நான் ஜே.வி.பி. இற்கே வாக்களிப்பேன் – | அருந்ததி சங்கக்கார
நான் ஜே.வி.பி.யிற்கே வாக்களிப்பேன்
– அருந்ததி சங்கக்காரஐ.தே.கட்சி என் இரத்தத்தில் இருக்கிறது. சரத் பொன்சேகாவிற்காக நான் அன்னப்பறவைச் சின்னத்துக்கு எதிராக நான் அடையாளமிடும்போது என் கைகள் நடுங்கின. 2015 இல் தற்போதய கோமாளி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக அதே அன்னப்பறவைக்கு வாக்களிக்கும் போதும் அதே நிலைமைதான். ஆனாலும் அதை நான் செய்திருந்தேன், காரணம் நான் ஒரு ஐ.தே.கட்சி அங்கத்தவர்.
ஐ.தே.கட்சியும் அதன் ‘வர்க்க’ அடையாளமும்
என்னைப் பொறுத்தவரையில் ஐ.தே.க. எனது ‘வர்க்க’ அடையாளத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியாதாகவே நம்பினேன். ‘வர்க்கம்’ எனப்படுவதன் அர்த்தம் மிகவும் சிக்கலானது. அது பல கூறுகளைக் கொண்டது: உங்கள் முகவரி, செல்வம், முதன்மையான மொழி, ஆங்கிலத்தைப் பேசும் முறை, எதை வாசிக்கிறீர்கள், எதைப்பற்றி உரையாடுகிறீர்கள், எவ்வித அரங்க நிகழ்வுகளுக்குப் போகிறீர்கள், எப்படியான விடுமுறைகளைக் கழிக்க விரும்புகிறீர்கள், யாரை எள்ளுகிறீர்கள், யாருடன் சிரித்து மகிழ்கிறீர்கள், எது நடப்பு நாகரீகம், எது நகைப்புக்குரியது, எதற்கெல்லாம் ‘வழிந்து’ போகவேண்டியது. ஐ.தே.கட்சிக்கு வாக்களிப்பதென்பது ‘உயர் வர்க்கத்தின்’ ஒரு அம்சம்.
ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கும் ‘உயர் வர்க்கம்’ கொழும்பு 3, 7 வட்டாரங்களிலிருந்து திடீரென முளைத்தது அல்ல. பலரும் கிராமங்களிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்த குடியேறிகள் தாம். வெற்றிலை சப்பும், கள்ளை மோகிக்கும், கசிப்பைக் குடிக்கும், மஹிந்தவுக்கு வாக்களிக்கும் கிராமதுப் பூசணிக்காய் உறவினர்கள் இவர்களுக்கும் உண்டு. இந்த உறவினர்கள் தொலைபேசிகளில் உரத்துப் பேசுபவர்கள், நீண்ட கதைகளைச் சொல்பவர்கள். சாதி, மதங்களை வைத்து இன்னும் வெளிப்படையாகவே வெறுப்பைக் காவித் திரிபவர்கள். ஆனால் அவர்களை நம்முடனோ, நமது உடனடி உறவுகளுடனோ அல்லது எமது ஐ.தே.க. நண்பர்களுடனோ இனம் காட்டாது நாம் விலக்கிவிட்டு விடுகிறோம். ஐ.தே.கட்சியினர் அப்படியானவர்கள் அல்ல என்றே எமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஐ.தே.கட்சியினர் முற்போக்கானவர்கள், தாராளவாதிகள், வலதுசாரிகள். ஐ.தே.கட்சிக்கு வாக்களிப்பது என்பது ஒரு அரசியல் கூற்று அல்ல. அது ஒரு உண்மையான அல்லது கற்பனாவாதம் கலந்த மேல்தட்டுவர்க்க உணர்வின் வெளிப்பாடு.
கொடுங்கோல் ராஜபக்சக்களிற்கு எதிரான எனது சிறந்ததும் ஒரே ஒரு ஆயுதமும் ஐ.தே.கட்சி தான். ராஜபக்சக்களையும், வீரவன்சக்களையும், சி-சி களையும், ‘ராக்கெட்’ களையும், நமால்களையும், நில் பலாகயவையும், யோ-யோக்களையும், கொள்ளையடிப்புக்களையும், கொலைகளையும் நான் வெறுப்பவள். ஐ.தே.கட்சியின் கொலைகள், கொள்ளைகளைப் பெருமைப்படுத்துவதில் எனக்கொரு பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லா இனங்களையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரே கட்சி ஐ. தே. க. என்பது மட்டுமல்ல நிரந்தர ராஜபக்ச ஆட்சியைத் தடுக்கவல்ல கட்சி இப்போதைக்கு அது ஒன்று தான்.
