NewsWorld

நியூசீலந்து | ஆறு பேரைக் கத்தியால் குத்திய இலங்கையர் சுட்டுக் கொலை!


பல்பொருள் அங்காடியில் பயங்கரம், சந்தேக நபர் ஐஸிஸ் தீவிரவாதி?

நியூசிலந்து, ஓக்லாந்து நகரில் பல்பொருள் அங்காடியொன்றில் ஆறு பொதுமக்களைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியவர் இலங்கையைச் சேர்ந்த, ஐசிஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ண் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பொலிசாரது கண்காணிப்பில் இருந்த இத் தீவிரவாதி நியூசீலந்தில் 10 வருடங்களாக வாழ்ந்துவந்தவர் எனவும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருந்தவர் எனவும் அறியப்படுகிறது.

நேற்று (செப் 03) பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட இத் தீவிரவாதியின் பெயரை வெளியிட பிரதமர் இதுவரை மறுத்து வருகிறார்.

இத் தீவிரவாதியின் நடவடிக்கைகளைக் கடந்த 5 வருடங்களாகப் பொலிசார் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்ததாகவும், குறிப்பிட்ட தினம் இந்த நபர் ‘நியூ லின் சுப்பர் மர்க்கெட்’ அங்காடிக்குள் நுழைந்து தள்ளு வண்டியொன்றை எடுத்துக்கொண்டு சாதாரண வாடிக்கையாலர்களைப் போலப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார் எனவும் அப்போது, உள்ளே வாடிக்கையாளர் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்ததனால் தம்மை அடையாளப்படுத்தாமல் பொலிசார் வாசலில் நின்று சுமார் இரண்டரை நிமிடங்களாக அவரை அவதானித்தனர் எனவும் கூறப்படுகிறது.

அப்போது இந் நபர் திடீரென விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு ‘அல்லாஹு அக்பர்’ என்று குரலெழுப்பியவாறு பித்துப் பிடித்த நிலையில் ஓடி ஓடி, அங்கு நின்ற மக்களைப் பாரபட்சமின்றிக் கத்தியால் குத்தினார் எனவும், கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு ‘நியூசீலந்து ஹெரால்ட்’ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

கத்தியால் குத்த ஆரம்பித்து 60 செக்கண்டுகளில் தீவிரவாதியைப் பொலிசார் கொன்றுவிட்டனர் எனவும், இச் சம்பவத்தின்போது அவரோடு வேறு எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸ் ஆணையாளர் ஆண்ட்றூ கொஸ்ரெர் கூறியுள்ளார்.

“இக் குறிப்பிட்ட நபர் மீது நீதிமன்றம் விதித்த சில கட்டளைகளின் காரணமாக அவரைப் பொலிசார் கண்காணித்து வந்தனர்; இச் சம்பவத்தின் காரணமாக நாங்கள் அம் மனிதரைத் தாண்டி, ஒரு மத நம்பிக்கை மீது காழ்ப்புணர்வைக் கொட்ட முடியாது” என பிரதமர் ஆர்டெர்ண் தெரிவித்துள்ளார்.



இக் குற்றத்தைப் புரிந்தவர் பொலிசாரால் கண்கானிக்கப்பட்டு வந்தாலும், முன்னர் குற்றமேதும் புரியாமையால் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க முடியாதிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 15, 2019 இல் கிறைஸ்ட் சேர்ச் நகரில், வெள்ளை இனத் தீவிரவாதி ஒருவரால் இரண்டு மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட சூட்டுச் சம்பவத்தின்போது 51 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். “வெள்ளியன்று நடைபெற்ற இச் சம்பவம் 2019 சம்பவத்திற்கான பழிவாங்கலாகவும் இருக்கலாம்” எனப் பிரதமர் ஆர்டெர்ண் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

குற்றவாளியைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தும் அவரை ஏன் சிறையில் தள்ளவில்லை எநச் சில பொதுமக்களும் ஊடகங்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காயப்ப்ட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலும், ஒருவர் தீவிர நிலையிலும் மீதமானோர் ஓரளவு மிதமான நிலையிலும் உள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ராய்ட்டர்)