EnvironmentWorld

நியூசிலாந்தில் பெரு வெள்ளம்!

60 மணித்தியாலங்களில் 1000 மி.மீ. மழை பெய்தது!

பெப்ரவரி 5, 2020

நியூசிலாந்தின் சவுத்லாண்ட் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கடும் மழையினால் பெரு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கானோர் தமது வீடுகளை விட்டுக் குடிபெயர்ந்துள்ளார்கள்.

ஒதுக்குப்புறமாகவுள்ள மில்ஃபோர்ட் சவுண்ட் என்னும் இடத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாவாசிகள் வெளியேறமுடியாமற் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 60 மணித்தியாலங்களில் 1000 மி.மீ. (39 அங்குலம்) மழை பெய்ததாகவும் இதனால் சவுத்லாண்ட் பிரதேசத்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது. வெள்ளம் கரைகளை உடைத்துப் பாய்வதாகவும், மண்சரிவுகள் பாதைகளை மூடிக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

தாழ் பிரதேசங்களான கோர், மதோரா பகுதிகளிலுள்ள மக்கள் ஏற்கெனவே இடம் பெயர்ந்துள்ளதாகவும், விண்ட்ஹாம் பகுதி மக்கள் இடம்பெயர்த் தயாராகுவதாகவும் சவுத்லாண்ட் அவசரகால முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மில்ஃபோர்ட் சவுண்ட் சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ஒரே பாதையையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதால் அங்கு சென்ற 200 சுற்றுலாவாசிகளை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.