நியூசீலந்து ‘தீவிரவாதி’ காத்தான்குடியைச் சேர்ந்த மொஹாமெட் சம்சுடீன் – புதிய தகவல்கள் அம்பலம்


வெள்ளியன்று (செப். 03) நியூசீலந்து, ஓக்லாண்ட் நகரில் பொதுமக்கள் 6 பேரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய இலங்கையர், மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த 32 வயது, அஹமெட் ஆதில் மொஹாமெட் சாம்சுடீன் எனத் தற்போது தெரியவந்துள்ளது.

2011 அக்டோபர் மாதம் நியூசீலந்து நாட்டிற்குச் சென்ற சம்சுடீன் அகதியாக விண்ணப்பித்திருந்தார் எனவும் இரண்டு வருடங்களின் பின்னர் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது எனவும் அறியப்படுகிறது.

நியூசீலந்து ஹெரால்ட் பத்திரிகைச் செய்தியின்படி, சம்சுடீன் தனது அகதிநிலை கோரிக்கை விண்ணப்பத்தில் தன்னை ஒரு தமிழர் எனக் குறிப்பிட்டிருந்ததுடன், தமது அரசியல் நிலைப்பாடு காரணமாகத் தானும் தனது தந்தையும் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது உடலில் அதற்கான தடயங்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது. அவரது வழக்கில் இணைக்கப்பட்டுள்ள உளநோய் மருத்துவர் ஒருவரின் சாட்சியப்படி, இச்சம்பவங்களின் காரணமாக அவர் மன உளைச்சலுக்கும் (PTSD), மன அழுத்தத்துக்குமுள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தோடு, நியூசீலந்தில் குடும்பமோ, உறவினரோ அல்லது நெருங்கிய நண்பர்களோ இல்லாத நிலையில் அவர் சமூக வலைத் தளங்களால் இலகுவாக தீவிரவாதியாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பத்திரிகை விபரித்திருக்கிறது.

மார்ச் 2016 இல் சம்சுடீன் தனது முகநூல் பக்கத்தில் ஐசிஸ் மீதான தனது ஈர்ப்பு பற்றிப் பல பதிவுகளை இட்டிருந்தார். தான் சிரியாவுக்குச் சென்று ஐசிஸ் அமைப்பில் இணையப்போகிறேன் எனவும் அப்ப்டிப் போவதை அதிகாரிகள் தடுத்தால் தான் பொதுமக்களைக் கத்தியால் குத்துவேன் எனவும் சம்சுடீன் கூறியதாக அவரோடு மசூதியில் தொழுகைக்குச் செல்லும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்டபடியே, 2017 மே மாதம் ஒரு வழிப் பயணச்சீட்டுடன் சிஙக்ப்பூருக்குப் போக எத்தனிக்கும்போது அவர் அவர் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றமும், சிறையுமெனக் காலத்தைக் கழித்தார். பொலிஸ் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுடன் அவர் முரண்படுவதுவதும், முரண்டுபிடிப்பதும், வசைச்சொற்களால் ஏசுவதும், மேற்குநாடுகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதுமென அவரது நடத்தை பிறழ்வாக இருந்தது எனப் பொலிஸ் பதிவுகள் தெரிவிப்பதாக ஹெரால்ட் மேலும் குறிப்பிட்டுள்ளது.



இதன் காரணமாக நியூசீலந்து பொலிசார் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அவரது அகதி நிலை அந்தஸ்தை மீளப்பெறுவதற்கு குடிவரவுத் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது எனவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள நியூசீலந்து சட்டத்தின்படி “பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தயார் செய்வது” ஒரு குற்றச் செயலல்ல. பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அது ஒரு குற்றச் செயலாகும். இதனால் சம்சுடீன் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு என எதையும் சுமத்த முடியாமல் இருந்த்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த நியூசீலன்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி மத்தியூஸ் டவுண்ஸ் “இதை ஒரு குற்றச்செயலாகப் பிரகடனம் செய்வது பாராளுமன்றத்தின் கடமை” எனக்கூறியுள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இச்சட்ட நிறைவேற்றலைத் துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டேர்ண் தெரிவித்துள்ளார்.