Sri Lanka

நாட்டு மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய தரவு வங்கி அவசியம் – ஜனாதிபதி

டிசம்பர் 30, 2019


நாட்டு மக்களின் பிரத்தியேக தகவல்களான, அடையாள அட்டை, சாரதிப் பத்திரம், குடி வரவு / அகல்வு விபரங்கள், பிறப்பு / இறப்பு பற்றிய விபரங்கள் ஆகியவற்றை ஒரே கோப்பினுள் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ஜனாதிபதி ராஜபக்ச பணித்துள்ளதாக அறியப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சு அதிகாரிகளோடு இன்று நடைபெற்ற சந்திப்பின்போது, பணத்தையும், நேரத்தையும் மீதப்படுத்துவதற்கு இச் சேவைகள் அவசியம் என அவர் வலியுறுத்தியதாக அறியப்படுகிறது.

“தற்போது இப்படியான விடயங்களை அறிய வேண்டுமாகில் பல திணைக்களங்களை நாட வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதன் மூலம் பணத்தையும், நேரத்தையும் சேமிப்பது மட்டுமல்லாமல், ஒரே வேலைகளைப் பலரும் செய்யாது, தகவல்களில் தவறுகள் ஏற்படாது, திறனுள்ள சேவையை ஆற்ற முடியும். அமைச்சுகள், திணைக்களங்கள், அமைப்புக்கள் ஆகியவற்றிடையே தொடர்புகள் பேணப்படுவது தேசிய அபிவிருத்திக்கு இன்றியமையாதது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்தல் மூலம் அதியுயர்ந்த பலனைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும்” என அவர் இச் சந்திப்பின்போது கூறினார்.

தகவற் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் தற்போதுள்ள பணிகளை அவை சம்பந்தப்பட்ட இதர அமைச்சுகளிடம் பொறுப்பளிக்க வேண்டுமென, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, பாடசாலைகளுக்கான கணனிக்கூடத்தின் பராமரிப்பைக் கல்வி அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, அமைச்சின் செயலாளர்கள் சூளானந்தா பெரேரா, பேராசிரியர் சுனந்த மஹேந்திரா மற்றும் பல அதிகாரிகள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.