நியூறாலிங்க்: இலான் மஸ்கின் மூளைக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தொடர்பாக அமெரிக்கா விசாரணை

ஒரு பரிசோதனைக்காக 80 பன்றிகளும் 2 குரங்குகளும் கொல்லப்பட்டன

விலங்கு வதைச் சட்டங்களை மீறுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலான் மஸ்கின் நியூறாலிங்க் கோர்ப் நிறுவனத்தின்மீது அமெரிக்க மத்திய நீதித்துறை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. குரங்கு போன்ற விலங்குகளில் மேற்கொண்ட பரிசோதனைகளின்படி மூளையில் பொருத்தப்படும் சிறு கணனி மூலம் சில உடலியக்கங்களைக் கட்டுப்படுத்த முடியுமென நியூறாலிங்க் நிறுவனம் கண்டுபிடித்திருந்தது. அப் பரிசோதனைகளை மனிதர்களில் விரிவுபடுத்துவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை மத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration (FDA)) அனுமதியைப் பெறவேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு தாம் விண்ணப்பைக்கவுள்ளதாக இலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நியூறாலிங்க் நிறுவனத்தைப் போலவே உலகில் வேறு பல நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் கணனி-மனித ஒருங்கிணைப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. விலங்குகளில் வெற்றிகரமாகச் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை மனிதரில் எப்படிச் செயற்படுமெனத் தெரியாதாகையால் இப்பரிசோதனைகளைப் பற்றி மத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றது. இதுவரை அது மேற்கொண்ட விசாரணைகளின்படி விலங்குவதைச் சட்டங்களை மீறுகிறது என பல உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி நியூறாலிங்க் நிறுவனத்தின்மீது மேலும் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கிறது என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பல நிறுவனங்களும் தமது பரிசோதனைகளை மனிதரில் விரிவுபடுத்துவதற்குப் போட்டி போட்டுக்கொண்டு முயற்சித்து வரும் நிலையில் இலான் மஸ்க் தனது நிறுவனமே முதலில் மனிதப் பரிசோதனைகளுக்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்ற விருப்பில் பணியாளர்களைத் துரிதப்படுத்தி வருகிறார் எனவும் அதற்காக அவர் சில ஆராய்ச்சி முடிவுகளைத் திரித்துக்கூற முயல்கிறார் எனவும் யூறாலிங்க் நிறுவனத்தின் 20 தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் உள்ளக தகவற் பரிமாற்றங்கள் முதலியவற்றை உதாரணம் காட்டி உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறிவருகிறது.

சில பரிசோதனைகள் திருப்தியான முடிவுகளைத் தராதபோது அவற்றை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் விலங்குகள் தேவையற்ற சித்திரவதைக்கும் இறப்புக்குமுள்ளாகின்றன என இப் பணியாளர்கள் கூறியதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படியான நான்கு வெவ்வேறு பரிசோதனைகளின்போது 80 பன்றிகளும் இரண்டு குரங்குகளும் இறக்கவேண்டி ஏற்பட்டது எனவும் இதனால் மேலும் பல விலங்குகள் இப்பரிசோதனைகளுக்கு உடபடுத்தப்படவுள்ளன எனவும் நியூறாலிங்க் பணியாளர் தெர்வித்துள்ளனர். இலான் மஸ்க் தனது பணியாளர்களை அவசரப்படுத்திவரும் காரணத்தினால் உரிய தயாரிப்புகளின்றி இவ்விலங்குகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றன என அப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனை காரணமாக கொல்லப்படும் விலங்குகள் பற்றிய தகவல்களைத் திருத்துக் காட்டுவதன் மூலம் நியூறாலிங்க் இதுவரை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றுவந்தது. ஆனால் தற்போது நியூறாலிங்க் நிறுவனத்தின் பணியாளர்கள் முன்வந்து மேற்கொண்ட முறைப்பாடுகளை முனவைத்து நிர்வாகம் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விரைவில் தனது மனிதப்பரிசோதனைகளை அங்கீகரிக்கவுள்ளது என மஸ்க் அறிவித்து சில நாட்களில் இவ்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தனது மூளைக் கணனி மூலம் இயக்கமிழந்தவர்கள் முற்றாக இயங்கு நிலையை எட்ட முடியுமெனவும், பார்வை இழந்தவர்கள் பார்வையைப் பெறமுடியுமெனவும் இதற்கான மனிதப் பரிசோதனைகள் ஆறு மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளது எனவும் மஸ்க் தெரிவித்திருந்தார். இப்படி கணனி பொருத்தப்பட்ட குரங்கொன்று தனது அவயவங்களைப் பாவிக்காது ‘மனத்தினால்’ மட்டும் ஒரு வீடியோ விளையாட்டு ஒன்றை விளையாடும் நிகழ்வை 2021 இல் இலான் மஸ்க் காட்டியிருந்தார். (Photo by Natasha Connell on Unsplash)