EconomyMoney

நாணயம் அச்சிடுவது பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது?


பணம் (Money)

சிவதாசன்

கோவிட் தாக்கத்தினால் பல நாடுகளின் பொருளாதாரம் மிக் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, யப்ப்பான், கனடா உட்படப் பல நாடுகள் நாணயத் தாள்களை அச்சிடுகின்றன எனப் பல செய்திகள் வருகின்றன. அரசாங்கங்கள் ஏன் இதைச் செய்கின்றன், இதனால் கிடைக்கக்கூடிய நன்மை தீமைகள் என்ன?

முற்காலத்தில் ஒரு நாட்டின் நாணயப் பெறுமதி அந்நாட்டில் இருக்கக்கூடிய தங்கத்தின் அளவுக்குச் சமனாக இருப்பது வழக்கமாகவிருந்தது. இதையே ‘தங்கத் தரம்’ (gold standard) என அழைத்தார்கள். ஆனால் புதிய பொருளாதார நடைமுறைகள் பழக்கத்துக்கு வந்ததும் இந் நடைமுறை இப்போது கைவிடப்பட்டுவிட்டது.

Image Credit: Mufid Manjun / Unsplash

அப்போ நாணயம் அச்சிடுவதற்கான தேவை ஏன் ஏற்படுகிறது?

ஒரு நாடு பொருளாதார ரீதியாகப் பலம் குன்றும்போது (recession) உற்பத்தி தேக்கமடைகிறது. அவற்றை வாங்குவதற்கான பணம் மக்களிடம் இல்லாமலிருக்கலாம் அல்லது மக்கள் தம்மிடம் இருக்கும் பணத்தை இறுக்கமாகச் சேமித்து, தேவையற்ற பண்டங்களை வாங்குவதைத் தவிர்த்து நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சமாளிக்க (belt tightening) முயல்வார்கள். இதன் நேரடி விளைவு கடைகளில் பண்டங்கள் வாங்குவாரற்றுத் தேக்கமடையும். இதன் சங்கிலி விளைவாக பண்டங்களின் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளைக் குறைப்பார்கள்; சில தொழிலாளர்கள் வேலைகளினின்றும் நீக்கப்படலாம். இதனால் அரசாங்கத்துக்கு வரி வரவு பாதிப்பதோடு, வேலையற்றோர் ஊதியம், சமூகநலக் கொடுப்பனவு என்று செலவும் அதிகரிக்கும். மக்களின் பைகளில் பணப்புழக்கம் குறையும்போது அதை பணச்சுருக்கம் (deflation) என்பார்கள்.

நாணயம் அச்சிடுதல் (printing money)

பணம் அருகுவதனால் பண்டங்களை வாங்குவதற்குத் தயங்கும் மக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் போதுமான பணத்தைப் புழக்கத்துகு விடவேண்டிய தேவை ஏற்படுகிறது. இக்காலத்தில் ஏற்றுமதிகள் குறைவடைவதனாலோ அல்லது வேறு ஏதும் காரணங்களினாலோ அரச வருமானம் குன்றிநால் நாணயத்தை அச்சிடவேண்டிய தேவை அரசுக்கு ஏற்படுகிறது.. இது உண்மையான நாணயமாகவும் இருக்கலாம் அல்லது மின்னியலைப் பாவித்து நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதாகவும் (quantitative easing) இருக்கலாம். இப்படி மக்களின் கைகளில் போதுமான பணத்தைப் புழங்கவிடும்போது – கோவிட் நிவாரணம் போன்ற இன்னோரன்ன வழிகளில் – அவர்கள் நம்பிக்கையுடன் போய் பண்டங்களை வாங்குவார்கள். இதனால் தொழிற்சாலைகள் முழுமையான உற்பத்தியைத் தொடரும். பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்; அவர்கள் வீடு வாசல்களை வாங்குவார்கள், புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பார்கள். இவர்களை ஊக்குவிக்கவென அரசாங்கத்தின் உதவியுடன் வங்கிகள் குறைந்த வட்டியில் பணத்தைக் கடன் கொடுக்கும். இதனால் வீடுகள் அதிகம் கட்டப்படவேண்டியிருக்கும். அதனை நம்பியிருக்கும் உப தொழிற்சாலைகளும் உற்பத்திகளைத் தந்துகொண்டேயிருக்கும். இதனால் எல்லோருக்கும் வெற்றி.பண வீக்கம்

