Spread the love

சிவதாசன்

“All men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness”

Founding fathers of the United States of America

பலருக்கும் தெரிந்த, பரிச்சயமான இந்த வாசகம் அமெரிக்க குடியரசின் உருவாக்கத்தின்போது வரையப்பட்டது. உள்ளூர்க்காரர்களுக்குப் புல்லரிக்க வைக்கும் இந்த உபதேசத்தை அமெரிக்கா உலகில் ஏனைய நாடுகளுக்கோ மக்களுக்கோ ஓத முடியாது.

இந்த மாதம் 6ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிறது. தமிழர்களில் பெரும்பாலானோர் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்படவேண்டும் என விரும்புவார்கள். அதற்கு பெரும்பாலான காரணம் அவரது நிறம் அடுத்தது அவர் சார்ந்த கட்சி ஒருவகையில் தீவிர வலதுசாரியல்லாதது. குடிவரவாளருக்கு நட்பானது என்றும் சிலர் நம்புகின்றனர். பல ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வழி செய்தவர் என்ற பெருமையும் அவருக்குண்டு. நல்லதுதான்.

‘சமூகத்துக்கு நல்லது செய்வோம் என்று புறப்படுபவர்களால்தான் அதிக கேடுகள் விளைகின்றன’ என்று ஐராவதி கார்வே மகாபாரத பாத்திரங்கள் பற்றி முன்வைத்த விமர்சனமொன்றில் கூறியிருந்தார். அவரது கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதற்குப் பல உதாரணங்கள் இலகுவாகக் கிடைக்கும்.

ஒபாமாவைப் பற்றிய எனது பார்வையும் இந்த ஐராவதி அச்சில் வார்க்கப்பட்டதுதான்.

முற்போக்குவாதிகளிடமும், சமூகசேவையாளர்களிடமும் எமக்கு எழும் எதிர்பார்ப்புகள் அதிகம். அவர்கள் தவறு செய்யவே மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுவதும் சகஜம். இந்த நம்பிக்கைகள் தகர்க்கப்படும்போது ஏற்படும் வெறுப்பும் அவ நம்பிக்கையும் ஒட்டுமொத்தமாக இந்த முற்போக்கு சமூகத்தின்மீதே ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
ஒபாமாவில் எனக்கு ஏற்பட்டிருப்பது அப்படியான ஒரு வெறுப்புத்தான்.

முதலாவது தடவை அவர் தேர்தலில் நின்றபோது முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல முக்கிய விடயங்களை முன்வைத்தார். குவாண்டனமோ சிறையை மூடி அங்குள்ள நெடுநாட் கைதிகளைச் (பயங்கரவாதிகளெனக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரர்கள்) சட்டத்தின் முன் கொண்டு வருதல் என்பது முதன்மையானது. பயங்கரவாதிகளெனக் கருதப்படுபவர்களை அந்தந்த நாடுகளில் வைத்துக் கொலை செய்வது என்ற புஷ் நிர்வாகத்தின் முடிவை மீள் பரிசீலிப்பது, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலிருந்து இராணுவத்தைத் திருப்பி அழைப்பது போன்ற வாக்குறுதிகளையும் அவர் கொடுத்திருந்தார்.

குவாண்டனமோ சிறை இன்னும் மூடப்படவில்லை. பயங்கரவாதிகளாகக் கருதப்படுபவர்கள் அந்தந்த நாடுகளிலேயே வைத்து ஆளில்லா விமானங்களால் குறிபார்த்துக் கொல்லப்படுகிறார்கள். இந்நடவடிக்கையின்போது ஒவ்வொரு பயங்கரவாதிக்கு பத்து அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்படுகிறார்கள். இது மனிதாபிமானமற்றது என்பது மட்டுமல்ல சர்வதேச சட்டங்களையே மீறுவது என்று சுட்டிக்காட்டியபோதும் ஒபாமா அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். பாகிஸ்தானின் அனுமதியின்றியே அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்காது அங்கு வைத்து பின் லாடன் கொல்லப்பட்டார்.