அதனால் எனது கட்சி ஐ.தே.கட்சி, ரணில் தான் எனது தலைவர் என்ற நினைப்புடன் தான் நான் வளர்ந்தேன். ரணில் விக்கிரமசிங்க மீதான விமர்சனங்களை என்மீதான தனிப்பட்ட விமர்சனங்களாகவே கருதினேன். அவர் தோல்விகளுக்காகவே பிறந்தவர் என்று கூறப்படும்போதெல்லாம் அதை மறுதலிக்க நீண்ட விளக்கங்களைக் கொடுப்பேன்.
ரணில் தோற்றுப்போவதற்காகப் பிறந்தவர் அல்ல என்பதை இப்போதும் நான் நம்புகிறேன். அது நியாயமானதல்ல.
ரணில் நாளுக்கு நாள் தோற்றுப்போகும் ஒருவர்.
ரவி கருணாநயக்கா ஒரு ‘பால் ஹொறா’ என யாராவது அழைத்தால் ‘மிஸ்டர் பத்து வீதம்’ என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ச மீதான புள்ளி விபரங்களை நான் தருவேன்.
அப்படியானால் ‘நான் ஜே.வி.பி. இற்கே வாக்களிப்பேன்’ என்ற தலைப்பில் ஏன் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்?
ஐ.தே. கட்சி எப்படித் தன் ஆதரவுத் தளத்தை அழித்துக் கொள்கிறது?
2015 இல் ‘நல்லாட்சி’ நிதர்சனமானது. நியமன விடயங்களில் ஐ.தே.க. ‘காட்டாட்சி’ யாக நடந்துகொண்டது. அத்தோடு கட்டாயக் கொள்ளைகளிலும் (நிதிப் பத்திர மோசடி) ஈடுபட்டது. மிக மோசமான ஊழல் அமைச்சர்கள் தமது கைக்கூலிகளைக் கொள்ளையடிப்பதற்காகவே பொது நிறுவனங்களில் நியமனம் கொடுத்தார்கள். இதன் மூலம் அரசியல்வாதிகளும் அவர்களது கைக்கூலிகளும் தம் தேர்தல் செலவுகளை மீட்டெடுத்தார்கள். ஒப்பந்த முறையீடுகள், தரகு வாங்குதல், காம லீலைகளினால் சட்டமும் ஒழுங்கும் சீர் கெடுதல், நிர்வாகம், அறநெறி, ஒழுக்கம், புனிதம் எல்லாமே பிழைத்துப் போயின.
மிகவும் உறுதியான ஆனல் அதிர்ச்சியடைந்த ஐ.தே.க. ஆதரவாளர்களாக நாங்கள் இதை எதிர்த்துப் போராடவேண்டுமெனத் தீர்மானித்தோம். குடிமக்களாக, அரச சேவகர்களாக, ஒழுக்கம் மிக்க மக்களாக, ‘ஐ.தே.கட்சிக்காரர்களாக’ நாம் எதிர்த்தோம். இரண்டு வருடங்களாக நாம் கடிதங்கள் எழுதினோம், எதிர்ப்புகளைக் காட்டினோம், கணக்கு வழக்குகளைப் பரிசீலிக்கச் சொன்னோம், தகவல் அறியும் உரிமைகளின் மீது விண்ணப்பங்கள் அனுப்பினோம். எல்லாவித நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனாலும் நாங்கள் மிக மோசமான தோல்வியையே சந்தித்தோம். நகைப்புக்குரியவர்கள் ஆக்கப்பட்டோம். இப் போராட்டத்திற்கு அரசியல் பின்னுதவி தேவையென்பதை உணர்ந்துகொண்டோம். ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, சக்தி வாய்ந்த அமைச்சர்கள், அமைச்சரவைச் செயலாளர்கள் எல்லோருடனும் இந்த ஐ.தே.கட்சி மோசடி நியமனங்கள், பொது நிறுவனங்கள் சீரழிக்கப்படுதல் என்பன பற்றித் தொடர்பு கொண்டோம்.
