News & AnalysisSri Lanka

நாமல் ராஜபக்ச விரைவில் பிரதமாராகலாம்? – அடுத்த சில வாரங்களுக்குள் மந்திரிசபையில் மாற்றங்கள்

அடுத்த சில வாரங்களுக்குள் மந்திரிசபையை முற்றாக மாற்றியமைக்க ஜனாதிபதி ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடமாட்ட முடக்கம் தளர்த்தப்பட்டதும் நாட்டின் பொருளாதரத்தைத் துரிதமாக முன்னேற்றுவதற்கு இது அவசியமென அவர் கருதுவதாகவும் இதுவரை செயற்திறன் குறைவாகச் செயற்பட்டுவந்த அமைச்சுக்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன எனவும் தெரிய வருகிறது.

இம் மறுசீரமைப்பின்போது, பல மூத்த அமைச்சர்கள் தரம் குறைக்கப்படவும் பலர் முற்றாக மாற்றப்படவும், செயற்திறன் மிக்க இளையர்வர்கள் பலர் அமைச்சர்களாக்கப்படவும் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இச் சீரமைப்பின்போது நாமல் ராஜபக்ச முக்கியப்படுத்தப்படலாமெனவும் விரைவில் மஹிந்த தனது பதவியைத் துறந்து மகன் நாமலைப் பிரதமராக்க எண்ணியுள்ளதாகவும் உள்ளக தகவல்களைக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பசில் ராஜபக்சவுக்குத் தனது நிதியமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ச முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்று நாமலைப் பிரதமராக்குவது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.