India

‘நான் ஒரு இந்தியன், இந்தி பேசமாட்டேன்’ | இந்தி எதிர்ப்புப் போராட்டம் 2.0


பிரபலங்கள் களத்தில் குதிக்கிறார்கள்

‘நான் ஒரு இந்தியன், இந்தி பேசமாட்டேன்’ என்ற வாசகங்களைத் தாங்கிய ரீ-சேர்ட்டுகளுடன் நடிகர்கள், அரசியல்வாதிகள் என்று பல பிரபலங்கள் களத்தில் குதித்திருக்கும் ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ தமிழ்நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது

DMK MP Kanimozhi along with a group of youngsters wearing anti hindi imposition tshirts
கனிமொழி சில போராட்டக்காரருடன்

“இந்தி தெரியாது, போடா”, “நான் தமிழ் பேசும் இந்தியன்”, நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன்” போன்ற பலவகையான இந்தி எதிர்ப்பு வாசகங்களைத் தாங்கிய ரீ-சேர்ட்டுகளை அணிந்துகொண்டு தமது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘மெட்றோ’ நடிகர் ஷிறிஷ் சரவணன் ஆகியோர். இந்தி எதிர்ப்பு வாசகங்களுடனான ரீ-சேர்ட்டுகளை அணிந்துகொண்டு இருவரும் உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படம் ருவீட் செய்யப்பட்டு இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

“நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன்” என்ற சொற்தொடர் முதன் முதலில் , கே.பாலச்சந்தரின், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980) படத்தில் நடிகர் கமல் ஹாசனால் பாவிக்கப்பட்டிருந்தது. இப் படத்தில் கமல் ஏற்ற பாத்திரம் நேர்முகத் தேர்வொன்றுக்குப் போகும்போது “நீ ஒரு தமிழனா” என்று கேட்கப்படும்போது மேற்படி வசனத்தை அவர் அதில் பேசியிருந்தார்.

யுவன், ஷிரிஷ் படம் ருவீட்டில் வெளிவந்ததற்குப் பிறகு தற்போது தமிழ் ருவிட்டருலகம் பல விதமான வர்ணங்களிலும், வடிவங்களிலும், வாசகங்களுடனும் பிரகாசித்தவண்ணம் இருக்கிறது.

தி.மு.க. தலைவர் சிறிய அளவில் ரீ-சேர்ட் இயக்கத்தை ஆரம்பித்து வைத்ததாகவும், இப்போது அது தீ போல் பரவ ஆரம்பித்துவிட்டது எனவும், தூத்துகுடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியான ரீ-சேர்ட்டுகளை அணிந்த சில இளையவர்களுடன் கனிமொழி எடுத்த பட்ம் ஒன்றும் ஞாயிறன்று ருவீட்டரில் வெளிவந்திருந்தது. “உணர்வுகளைக் கிளற ஒரு பொறி போதுமானது. மிக மோசமான இந்தித் திணிப்பு நடைமுறையில் உள்ளபோது, எமது மூததையர்களைப் போல, இளையவர்களும் இவ்வளவு தூரம் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை” என கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. இளையோர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல், ஐஸ்வர்யா ராஜேஷ், சந்துரு பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி கீர்த்தி சந்துரு போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் இவ்வகையான ரீ-சேர்ட்டுகளை அணிந்து போராட்டத்தில் குதித்திருப்பது இளையோரிடையே போராட்டத்தை மிகவும் துரிதமாக எடுத்துச் செல்கிறது.



சில நாட்களுக்கு முன், இயக்குனர் வெற்றிமாறன், 2011 இல் விமான நிலையமொன்றில் இந்தி தெரியாததால் தான் அவமனப்படுத்தப்பட்ட சம்பவத்தை விகடன் சஞ்சிகையில் பகிர்ந்திருந்தார். மொன்றியல் திரைப்பட விழாவில் ‘ஆடுகளம்’ படத்தைத் திரையிட்டுவிட்டு அப்படக் குழுவினருடன் இந்தியா திரும்பும்போது அச் சம்பவம் நிகழ்ந்திருந்தது.

டெல்ஹி விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட்டபோது “இந்தியாவின் தாய் மொழியைத் தெரியாமல் இருப்பதாக” வெற்றிமாறன் அவமானப்படுத்தப்பட்டார். “தமிழரும், காஷ்மீரிகளும் நாட்டை உடைக்கிறார்கள்” என அந்த அதிகாரி குறிப்பிட்டதுடன் 45 நிமிடங்கள் காத்திருக்கச் செய்யப்பட்டிருந்தார்.

மக்களவை உறுப்பினர் கனிமொழியும் சில வாரங்களுக்கு முன்னர் விமான நிலையமொன்றில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் “நீர் ஒரு இந்தியரா” எனக் கேடப்பட்டதாகச் செய்தியொன்று பரபரப்பாக வந்திருந்தது.