இது தொடர்பான ஒவ்வொரு ஐ.தே.க. அமைச்சரது எதிர்வினையும் கட்சியின் பிம்பமாகவே இருந்தது. ஒரு மூன்று வயதுப் பிள்ளை திருப்பித் திருப்பிக கதை சொல்வதைக் கேட்பது போல் அவர்கள் எங்களது குறைகளை மிகவும் தீர்க்கத்துடன் கேட்டுக் கொண்டார்கள். நேர்த்தியான, உகந்த முகபாவனைகளுடனும் தேவையான இடங்களில் ‘த்சு’ கொட்டியும் கேட்டுக் கொண்டார்கள். ‘நடந்தது பிழை’, ‘இதைப்பற்றி ஏதாவது செய்தேயாகவேண்டும்’, ‘இங்கே கடிதம் எழுதுங்கள்’, ‘அங்கே கடிதம் அனுப்புங்கள்’ என்று கூறினார்கள். இருப்பினும் ‘அந்த மந்திரி மிகவும் பலம் வாய்ந்தவர். அவரை நீங்கள் அசைக்க முடியாது. ‘பெரிசு’ க்கு அவர் தேவை. நீங்கள் ஏன் உங்கள் திணைக்களங்களிலிருந்து மாற்றல் பெற்று வேறிடங்களுக்குப் போகக்கூடாது’ என்பனவே அவர்களது பதில்களாக இருந்தன.
தேனீரைக் குடித்தபடியே நாங்கள் தலைகளை ஆட்டினோம்.
நான் ஜே.வி.பி. யைச் சந்திக்கப் போகிறேன்.
‘ஐ.தே.கட்சியின் இந்த பெரிய மனிதர்களை விட்டுவிடுவோம். அவர்கள் எங்களைப் பாவிக்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால் “எங்கள் திருடர்களை நாங்கள் பாதுகாக்கின்றோம்” என்பதே எங்கள் முடிவாக இருந்தது. “நாங்கள் நிர்வாகச் சீரழிவைச் செய்தாலும் இலட்சியவாதிகளான நீங்கள் எங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல் வாக்களிக்கவும் செய்வீகள்” என்பதுவே அவர்களது எண்ணமாகவிருந்திருக்கும்.
ஐ.தே.கட்சி சம்பந்தமான எங்கள் தேர்வில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டோம்.
ஒரு நாள் நான் எனது சகாக்களிடம் சொன்னேன் ‘நான் ஜே.வி.பி. யைச் சந்திக்கப் போகிறேன்’ என்று
ஜே.வி.பி. பற்றி எமக்கு எப்படியாக வர்ணிக்கப்பட்டது
எமது ‘உயர் வர்க்க’ உலகில் ஜே.வி.பி. பற்றிய கருத்தோட்டம் எப்படி இருந்தது, எமது மூத்தோர்கள் ஜே.வி.பி. பற்றி என்ன சொல்லியிருந்தார்கள்? “ஜே.வி.பி. என்பது வியர்வை மணக்கும் ஏழை மக்களுக்கானது. அழகானவர்களை அவர்கள் வெறுப்பவர்கள், நல்ல ஆடைகளை அணிபவர்கள், நல்ல வாகனங்களை வைத்திருப்பவர்கள், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள் மீது அவர்கள் பொறாமைப் படுபவர்கள். பல்கலைக் கழக மாணவர்களைப் பகிடிவதை செய்வதோடு காமச் சேட்டைகளையும் செய்பவர்கள். ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது பஸ் சாரதிகளையும், கிராம சேவகர்களயும், கலைஞர்களையும், ஆசிரியர்களையும், அப்பாவி மக்களையும் கொன்றவர்கள். அவர்கள் தனியார் துறைகளையும், சர்வதேச சமூகத்தையும், முன்னேற்றத்தையும் வெறுப்பவர்கள். தமது ‘குட்டித் தார்மீகக் குதிரையிலிருந்துகொண்டு’ எல்லா அரசாங்கங்களையும் விமர்சிப்பவர்கள். அவர்கள் திமிர் கொண்ட, மத சார்பற்ற, பணக்காரரை வெறுக்கும் கூட்டத்தினர். அவர்களைப் பின்பற்றுபவர்கள் சவரம் செய்யாத, குளிக்காத, உங்கள் நாளுக்கு நாள் செயற்பாடுகளை முடக்கும் தெரு ஆர்ப்பாட்டக்காரர். அவர்களால் ஒருபோதும் ஆட்சியை அமைக்க முடியாது அதனால் உண்மையான உலகத்தின் சவால்களை அவர்களால் ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது”
இவையெல்லாம் எனக்கு என் வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் ஓதப்பட்டவை. எங்கள் நகர்வுகளை அறிந்த பின்னரும் தொடர்ந்தும் எமக்கு ஓதப்பட்டு வருபவை.
