நாமெல்லாம் திராவிடர்
சிவதாசன்
மனநலம் நன்குடையா யாயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
பிறவியிலேயே நல்ல மனம் உடையவராக இருந்தாலும் சேர்ந்த இனம் நன்றாக இருப்பது சான்றோர்க்குக் காப்பான வலிமையுடையதாகவிருக்கும் என்று வள்ளுவர் சொல்கிறார். எங்கள் இனத்தைப் பற்றி நினைக்கும்போது இந்தக் குறள் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
தமிழினம் இப்படியாகத் தெருத் தெருவாக. நாடு நாடாக அலைவதற்கும் ஏதாவது காரணம் இருக்க முடியுமோ? அப்படியாயின் எங்கள் மனங்கள் நல்லனவாய் இல்லை என்று பொருள் கொள்ள முடியுமோ?
வெள்ளைக் காரர் இனத்துவேஷிகள் என்று ஊர்வலம் போகிறோம். அப்படியிருந்தும் இன்னும் எங்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். சிங்களவர்களைக் காட்டு மிராண்டிகள் என்று தூற்றிக் கொள்கிறோம். அவர்களது காடுகளில் எங்களவர்கள் இன்னும் கானமிசைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லைகளை எடுத்துவிட்டுப் பாருங்கள். மக்கள் எங்கு ஓட எத்தனிக்கிறார்களோ அங்குதான் அவர்கள் விரும்பும் எதுவோ இருக்கிறது.
நமது மனங்கள் நன்றாகவே இல்லை. அதனால் தான் பெருந்துன்பங்களை நாம் அனுபவிக்கிறோம்.
சமீபத்தில் ரொறோன்டோவில் தேடகம் நூலகம் இனம் தெரியாதவர்களால் எரிக்கப்பட்டது. கிடைத்தற்குரிய பல நூல்கள், ஓவியங்கள், ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. யார் எரித்தார்க்ள? இவர்கள் மனம் எப்படிப்பட்டதாய்ட இருக்கும்? யாழ் நூலகத்தைச் சிங்கள இராணுவம் எரித்தபோது உலகமே கண்ணீர் வடித்தது. இதயமில்லாதவர்கள், சிந்திக்கத் தெரியாதவர்கள், காட்டு மிராண்டிகள் என்றெல்லாம் அவர்களை நாம் வர்ணித்தோம். இன்று அதே தமிழர் எமது நூலகங்களையே எரித்துக் கொள்கிறார்கள். யாருக்கு இதயமில்லை? யாருக்கு மூளையில்லை?
பாரிஸில் சபாலிங்கம் கொலை செய்யப்பட்டபோது அவரைப் பற்றித் தூற்றி எழுதியது ஒரு தமிழ்ப் பத்திரிகை. தேடகம் நூலகம் எரிந்து சாம்பலாயிருக்கும்போது அதைத் ‘தேடகக்காரரே’ எரித்துக் கொண்டார்கள் என்று ஒரு தமிழ்ச் செய்திச் சேவை செய்தி திரிக்கிறது.
இப்படியெல்லாம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் இந்தத் தமிழுடம்புகட்குக் கூச்சமொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனங்கள் ரொம்பவும் அழுகிப் போய்விட்டன. நாங்கள் நடுத்தெருவில் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியவர்கள். எங்களுக்கு ஏன் கல்வி? எங்களுக்கு ஏன் அறிவு? எங்களுக்கு ஏன் கலாச்சாரம்?
தேடகம் நூல் நிலையத்தைப் பற்றிப் பலரும் பலதையும் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் அவர்களது நூலகத்தைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு மேடையமைத்துக் கொடுக்கிறார்கள். அவர்களது சேவைகள் அளப்பரியது. இத்தனைக்கும் இச் சேவைகளைச் செய்வதற்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது மத ஸ்தாபனங்களிடமிருந்தோ ஒரு செப்புக் காசுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தமது சொந்தக் காசுகளைக் கொட்டிக் கொட்’டி தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். கட்டிடத்திற்கு வாடகைப் பாக்கியிருந்துங்கூட வாசகர்களுக்கு எந்தவித பாக்கியும் வைக்காது கடமை செய்தவர்கள். அந்த நூலகம் இப்போது சில தமிழர்களால் எரிக்கப் பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் ஒரு விபத்தக இருந்திருப்பினுங்கூட அதற்காக அனுதாபம் தெரிவிப்பது தான் நாகரீகம். அதை விட்டு விட்டு இந்த எரிப்பையும் இந்த இளைஞர்களின் நல்ல நோக்கத்தையும் கொச்சைப் படுத்துவது போல் எழுதுவதும் பேசுவதும் எந்த ரகம்? இவர்கள் எல்லாம் எனது இனத்தவர்கள்’! இதுவேதான் இவர்களது குணாம்சமானால் எனக்கு அந்தச் சம்பந்தமே வேண்டாம். இந்த இனம் அழியட்டும். எரியட்டும்! எக்கேடு கெட்டுப் போகட்டும்! நூறு குடங்களில் நுங்கினாலென்ன, நூறு மடங்களில் தங்கினாலென்ன, நூறு முடங்களை மொங்கினாலென்ன இனமெதுவோ குணமதுதான்!
நாமெல்லாம் திராவிடர்!
அசை: தாயகம் 27-05-1994