நாய்களை விடுவிக்க மறுத்த IIT-சென்னை வளாகத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கருத்தடை மற்றும் தடுப்பூசி மருந்தேற்றுவதென்ற காரணத்தைக்கூறி தமது வளாகத்தில்தடுத்துவைத்திருந்த நாய்களை விடுவிக்குமாறு சென்னை நீதிமன்றம் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (IIT-Madras) சென்னை வளாகத்திற்குக் கட்டளையிட்டிருக்கிறது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த 186 நாய்களில் 57 இற்குமதிகமான நாய்கள் உரிய பராமரிப்பின்மையால் மரணமடைந்துவிட்டன எனக்கூறி விலங்குரிமைச் செயற்பாட்டாளர்கள் இந் நாய்களை விடுதலைசெய்யும்படி நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்திருந்தனர்.

ஏறத்தாழ ஒரு வருட இழுபறிகளின் பின்னர், தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 நாய்களை விடுதலை செய்யும்படி டிசம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த அக்டோபர் 2020 இலிருந்து இந் நாய்களை இக் கல்லூரி மிக மோசமான நிலைகளில் தடுத்துவைத்திருக்கின்றது. இவற்றில் 57 நாய்கள் இறந்துவிட்டன என்பதை கல்லூரி நிர்வாகம் ஒத்துக்கொண்டிருக்கிறது எனினும் 110 நாய்களுக்கு என்ன நடந்து என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. சிலவற்றைப் பொதுமக்கள் தத்து எடுத்துவிட்டார்கள் எனக்கூறி இதற்கான பத்திரங்களைப் பகிர்வதற்கு சட்டம் அனுமதிக்காது எனக்கூறிக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இவற்றில் 19 நாய்கள் நாய் பாதுகாப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.



“நாய்ப் பூங்கா” எனப்படும் கூண்டுகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்நாய்களின் நிலையைப் பரிசோதிக்கவென தமிழ்நாடு அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரியின் அறிக்கைப்படி நவம்பர் 29-30 திகதிகளில் இப் ‘பூங்காவில்’ 62 நாய்கள் மட்டுமே இருந்தன எனத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும்போது 22 நாய்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அந்த 9 நாட்களில் எஞ்சிய நாய்களுக்கு என்ன நடந்தது என கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியனின் கோரிக்கையையையும் மதிக்காமல், தத்தெடுக்கப்பட்டதாகக் கூறும் 34 நாய்கள் பற்றிய பத்திரங்கள் எதையும் கொடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

கல்லூரி வளாகத்தில் நடமாடுகின்ற தெரு நாய்களின் எச்சங்களாலும் அவை குரைப்பதால் எழும் சத்தங்களினாலும் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தால் இந் நாய்கள் மீது பொய்க் காரணங்களைக் கூறிக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. விலங்குரிமைச் செயற்பாட்டாளர்கள் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்தாலும் முந்தைய அரசின் ஆதரவுடன் கல்லூரி நிர்வாகம் இவற்ரைச் சமாளித்து வந்தது. விலங்குரிமை அமைப்புக்களைக் கொண்டு தமக்கு ஆதரவான அறிக்கைகளைத் தயாரித்து அரசையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்தது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் விலங்குரிமைச் செயற்பாட்டளர்களின் கரிசனையைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுத்தமையால் இது சாத்தியமாகியிருக்கிறது எனக்கூறப்படுகிறது.