கதையை நீளச் செய்யாமல் விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசநாயக்கா (AKD) வைச்்சந்தித்தோம்.
உண்மையான அனுதாபத்துடன் அவர் எங்கள் கதையைக் கவனமாகக் கேட்டார். நாங்கள் குறிப்பிட்ட சட்ட, நிர்வாக, தார்மீக மீறல்களை அவர் உணர்ந்துகொண்டார். அவற்றை அவர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடப்போவதாக எமக்கு வாக்குத் தந்தார். அதற்குத் தேவையான அம்சங்களை ஜே.வி.பி. கட்சி திரட்டியது; தரவுகளைச் சமர்ப்பித்த்ஹது; காவல் துறையிடம் முறையீடுகளைச் செய்தது. இவ் விடயத்தில் களைப்பின்றிப் பணி புரிந்தது. திருட்டு வழியில் நியமனம் பெற்றவர்களில் சிலர் விரைவில் சிறைக்குப் போவதற்குத் தயாராகிறார்கள். ஜே.வி.பி. யின் உதவியுடன் பல திருட்டு நியமனங்களை நாம் நிறுத்த முடிந்தது.
எனது வாசிப்பறையில் தேனீர் அருந்திக்கொண்டு நடந்து முடிந்தவைபற்றி யோசித்துப் பார்த்தேன். எனது வாழ்நாளில் பல ஐ.தே.க. முக்கியஸ்தர்களுடன் பழகியிருக்கிறேன். அனுரகுமாரவைப் போல எவருமே என்னைச் சமத்துவத்துடன் நடத்தவில்லை. அவர் எங்களுடன் நடந்துகொண்ட முறை ஏதோ அவர் எங்களிடம் சந்திப்பைக் கேட்டு வந்தது போல. அவர் பொய் சொல்லவில்லை. தன்னை ஒரு அதி முக்கிய பிரமுகராக மிகைப்படுத்திக் காட்டவில்லை. அவர் எங்களின் கதையைக் கேட்டபோது அவர் மேலும் கற்றுக்கொள்பவராகவே தெரிந்தார். ஜே.வி.பி. எங்களுக்காக இவ் விடயத்தில் இறுதி வரை போராடியது. அதற்காக ஜே.வி.பி. உரிமை எதையும் கொண்டாடவில்லை; தங்களிடம் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றூடக் கூறவில்லை. செய்ததற்குப் பிரதிபலனாக எதையுமே அவர்கள் கேட்கவில்லை.
ஜே.வி.பி.: வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்தல்
அனுரகுமார திசநாயக்காவின் தலைமையில் இயங்கும் ஜே.வி.பி. பல்கலைக் கழகத்தில் பகிடிவதை மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்து கட்சிக்கு ஆள் சேர்த்தது போன்ற முன்னர் இழைத்த தவறுகளைத் திருத்த முயல்கிறது. சர்ச்சைக்குரிய தனது பழைய பாதையிலிருந்து விலகிப் புதிய சீர்திருத்தப் பாதையில் நகர்கிறது. எத்தனை கட்சிகள் தமது வரலாற்றுத் தவறுகளைப் பணிவுடன் ஒத்துக்கொண்டு திருந்தியிருக்கின்றன?
அர்ஜுன் அலோய்சியஸ் பணக்காரப் பையன் ரவி கருணாநாயக்காவிற்குக் கொடுத்த ‘விலாசம் தெரியாத சிறிய அப்பாட்மெண்ட்’ ஒரு இலஞ்சம் என்பது பற்றி நாம் கேள்விப்படுவோமா?
தனது பெற்றோருக்கு கோதபாய கட்டிய கல்லறைகளுக்கான செலவு திருடப்பட்ட பொதுமக்கள் பணத்திலிருந்து வந்தது என்பது பற்றிக் கேள்விப்படுவோமா?
