World

நியூசீலந்தில் பசுக்குசு வரிக்கெதிராக விவசாயிகள் போராட்டம்!

நியூசீலந்தில் விவசாயிகள் வயல்களை விட்டுத் தெருவுக்கு இறங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ணால் அறிவிக்கப்பட்ட ‘பசுக்குசு’ வரிக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவென அவர்கள் தமது உழவுயந்திரங்கள் சகிதம் வீதிகளை முற்றுகையிடுகிறார்கள்.

‘விவசாய உமிழ்வுகள் வரி’ (Agricultural Emissions Tax) எனப்படும் இவ்வரி விவசாயிகளின் பசுக்கள் வெளிவிடும் குசுக்களையும் (farts) ஏவறைகளையும் (burbs) கட்டுப்படுத்துவதற்கென அறிவிக்கப்பட்டிருந்தது. இச்செயற்பாடுகளின்போது வெளிவிடப்படும் வாயுக்களில் காணப்படும் மீதேன் மற்றும் நைட்றஸ் ஒக்சைட் வாயுக்கள் சூழல் வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கின்றன என்பதுவேயல்லாது அவற்றின் மணம் காரணமல்ல எனக் கூறப்படுகிறது.

விவசாயிகளின் நலன்புரி அமைப்பான ‘கிரவுண்ட்ஸ்வெல் நியூசீலந்து’ (Groundswell Newzeland) 50 நகரங்களில் ஆர்ப்பாட்டங்களைச் செய்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இப் போராட்டங்களில் தமது உழவுயந்திரங்கள் மற்றும் ட்றோண்களுடன் தெருக்களை முற்றுகையிட்டு வருகிறார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2025 இல் ஆரம்பமாகவிருக்கும் இவ்வரியினால் தாம் தொழில்களை விட்டுவிடவேண்டி ஏற்படுமெனவும் அத்தோடு இத் தொழில் வேறு நாட்டு விவசாயிகளினால் முன்னெடுக்கப்படும்போது அங்கு இக்கட்டுப்பாடுகள் இருக்காது என்பதால் சூழலை ஒருபோதும் பாதுகாக்க முடியாது என்பது விவசாயிகளின் வாதம். சில விவசாயிகள் இவ்வரியைச் செலுத்துவதற்கு தாம் மறுப்புத் தெரிவிப்போம் என முழங்குகிறார்கள்.

மாடுகளின் எண்ணிக்கை, உரப்பாவனை ஆகியவற்றைக்கொண்டு இம்மாடுகள் வெளியேற்றும் வாயுக்களின் அளவு உத்தேசிக்கப்படுமெனவும் இப்ப்டியாகக் கணிக்கப்படும் வரித் தொகையை விவசாயிகள் வருடத்துக்கு ஒருமுறை அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. சூழ்லுக்கு நட்பான பொருட்களைத் தயாரிப்பதன்மூலம் இவ்விவசாயிகள் பாவனையாளரிடம் அதிக பணத்தை வசூலித்து இவ்வரியைச் சமாளிக்கமுடியுமென அரசு தரப்பு கூறுகிறது.

நியூசீலந்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையைவிட இரண்டுமடங்கு மாடுகளும் ஐந்து மடங்கு செம்மறியாடுகளும் உள்ளன. பாலுணவுகளே இந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாகும். இந்நாட்டின் மீதேன் வாயு வெளியேற்றத்தின் அரைவாசி மாடுகளினால் வெளியிடப்படுகிறது. இதனால் இவ்வரியை ‘பசுக்குசு வரி’ என அழைக்கிறார்கள்.

2050 இற்குள் நியூசீலந்தை ஒரு ‘கார்பன் நடுநிலை’ (carbon neutral) நாடாக ஆக்குவதென அதன் பிரதமர் ஜசிந்தா சபதமெடுத்திருக்கிறார். 2030 இல் இம் மந்தை வாயு வெளியேற்றத்தை 10%த்தாலும் 2050 இல் 47%த்தாலும் குறைப்பது என்பது அவரது சபதம். 2003 இல் இப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டபோது விவசாயிகளின் போராட்டத்தால் அது கைவிடப்பட்டிருந்தது.