அப்படியானால் கஷ்டம் வரும்போதெல்லாம் பணத்தை அச்சிடவேண்டியது தானே என நீங்கள் நினைக்கலாம். இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால், மக்களின் கைகளில் பணம் அதிகரித்து கடைகளில் பண்டங்களின் எண்ணிக்கை குறைவாகவிருந்தால் (இப்போது இலங்கையில் நடைபெறுவதைப் போல) கொஞ்சப் பொருட்களுக்குப் (supply) பலர் அடிபடப்போகிறார்கள் (demand). இதனால் வியாபாரிகளும் தமது பண்டங்களின் விலைகளைப் பல மடங்குகளாக அதிகரிக்கப் போகிறார்கள். மக்களின் பைகளில் புழங்கும் பணம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள்து வாங்கும் திறனும் அதிகரிக்கும். இதையே பணவீக்கம் (inflation) என்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால் உற்பத்திகளோ அல்லது இறக்குமதிகளோ போதுமான அளவில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, சமீப காலங்களில் பணம் அச்சிடுவதன்மூலம் பணவீக்கம் மிக மோசமாக அதிகரிதிருந்த நாடு சிம்பாப்வே.

இலங்கையின் நிலை

இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கத்தினது தவறான பொருளாதார நடைமுறைகளால் அதன் வெளிநாட்டு நாணயச் சேமிப்பு (foreign reserves), அதாவது உலகின் வியாபார நாணயமான ‘டொலரில்’ வைத்திருக்கக்கூடிய சேமிப்பு, மிகவும் ஆபத்தான நிலைக்கு அருகிவிட்டது. வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை, நாட்டின் ஏற்றுமதிக் குறைப்பு போன்றவற்றால் கிடைக்கப்படும் பணம், வெளிநாட்டில் பணிபுரியச் சென்றவர்களால் அனுப்பப்படும் பணம் ஆகியனவே இந்த வெளிநாட்டு நாணயச் சேமிப்ப்புக்கு உதவி வந்தன. கொறோணாத் தொற்றினால் இது அதல பாதாளத்தில் வீழ்ந்தது.

இதே வேளை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கான பணத்தை டொலரிலேயே கொடுக்க வேண்டும். சேமிப்பில் டொலர் அருகியதும் அரசு இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டது. இதனால் கடைகளில் பண்டங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வியாபாரிகள் விலையை அதிகரித்தார்கள். இதனால் அரசு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. வியாபாரிகள் பண்டங்களைப் பதுக்க ஆரம்பித்தார்கள். நிலைமை மோசமடைவதைக் கண்டதும் வேறு வழியில்லாமல் அரசு விலைக் கட்டுப்பாடுகளை எடுத்துவிட்டது. அரச சேவைகளுக்கும், பணியாளர்களுக்கும் சம்பளம் உரிய நேரத்தில் கொடுக்கப்படாவிடில் ஏற்படும் சமூகக் கொந்தளிப்புகளை விட பொருளாதாரப் பாதிப்புகளே அதிகம் என்பதனால் இத் தேவையைச் சமாளிக்க அரசு பெருந்தொகையான நாணயத்தை அச்சிட்டது. இதனால் உற்பத்திகளோ, இறக்குமதிகளோ அதிகரிக்காமல் மக்கள் பைகளில் பணப்புழக்கம் மட்டுமதிகரித்தது. இதனால் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் நாணயத்தின் பெறுமதி வெகுவாகக் குறைந்தது.

மேற்கு நாடுகள்

அமெரிக்கா, பிரித்தானியா, யப்பான் போன்ற நாடுகள் பணத்தை அச்சிட்டாலும் அவர்கள் பணவீக்கத்தையும், உற்பத்தியையும் (GDP) அளவுகோல்களாகப் பாவித்து அவ்வப்போ திருத்தங்களைச் செய்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் பணவீக்கத்தை விட பணச்சுருக்கம் (deflation) மிகவும் ஆபத்தானது. அது உற்பத்தித் தேக்க நிலையை (recession) மேலும் பாதித்து தாழ்வு நிலைக்குக் (depression) கொண்டுபோய் விட்டுவிடும்.

(அடுத்த கட்டுரையில் – கட்டுப்பட்டுடனான தளர்ச்சி (quantitative easing) (நன்றி:வீடு.கொம்)