‘பொண்ட்’ பத்திர ஊழலை மூடி மறைத்ததில் ரணிலுக்கும் பங்கிருக்கிறது என்பதைப் பற்றி நாம் கேள்விப்படுவோமா?
2019 உயிர்த்த ஞாயிறு சம்பவத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி சிறீசேன தவறிவிட்டார் என்பத நாம் கேள்விப்படுவோமா?
ஏழைச் சிறுவன் சஜித் பபா லண்டன் ஸ்கூல் ஒப் எகொனோமிக்ஸ் நிறுவனத்தில் படிக்கவில்ல்ஐ என்பதையோ, தனக்குச் சின்னம்மை வந்தது பொய் என்பதையோதான் படித்துப் பட்டம் பெறவில்லை என்பதை அறிவிக்கும் பத்திரம் அவரிடமுள்ளது என்பது பற்றியோ நாம் கேள்விப்படுவோமா?
ஜே.வி.பி. யின் தடுமாற்றம்: கட்சித் தொண்டர்களா அல்லது அரசியல் நிதர்சனமா?
அனுரகுமாரவுடன் பேசும்போது நான் சில சுவாரஷ்யமான விடயங்களை அறிந்து கொண்டேன். ஜே.வி.பி. எப்போதுமே ஒரு மாக்சிஸ்ட், சோசியலிஸ்ட் கட்சியாகவே இருக்கும். ஆனால் சோசியலிஸ்ட்-மார்க்சிஸ்ட்-மாவோயிஸ்ட்-லெனினிஸ்ட் கற்பனாவாதத்தை அது இனிமேலும் நம்பியிராது. உலக பொருளாதார யதார்த்தத்தை அது நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது. சமபங்கு (equity), சமத்துவம் (equality), சமனிலை (parity) ஆகிய மைய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அரசியல் செயல்முறையை அது வரித்துக்கொண்டிருக்கிறது. பல்கலைக் கழகப் பகிடிவதைகளிலிருந்து அது தன்னை விலத்திக்கொண்டிருக்கிறது.
ஜே.வி.பி. சில கஷ்டமான நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறது. அவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது பல உயிர்களின் இழப்புகளுக்குக் காரணமாயிருந்ததையிட்டு அவர்கள் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். அது போதுமானதென்று நான் கருதவில்லை. ஒரு உயிரைப் பறிப்பதற்கு மன்னிப்பு மட்டும் போதாது. ஜே.வி.பி. எனது தந்தையைக் கொன்றிருந்தால் அவர்களது மன்னிப்புக்காக நான் அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டேன்.
அப்படியானால் பல தாயார்களையும், தந்தையர்களையும், மகள்களையும், மகன்களையும் கொன்ற ஐ.தே.கட்சிக்கு நாம் ஏன் வாக்களிக்கிறோம். தன் தந்தையின் காலத்தை மீண்டும் கொண்டுவருவேண் என்று சஜித் பிரேமதாச கூறும்போதெல்லாம் நான் அச்சப்படுவதுண்டு. சஜித் தனது கொல்லையில் எத்தனை ரயர்களை மறைத்து வைத்திருக்கிறார்?
இரு பெரும் அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சியும் சி.சு.கட்சியும் (சி.பொ.முன்னணி கூடவே) ஆட்சியைக் கைப்பற்றி அதனால் ஊடகங்களையும் கையகப்படுத்தித் தமது கொலைகளை மூடி மறைத்துப் பூசி மெழுகிவிட முடிந்தது. அத்தோடு கட்சி ஆட்சியில் இருக்கும்போது மக்கள் இறந்தவர்களை மறந்துவிட்டு தமக்குக் தேவையானவற்றைப் பெறுவதற்காக அரசியல்வாதிகளின் பின்னால் ஓடுவார்கள். சிறிய சலுகைகளுக்காகத் தமது நினைவுகளை எல்லாம் பண்டமாற்றுச் செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த ‘விளையாட்டை’ விளையாடுவதற்கு ஜே.வி.பி.யின் கைகளில் ஆட்சி கிட்டவில்லை.
