India

நாயிறைச்சியைத் தடை செய்தது நாகலாந்து அரசு!

விலங்குரிமைச் செயற்பாட்டாளார் பெருமிதம்

இந்திய மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து, நாய் இறைச்சி இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைத் தடைசெய்துள்ளது. விலங்குரிமைச் செயற்ப்ட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக நாகலாந்து மாநில அரசு இம் முடிவை எடுத்துள்ளது.

இது ஒரு முக்கியமான திருப்புமுனை என செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது மாநிலத்தின் உணவுக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என சில குடிமைச் சமூகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல மாநிலங்களில் நாய் இறைச்சி உண்பது சட்டவிரோதமானது. எனினும், சில வட கிழக்கு பிரதேசங்களில் அது ஒரு சுவையான உணவெனக் கருதப்படுகிறது.

“வர்த்தக நோக்கங்களுக்காக நாயிறைச்சியை இறக்குமதி செய்வதும், நாய்களை சந்தைகளில் விறபனை செய்வதையோ, சமைத்தோ, சமைக்காமலோ நாயிறைச்சியை விற்பனை செய்வதோ நாகலாந்தில் இனிமேல் சட்டவிரோதமானது என மந்திரிசபை தீர்மானித்துள்ளது” என நேற்று நாகலாந்தின் பிரதம செயலாளர் ரெம்ஜென் ரோய் ருவீட் செய்திருக்கிறார்.



ஒரு விலங்குச் சந்தையில் நாய்கள் சாக்குகளில் கட்டிப்போடப்பட்டிருந்த படம் சமூக வலைத் தளங்களில் சமீபத்தில் வெளிவந்து பலரது எதிர்ப்புகளையும் பெற்றிருந்தது.

கால்கள் கட்டப்பட்டு கொல்லப்படுவதற்குத் காத்திருக்கும் நாய்களின் ஒளிப்படங்கள் மிகவும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தன என இந்திய விலங்குப் பாதுகாப்பு அமைப்பு (FIAPO) இப் பதிவுகள் தொடர்பாகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்ததுடன் நாய் இறைச்சி விற்பனையை உடனடியாகத் தடைசெய்யும்படி நாகலாந்து அரசையும் கேட்டிருந்தது. இதே போல் PETA எனும் இன்னுமொரு அமைப்பும் நாயிறைச்சி விற்பனையைத் தடைசெய்யும்படி நாகலாந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.