சுழன்ற காலம் மலையேறப் போகிறது என்பதற்கான பல அறிகுறிகள் ஏற்கெனவே தென்படவாரம்பித்துவிட்டன.

அமெரிக்கா, தன் ஏவலாள் இஸ்ரேல் மூலம் மத்திய கிழக்கின் கொதிநிலையைக் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எண்ணை அதற்கு முக்கிய காரணம். எண்ணை உற்பத்திதான் மத்திய கிழக்கிலேயே தவிர அதன் இயக்கத்துக்கான சாவிகள் எல்லாம் அமெரிக்காவிடம் தான் இருக்கின்றன. சவூதி அரேபியா எண்ணை உற்பத்தியின் சக்கரவர்த்தியாக இருப்பதற்குக் காரணம் இதர உற்பத்தியாளரை (வெனிசுவேலா, நைஜீரியா, ஈரான்) அடித்து நொருக்குவதும் ஒரு காரணம். பொருளாதாரத் தடையினால் கைகளில் கறைபடியாமல், செலவில்லாமல் குழந்தைகள், வயோதிபர்கள் என்ற பாகுபாடில்லாமல் பல கொலைகளைச் செய்ய முடிவதோடு, ஆள்பவர்களுக்கும் மக்களுக்குமிடையில் இலகுவாக ஆப்பையும் செருகிவிடலாம். இதைச் செய்ய வல்லது அமெரிக்கச் சண்டியன் தான். அமெரிக்கா செய்தால் இதரநாடுகள் துணைச் சண்டியர்கள் ஆகிவிடுவார்கள்.

சவூதி அரேபியாவை ஏகபோக எண்ணைச் சக்கரவர்த்தியாக வைத்திருப்பதற்குப் பிரதியுபகாரமாக எண்ணை விற்பனையின் வரும்படியின் ஒரு பகுதி அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும். (குவெயித் எண்ணை விலையைக் குறைக்கப்போவதாக அச்சுறுத்தியதன் விளவாகவே உள்ளூர்ச் சண்டியன் சதாம் ஹுசெயினை அமெரிக்கா ஏவியது, அதன் விளைவே சதாம் அழிந்ததும், எண்ணை விலை ஏறியதும் என்பார்கள்). அத்தோடு, பல பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க ஆயுதங்களையும் வாங்க வேண்டும். அவை எங்கு பாவிக்கப்படுகின்றன என்பது பிரச்சினையில்லை.

தற்போது நிலைமை வேறு. ஒபாமா காலத்தில் அமெரிக்கா எண்ணை உற்பத்தியில் அதிக வளர்ச்சி கண்டது. டெக்சாசிலிருந்து வந்த எண்ணைக்காரரான இளைய புஷ் காலத்தில் அமெரிக்க எண்ணை உற்பத்தி ஒரு நாளைக்கு 5 பில்லியன் பீப்பாக்களாக இருந்தது 2015 இல், ஒபாமா ஆட்சியில், 9.4 பீப்பாக்களாக (88% வளர்ச்சி) உயர்ந்தது. இத்தனைக்கும் ஒபாமா ஒரு சூழல் போராளி (நம்புவோம்) என்பது வேறு.

ஒபாமா சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வமாகச் சென்ற போது அவர் சவூதி மன்னரால் அவமதிக்கப்பட்டதைக் கட்டாயம் ‘நிறக்’ கண்ணாடியூடாகப் பார்க்க வேண்டுமென்பதில்லை, வியாபாரமும் தான் காரணம்.

