நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி மாநாட்டில் த.தே.கூ. கலந்துகொள்ளுமா?
ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவினால் நாளை (மார்ச் 23) கூட்டப்படும் அனைத்துக்கட்சி மாநாட்டில் இ.தொ.கா. உடபடப் பல கட்சிகள் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வழி வகைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என சமாகி ஜன பலவேகய, ஜே.வி.பி., இ.தொ.கா., தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பிவித்துறு ஹெல உறுமய (கம்மன்பில) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாம் இம் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள், ஐ.தே.க. ஆகியன தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.
அனைத்துக் கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டி நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி பிரதான எதிர்க் கட்சி நீண்ட காலமாகக் கேட்டு வந்த போதிலும் ” இந்த அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தவறிவிட்டபடியால் தற்போது அழைக்கப்பட்டிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது பொதுமக்களின் கண்கள் மீது மண்ணைத் தூவும் அரசாங்கத்தின் திட்டம் ” எனக் கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக ச.ஜ.பலவேகய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.
சிறிலங்க சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு இணைய ஜனாதிபதி இம் மாநாட்டைக் கூட்டியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, மகரகமவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். “இம் மாநாட்டை ஒழுங்கு செய்த விதம் தமக்குப் பிடிக்கவில்லை எனவும், மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கு முதல் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதற்காகவே நாம் இம் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்திருக்கிறோம்” என கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
“தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாகவே இம் மாநாடு கூட்டப்படுகிறது. இப் பிரச்சினையிலிருந்து மக்களைப் பாதுகாப்பது அவசியம். எனவே நாம் இம் மாநாட்டில் கலந்துகொள்வோம்” என சி.ல.சு.க. தலைவர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்ப்பது தொடர்பாக ஜனாதிபதியுடனான நேரடிச் சந்திப்பொன்றுக்கு த.தே.கூட்டமைப்பு பல தடவைகள் முயற்சி செய்தும் அவை ஏதும் கைகூடாத நிலையில் இந்தத் தடவை ஜனாதிபதியின் அழைப்பை அது ஏற்றுக்கொள்ளுமா என்பது கேவிக்குறியாகவே உள்ளது.