இதில் முக்கியமான விடயமென்னவென்றால் யார் யார் பயங்கரவாதிகள் என்ற பட்டியல் சீ.ஐ.ஏ. யினாற் தயாரிக்கப்பட்டு ஒபாமாவுக்கு கையளிக்கப்படுவதும். அதில் எவர் எப்போது கொல்லப்படவேண்டும் என்பதை ஒவவொரு வாரமும் ஒபாமாவே உறுதிப்படுத்துவதும்தான்.. ஆளில்லா விமானங்கள் அமெரிக்க மண்ணிலிருந்தே ஏவப்பட்டு இக் கொலைகள் நிறைவேற்றப்படும். அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது பற்றி ஜனாதிபதிக்கு எந்தவித கவலையுமில்லை. அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு எதிராக உலகில் எந்த மூலையிலும் இருக்கக்கூடிய ‘பயங்கரவாதிகளைத்’ தேடி அழிப்போம் என்று றேகன் தொடக்கம் புஷ் வரையில் கர்ச்சித்தனர் ஆனால் செயலில் காட்டவில்லை. ஒபாமா அப்பயங்கரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துவேன் என்று கர்ச்சித்தவர் பயங்கரவாதிகளை மட்டுமல்ல பொது மக்களையும் சேர்த்தே கொல்கிறார்.

பின் லாடன் கொலை செய்யப்பட்டபோது ஜோர் புஷ் இடம் கருத்துக் கேட்கப்பட்டது. ‘நான் அதைத் தவிர்த்திருப்பேன்’ என்ற சாரத்தில் அவரது பதில் இருந்ததாக ஊடகமொன்று குறிப்பிட்டிருந்தது. புஷ் ஆட்சியின்போது பின் லாடன் வுழசழ டீழசழ குகைகளில் இருப்பது சீ.ஐ.ஏ.னாற் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கொல்வதற்கு ஆளணி தரும்படி கேட்கப்பட்டதற்கு புஷ் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்ததால் அது சாத்தியமற்றுப் போனது. செப்டம்பர் 11 ன் ரிஷி மூலத்தை அறிந்தவர் புஷ். அரசியற் காரணங்களுக்காகவேனும் அவர் அதைச் செய்யவில்லை. தனது தேர்தலுக்காக ஒபாமா அதைச் செய்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒபாமாவின் திட்டங்கள் மனிதாபிமான காரணங்களுக்காகத் தீட்டப்பட்டவையல்ல. சீனாவுக்கு எதிரான போர் வியூகங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளணிகள் தேவை. எனவே இராணுவம் மீளழைக்கப்படுகிறது. தமது ஆளணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் அமெரிக்க மக்களின் விரக்தியைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும் என்பதற்காகத்தான் ஆளில்லா விமானங்களின் மூலம் போர் முன்னெடுக்கப்படுகிறது. எனவே ஒபாமா போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தவரென்பது அரசியல், இராணுவ காரணங்களுக்காகவேதான் மனிதாபிமான காரணங்களுக்காக அல்ல.சரி, அப்படியானால் அவரது போட்டியாளர் மிட் றொம்னி அதி தீவிர வலதுசாரிதானே அவரால் இன்னும் அதிக போர்களும் அதிக மனிதக் கொலைகளும் ஏற்பட வாய்ப்புகளுண்டு என்கிறீர்கள். சமீப அமெரிக்க வரலாற்றைப் பார்த்தால் அதில் உங்களுக்கான விடையிருக்கிறது. வியட்நாம் போரின்போது படையெடுப்புக்குக் காரணமானவர்களான ஜனாதிபதிகள் கென்னடி, ஜோன்சன் போன்றவர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். போரை முடிவுக்குக் கொண்டுவந்த நிக்சன், போர்ட் போன்றவர்கள் தீவிர வலதுசாரியாhகக் கருதப்படும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். யப்பான் மீது அணுக் குண்டுகளை வீசியது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹரி ட்ருமன் நிர்வாகம். இப்படிப் பல.