சவூதி அரேபியாவின் எண்ணை ஆதிக்கத்திலிருந்து தப்பிச் சுய பூர்த்தியை எட்ட வேண்டுமென ஒபாமா நினைத்ததில் தப்பில்லை. ஆனால் சவூதி அரேபியாவிற்கும் அது புரிந்துவிட்டது என்பதுவே அது தற்போது முன்னெடுத்துவரும் பொருளாதார சீர்திருத்தம். எண்ணையில் மட்டும் தங்கியிருக்காது பன்முகப்படுத்தப்பட்ட முதலீடுகளில் ஈடுபடவேண்டுமென்ற சிந்தனையை முதலில் கொண்டுவந்தது தற்போதய மன்னர் சல்மான். இளவரசர் மொகாமெட் பின் சல்மான் (MBS) இதற்கு ஆதரவு தருகிறார். சவுதி அரேபியாவின் கண்களைத் திறந்தது ஒபாமா.

இளவரசரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும்

இளவரசர் சல்மானின் திட்டங்களின்படி, சவூதி அரேபியாவை உற்பத்தித் தளமாகவும், உட்கட்டுமான முதலீட்டாளர்களாகவும், இதர நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தியாளர்களாகவும், சுற்றுலாத்துறை, பொழுது போக்கு போன்றவற்றை (கசினோ, விளையாட்டுப் போட்டிகள், பாட்டுக் கச்சேரிகள்) ஊக்குவிப்பவர்களாகவும் ஆக்குவது ஒரு பெருங்கனவாக இருக்கிறது. இதற்காக ‘சவூதி விஷன் 2030‘ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. மொத்தத்தில் எண்ணை வருமானத்தில் இருந்து இதர வருமானமுள்ள நாடாக சவூதி அரேபியாவை மாற்றிக்கொள்வது.

இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பெருந்தடையாக இருப்பது அந்நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறைகளும், பெண்கள் சமத்துவம் போன்ற விடயங்களில் கற்கால நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும் சில காரணங்கள். எனவே பொருளாதார சீர்திருத்தம் வெற்றி பெற வேண்டுமானால், விருப்பமோ விருப்பமில்லையோ, சமூக தீர்திருத்தம் முதலில் முன்னெடுக்கப்பட வேண்டும். சமீப காலங்களில் பெண்கள் மீதான அடக்கு முறைகள் தளர்த்தப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

இதனிடையில் சவூதி அரேபியரும் பத்திரிகையாளருமான ஜமால் கஷோஜியின் கொலை யும் அதன் பின்னால் சவூதி இளவரசர் பின் சல்மான் இருக்கிறார் என்ற வதந்தியும் சவூதி அரேபியாவின் திட்டங்களுக்கு சிறிதளவு தடை போட்டன. அங்கு நடைபெறும் வர்த்தகக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றனவற்றுக்கு வெளி நாட்டுப் பிரபலங்கள் போவதைத் தவிர்த்துக் கொண்டார்கள். இதனால் மனித உரிமைகள் விடயத்தில் மேலும் தளர்ச்சியையும், சமூக தீர்திருத்தம் துரிதமான செயற்படுத்தலையும் கண்டது.

இருப்பினும் சவூதி அரேபியா எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாத்துறை முன்னேற்றம் காட்டவில்லை. குறிப்பாக மேற்கு நாடுகளின் வியாபாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் அரசியல்வாதிகளையும் தவிரச் சாதாரண அந்நியர்கள் அங்கு படையெடுக்க நாடு எதையும் காட்சிப்படுத்தவில்லை.

சவூதி விசன் 2030

இந் நிலையில், சவூதி இளவரசர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த முயற்சி செய்தார். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பயணித்தார். ஒரு காலத்தில் தமது தூதுவர்கள் மூலம் மார்க்கத்தைப் பரப்பிய நாடு தற்போது தமது வர்த்தகத்தை முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளது நல்ல விடயம். வளர்ந்து வரும் இந்தியாவில் தனது வணிகத்தை விஸ்தரிப்பதற்காக இந்தியாவின் பரம எதிரியும் சக இஸ்லாமிய நாடுமான பாகிஸ்தானை உதாசீனம் செய்யத் தயாராகி விட்டது அரேபியா. கற்காலத்தில் இருக்கும் பாகிஸ்தானால் தனக்கு நன்மை அதிகம் இல்லை என்பது அதற்குப் புரிந்துவிட்டது.

