World

நியூசீலந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேர்ண் பதவி விலகுகிறார்!

அமெரிக்க அழுத்தம் காரணமா?

சிவதாசன்

நியூசீலந்தின் வரலாற்றிலேயே அதி பிரபலமான பிரதமர் எனப் புகழப்படும் ஜசிந்தா ஆர்டேர்ண் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ‘தொடர்ந்து பயணிக்க என்னிடம் போதுமான சக்தி இல்லை” என அவர் தனது அறிவிப்பின்போது குறிப்பிட்டிருக்கிறார். 6 வருடங்கள் தொடர்ந்து நியூசீலந்து நாட்டின் பிரதமராக இருந்த அவருக்கு உலகம் பரந்த பெருமதிப்பு இருக்கிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ‘ஐந்து கண்கள்’ எனப்படும் ஆங்கிலோ சாக்சன் தலைமைகளைக் கொண்ட ஐந்து நாடுகளில் ஆகப் பலம் குறைந்ததும், சனத்தொகை குறைந்ததும் நியூசீலந்து தான். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து ஆகியனவே இந்த ‘ஐந்து கண்கள்’. இந்த ஐந்து நாடுகளும் உலக இராணுவ இரகசியங்களைத் தமக்குள் பகிர்ந்து கொள்கின்றன. போர்கள் என்று வரும்போது இவை ஐந்தும் எப்போதுமே ஒன்றை ஒன்று விட்டுக்கொடுப்பதில்லை.

நியூசீலந்தின் பரப்பளவு பிரித்தானியாவை விடப் பெரியதாகினும் அதன் சனத்தொகை 5 மில்லியன்கள் மட்டுமே. அதன் கால்நடைகளின் எண்ணிக்கை பிரித்தானிய சனத்தொகையைவிட அதிகமானதாகும். சனத்தொகையின் 70% ஐரோப்பியர்கள் எனவும், 16.5% சுதேசிய மவோரிகாள் எனவும், 15.3% ஆசியர்கள் எனவும், 9% இதர பசுபிக் தீவுகளின் வாசிகள் எனவும் 2021 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீடு கூறுகிறது. ஆங்கிலம் , மவோரி மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகள். கிறிஸ்தவம், இந்து, பெளத்தம் ஆகியன முக்கிய மதங்களாக இம்மக்களால் பின்பற்றப்படுகின்றன.

இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜசிந்தா ஆர்டேர்ண் சற்று முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டவர் எனவும் வழமையான அமெரிக்க கெடுபிடிகளுக்கு கட்டுப்படாதவர் எனவும் அறியப்பட்டவர். அவரது வருகையின் பின்னர் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்ததுடன் அந்நாட்டுடன் சுமுகமான உறவும் வளர்த்திருந்தது. நியூசீலந்தின் பெரும்பான்மையான விவசாய உற்பத்திகளின் மிகப்பெரிய சந்தையாக சீனா இருந்து வருகிறது. ஆர்டேர்ணது பதவி விலகல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவரைச் சீனாவுக்கு வருகைதரும்படி சீனா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கும் சீனாவுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மீதி ‘நான்கு கண்கள்’ நாடுகளும் பிரதமர் ஆர்டேர்ண் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தன. ஆனால் நியூசீலந்தின் பொருளாதாராம் ஏறத்தாழ முற்று முழுவதிலும் விவசாயத்தில் நம்பியிருந்தமை காரணமாக சீனாவுடனான பொருளாதார உறவை முறித்துக்கொள்வது உகந்த விடயமில்லை என்பதை ஆர்டேர்ண் அறிந்திருந்தார். சீனாவுடனான முரண்பாட்டின் காரணமாக அவுஸ்திரேலியா, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டபோது ஆர்டேர்ண் அப்படியான் ஒன்றிற்குச் சம்மதிக்கவில்லை. அதே வேளை நியூசீலந்தின் இராணுவத்தைப் பலப்படுத்துவதிலும் ஆர்டேர்ண் அதிகம் அக்கறை காட்டவில்லை. இக்காரணங்களுக்காக இடதுசாரி முற்போக்கு கொள்கைகளைக் கொண்ட ஆர்டேர்ண் அமெரிக்க தலைமையிலான இதர நாடுகளின் அழுத்தம் காரணமாக பதவி விலக்கப்ப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

இதை விடவும் நியூசீலந்து நாட்டின் சுதேசிகளின் மொழி, கலாச்சாரப் பாவனைகளின் மீளெழுச்சி ஆர்டேர்ண் நிர்வாகத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்தது. இது அந்நாட்டின் ‘வெள்ளைத் தன்மையைக்’ குறைத்து பொலினேசியன் தனமையை அதிகரிக்கிறது என வலதுசாரிகள் பொங்கியெழுந்து வருவதும் அவர்மீதான அழுத்தம் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுதேசிகள் ஏறத்தாழ முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் ஒரு தீவிர வலதுசாரி. அவரது ஆட்சியின் கீழ் அவுஸ்திரேலிய – சீன உறவு விரிசலடைந்திருந்தது. அதே வேளை புதிய அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸும் ஒரு இடதுசாரி முற்போக்கு கொள்கைகளைக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்ததும் சீனாவுடனான உறவைப் புதுப்பிக்க முயற்சி செய்து வருகிறார். இவ்விடயத்தில் அவருக்கு ஆர்டேர்ணினது உதவியும் இருந்துவந்தது.

ஆர்டேர்ண் பதவி விலகல் மூலம் இந்தோ -பசிபிக் பிராந்தியத்தின் சமநிலையில் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சகல மக்கள் மீதும் பாரபட்சமின்றி மிகவும் நேசத்துடனும், மனிதாபிமானத்துடனும் ஆட்சி புரிந்த ஜசிந்தா ஆர்டன் போன்றவர்கள் கிடைப்பது அரிது. இவரது பதஹ்வி விலகலைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த இன்னொருவரே பிரதமார் ஆவார் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்க, வலதுசாரிகளின் அழுத்தங்கள் காரணமாக பிராந்திய அரசியல், பொருளாதார உறவுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கவல்ல, ஆர்டேர்ணைப் போன்ற ஒரு பலமான தலைவர் வருவாரா என்பது சந்தேகமே. (Image Credit: Wikipedia)