பரிணாம வளர்ச்சியடைந்த, சுத்திகரிக்கப்பட்ட நவீன சித்தாந்தத்தை வரித்துக்கொண்ட தலைமைக்கும் கட்சியின் அங்கத்தவர்களுக்குமிடையேயான ஒவ்வாமை ஒரு சவால் தான். ஜே.வி.பி. யின் தலைமையில் இருப்பவர்கள் கண்ணியமான மனிதர்கள். அனுரகுமார திசநாயக்கா, சுனில் ஹண்டுன்னெத்தி, பிமால் றத்நாயக்கா, டில்வின் சில்வா ஆகியோரைச் சந்திக்கும்போது அவர்கள் மிகவும் எளிய மனிதர்களாகவே பழகுகிறார்கள். தமது பார்வைகளைத் தனித்துவமான பணிவோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உண்மையை அடித்தளமாகக் கொண்டவை. உங்கள் உண்மைகள் அவர்களது உண்மைகளோடு இணங்காவிட்டாலும் உங்கள் வலிகளை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். பிறரது வலிகளையும், உண்மைகளையும் கேட்டு இரங்கி அவர்களுக்குப் பழகிவிட்டது.
ஜே.வி.பி.யின் கட்சித் தொண்டர்களில் இளையதும் பழையதுமான சோசியலிஸ்ட்கள் ஒரு சிறிய பங்குதான். பழைய சோசியலிஸ்ட்டுகள் கணனி அறிவில்லாதவர்கள். இப் பரந்த உலகத்தின் சமகால வலைத் தொடர்புகளோடு அவர்கள் இணந்திருக்கவில்லை. நாடு தழுவிய வேலை நிறுத்தங்களினாலும், தெரு ஆர்ப்பாட்டங்களினாலும் அரசாங்கங்களைப் பணிய வைத்துவிடலாம் என்பதை அவர்கள் இன்னும் நம்புகிறார்கள். இந்த நவீன உலகில் அரசுகளும் ஆட்சிகளும் கூகிள் தளத்தில் அபத்தக் கருவூலங்களை வைத்துக்கொண்டு இயங்குபவை. என்.எம்., கொல்வின், பேர்ணார்ட், பீட்டர் ஆகியவர்களது நபர்சார் அரசியல் செத்துவிட்டது. புதிய அரசியல்வாதிகள் அவர்களின் கவர்ச்சியையோ அல்லது புத்திக்கூர்மையை வைத்தோ அளவிடப்படுவதில்லை. மாறாக, எண்ணிக்கையே அளவு கோல். எத்தனை பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள், எத்தனை ‘விருப்புக்கள்’, ‘பகிர்வுகள்’ கிடைக்கின்றன, கூட்டங்களுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பனவே முக்கியம். காலி முகத் திடலில் நீங்கள் பேசுவதைக் கேட்க இத்தனை பேர் வந்தார்கள் என்பதைக் கூகிளே எண்ணிச் சொல்லிவிடும். இன்றய ‘பிரபலம்’ ஒரு கருத்து அல்ல இலக்கம் தான். மாவோவின் சீனாவையும், லெனினின் ரஷ்யாவையும் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியப் போவதில்லை. முதலாளித்துவத்துக்கும், சோசலிசத்துக்குமிடையேயான போர்க்களத்தை இணைய யுகம் தகர்த்து மிகவும் சிக்கலான பொதுநிலமாக்கி விட்டது.
ஜே.வி.பி. இந்த மாறும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை வைத்து அவர்கள் இயங்க முற்படின் தொண்டர்களை இழக்க நேரிடும். மேல்தட்டு வர்க்கத்திடமிருந்தும், தொழில் வல்லுனர்களிடமிருந்தும், உயர் மத்திய வர்க்கத்திடமிருந்தும் தொண்டர்களைச் சேர்த்துக் கொள்வது கட்சிக்குச் சவாலாகவே இருக்கிறது. கட்சியின் சந்தேகத்துக்குரிய பின்னணியை மறைத்துக்கொள்ளத்தக்க ‘அரசியல்’ படலங்கள் அவர்களிடம் இல்லை. ஐ.தே.கட்சியும், சி.ல.சு.கட்சியும் தங்களின் அழுக்குகளை மறைத்துக்காட்டும் அரசியல் ‘பிளாஸ்டிக் சேர்ஜரிகளை’ த் தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார்கள்.
ஜே.வி.பி. யின் நேர்மை அவர்களுக்குப் பெருஞ் செலவையே தருகிறது. ஆனாலும் அவர்களது நேர்மை முக்கியமானது.