மக்களின் சமூக ஈடேற்றத்துக்காகப் போராடப் புறப்பட்டு மில்லியன்களில் உயிர்ப்பலி எடுத்த வேறு உதாரணங்களுமுண்டு. மாவோவின் புரட்சி 29 மில்லியன் மக்களைக் காவுகொண்டது. ஸ்டாலின் ஆட்சியில் 3-5 மில்லியன் விவசாயிகள் பட்டினியாற் செத்துப் போனார்கள்.

ஒபாமா இவர்களில் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பது இப்போது விளங்கும். சரி அதனால் நமக்கென்ன?

“All men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness”

‘வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான நாட்டம் இது ஒவ்வொரு மனிதனுக்கும் படைக்கப்பட்டவனால் வழங்கப்பட்ட நியம உரிமைகளில் சில” என்று அமெரிக்க சாசனத்தில் குறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களையே அந்நியமாக்கும் முயற்சியையே ஒபாமா நிர்வாகம் செய்கிறது. அதிகாரத்தை விமர்சிக்கும் எல்லோரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு விசாரணைகளின்றி இராணுவ நீதிமன்றங்களின் சிபார்சுகளோடு காலவரையின்றிச் சிறையிலடைக்கும் சட்டங்களைத் தீவிரமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது ஒபாமா நிர்வாகம். வெளிநாடுகளில் இள்ள பயங்கரவாதிகளை ஆளில்லா விமானங்கள் பலியெடுக்கவும் உள்நாட்டுப் பயங்கரவாதிகளைக் கைது செய்யும் அதிகாரங்களை இராணுவம் பொறுப்பெடுப்பதும் அமெரிக்க சாசனத்துக்குப் பொருந்த மாட்டாது. துரதிர்ஷ்ட வசமாக இவையெல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது ஒரு ‘முற்போக்கு’ அரசு!

போர்கள் முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளருக்கும் பெரு நஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் இந்த வியாபாரிகளின் கவனம் இனி சிறிய வறிய நாடுகளை நோக்கியே இருக்கும். உற்பத்தியாளர்கள் தமது கருவிகளை ஆளில்லா விமானங்களின் தயாரிப்பிற்காக முடுக்கி விடுகிறார்கள். பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் தம் பங்கிற்கு ஆளில்லா விமானக் கொலைகளை லிபியாவில் நடத்தியிருக்கிறார்கள். இஸ்ரவேலின் வித்தியாரம்பம் இவ்விடயத்தில் சரஸ்வதி கடாட்சத்தோடு ஆரம்பித்திருக்கிறது.
புதியஉலக ஒழுங்கை நிலைநாட்டும் திட்டம் தீவிர வலதுசாரிகளால் முன்மொழியப்பட்டது. அதை மிக வேகமாக நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுவது ஒபாமா.‘நண்பன் என்பவன் சந்தர்ப்பம் தேடியபடி கூடவே இருக்கும் எதிரியே என்று இயக்குனர் சசிகுமார் கூறுவார். முன்னால் நின்று குத்தும் எதிரியைவிட பினால் இருந்து குத்தும் நண்பன் ஆபத்தானவனென்று அறிவதற்கு நாம் விஞ்ஞானிகளாகவிருக்க வேண்டுமென்பதில்லை.

ஒபாமா பின்னாலிருந்து குத்துபவர். அவர் சந்தர்ப்பம் தேடியபடி கூடவே இருக்கும் எதிரியே தான்.

அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் தற்காலிகமானவையே. நிரந்தரமான மாற்றங்களைத் தீர்மானிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் இயற்iயின் கைகளில்தானுண்டு. அது சான்டியாகவிருந்தாலென்ன நீலமாகவிருந்தலென்ன!

றொம்னி தோற்றாலும் பரவாயில்லை ஒபாமா வெற்றியடையக்கூடாது!
நவம்பர் 2, 2012

Print Friendly, PDF & Email