ஒரு காலத்தில் ‘இஸ்ரேல்’ என்ற பெயர் பொறித்த எந்தவொரு பண்டமும் அரேபியாவின் எல்லையைத் தாண்ட முடியாது. தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் மருமகனும், யூதருமான ஜெரார்ட் குஷ்னரும் இளவரசர் பின் சல்மானும் நல்ல நண்பர்கள். பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க இராணுவத் தளபாடங்களை அரேபியா வாங்குவதற்கு இன் நட்புத் தான் கதவுகளைத் திறந்தது.

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானி அரேபியாவின் எண்ணை நிறுவனமான அரம்கோவில் 10% பங்குகளை வாங்கியிருக்கிறார். இந்தியாவின் வர்த்தகக் கதவுகளை இது திறந்துவிட்டிருக்கிறது. காஷ்மீரப் பிரச்சினைகளையும் தாண்டி மோடியுடன் கை குலுக்கி மகிழ்கிறார் இளவரசர். 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டை இந்தியாவில் செய்யப்போவதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.

இளவரசர் பின் சல்மானும் ரஸ்ய அதிபர் புட்டினும்

அமெரிக்க நட்பையும் தாண்டி ரஸ்யாவுடன் பல வணிக ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார் பின் சல்மான். அரேபியாவின் பரம எதிரியான ஈரானும் ரஸ்யாவும் நண்பர்கள். அப்படியிருந்தும் ரஸ்யாவுடன் வர்த்தகத்தை விஸ்தரிக்க அரேபியா தயாராகிவிட்டது.

அரேபியாவின் சனத்தொகை ஏறத்தாள 35 மில்லியன். ஏறத்தாள 10 மில்லியன் வெளிநாட்டுக்காரர் அங்கு வேலை செய்கிறார்கள். அரேபியாவின் குடிமக்களுக்குப் பெரும்பாலான சேவகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் உள்ளூர் திறனாளிகள் அருகிவிட்டனர். எல்லாவற்றுக்கும் வெளிநாட்டுக்காரரை இறக்குமதி செய்து பழக்கப்பட்ட நாடாகிவிட்டது. இளவரசர் பின் சல்மான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்து விட்டார். தனது குடிமக்களைச் சோம்பேறிகளாக வைத்திருக்காமல் இதர உலகத் தரத்துக்குக் கொண்டுவரப் பல கல்வித் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறார்.

‘சவூதி விசன் 2030’ திட்டத்தின் கீழ் சவூதி அரேபியாவை ஒரு உலக முதலீட்டு மையமாக ஆக்கவேண்டுமென்பது அரச குடும்பத்தின் திட்டம். இதை முன்னெடுப்பதானால் கற்கால வாழ்முறையிலிருந்து நாடு விடுபட வேண்டும். சமூக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதன் பக்க விளைவுகளாக கடந்த சில தசாப்தங்களாக உலகெங்கும் குழப்பங்களை விளைவித்துக்கொண்டிருந்த மத அடிப்படைவாதம் பெருமளவில் பின்னடைவைச் சந்திக்கும். வணிக நோக்கில் முன்தள்ளப்படும் சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உலகெங்கும் பரவலடைவதற்கான சூழலை அரேபியா ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

தமது நாட்டில் சகல வளங்களும் இருந்தால் அந்நாட்டின் குடிமக்கள் மற்ற நாடுகளுக்குக் குடிபெயரத் தேவையில்லை.

இளவரசர் மொகாமெட் பின் சல்மான் துணிச்சலான இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவர். மத்திய கிழக்கு உருமாற்றம் பெறுவது உலகுக்கு நல்லது. மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது ஒரு வகையில் பொருளாதார நிர்வாண நிலையை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் தவம் தான்.

அரேபியாவில் அது ஆரம்பிக்கட்டும்.