ஓரினச் சேர்க்கை விடயத்தில் ஜே.வி.பி. யின் நிலைப்பாடு
ஒருபாற் சேர்க்கை விடயத்தில் ஜே.வி.பி. ஒன்று தான் எதிர்ப்பில்லாமல் செயற்படுகிறது. வரதாஸ் தியாகராஜா என்ற பிரகடனப்படுத்தப்பட்ட ஒருபாற் சேர்க்கையாளரைத் தம் மேடையில் ஏற்றியவர்கள்.ஜே.வி.பி. ஒன்றுதான் சமீபத்தில் பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கொடுத்தவர்கள். ஐ.தே.கட்சியில் ரோசி மற்றும் சன்றாணி பண்டார ஆகியோர் வெறும் காட்சிப் பொருட்களே. அத்தோடு ஜனாதிபதியைப் பெண்ணொருவரோடு இணைத்துப் பேசும் ஹிருணிகா பிரேமச்சந்திர போன்ற கெட்ட பேச்சுக்காரரையும் ஐ.தே.க. வைத்திருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகள் இல்லாது போனால் எமக்கு 8-மணித்தியால வேலை நாட்களோ, இலவச மருத்துவமோ கிடைத்திருக்க முடியாது. உலகம் பூராவும் இடதுசாரி இயக்கங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைமைதான் உண்டு. ஆனாலும் உலகத்தில் நீதியும், விடுதலையும் கிடைப்பதற்கான போராட்டங்களில் அரசியல்வாதிகளை எம் பக்கம் திருப்புதற்குக் காரணம் அவர்கள் தான்.
ஜே.வி.பி யிற்கு அளிக்கும் வாக்கு வீணடிக்கப்படுகிறதா?
ஜே.வி.பி. யிற்குப் போடும் வாக்குகள் வீணடிக்கப்படுகிறது . அது ராஜபக்சக்களைப் பலப்படுத்திவிடும் எனப் பலரும் எனக்குச் சொல்கிறார்கள். மாறாக நான் ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தால் நாம் பொருளாதார, நிர்வாகக் காமுகர்களைக் கொண்டுவந்து எங்களை மேலும் மேலும் கற்பழிக்கவே செய்வோம். நான் எனது பாடத்தைப் படித்து விட்டேன். ஐ.தே.கட்சிக்கு வாக்களிப்பதால் நாம் திருடர்களையும், காடையர்களையும் எமது நிறுவனங்களில் அமர்த்துவோம். ராஜபக்சவுக்கு வாக்களிப்பதும் எங்கள் மீது சாத்தானை உட்காரவைப்பதற்குச் சமம்.
ஜே.வி.பி. இற்கு வாக்களிப்பதன் மூலம் நான் அவர்களைப் பலமுறச் செய்வேன். நேர்மையான ஆண்களும் பெண்களும் இல்லாது ஜனநாயகம் பிரயோசனமற்றது. படித்தவர்கள், தொழில் சார் வல்லுனர்கள், தாராள சிந்தனை உள்ளவர்கள், சமத்துவத்தை நேசிப்பவர்கள் போன்ற நாம் ஆதரவு தராது போனால் சிறீலங்காவின் அரசியலின் ஆன்மா இறந்து போகும். நான் ஜே.வி.பி. யிற்கு வாக்களிப்பதால் வருங்காலப் பாராளுமன்றத்தில் தற்போதுள்ள 6 நேர்மையான ஆண்களுக்குப் பதிலாக 20 ஜே.வி.பி. ஆண்களும், 20 ஜே.வி.பி. பெண்களும் இருப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் நான் அதை ஆரம்பிப்பேன்.
பொதுத் தேர்தலில் நான் அவர்களுக்கே வாக்களிப்பேன்.
ஐ.தே.கட்சியின் இரக்கமற்ற, நேர்மையற்ற, ஆன்மாவே இல்லாத ஐ.தே.கட்சியிடம் நான் கற்றுக்கொண்ட மறக்கமுடியாத பாடத்தினால் தான் நான் இதைச் செய்கிறேன்.
நான் ஜே.வி.பி. யிற்கே வாக்களிப்பேன்.
(பி.கு: ஒருவரும் ‘மேல் வர்க்கத்தவர்’ அல்ல. எமது எல்லோரது குடல்களிலும் மலம் தானுண்டு.)