நாட்டில் அராஜகம் தலைதூக்குகிறது – ஜனாதிபதியை விமர்சிக்கும் ஆளும் கட்சி பா.உ.
சிங்கப்பூரில் ஜனாதிபதி அமெரிக்க ராஜாங்கச் செயலாளரைச் சந்திக்கவுள்ளாரா?
ஜனாதிபதி கோதாபயவின் திடீர் பாராளுமன்ற ஒத்திவைப்பும் அதைத் தொடர்ந்த சிங்கப்பூர் பயணமும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியைத் தோற்றியுள்ளது.
பொது நிதிக்குழுவின் தலைவரான அனுரா பிரியதர்ஷன் யாப்பா இவ்விடயத்தில் பகிரங்கமாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஜனாதிபதி ஏன் திடீரெனச் சிங்கப்பூர் சென்றார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாடு மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நாட்டில் இருந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதன்மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டும். இது கடமைக்கான நேரம், நாடு சுற்றுவதற்குரிய நேரமல்ல” என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பிரத்தியேக காரணத்துக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச புறப்படுவதற்கு முன் நடப்பு பாராளுமன்றத்தை டிசம்பர் 12 முதல் ஜனவரி 18 வரை ஒத்திவைத்துள்ளார். இதன் மூலம் ஏற்கெனவே செயற்பட்டுக்கொண்டிருந்த பொது நிறுவனங்களுக்கான அமைச்சரவைக் குழு (Committee on Public Enterprises (COPE)) போன்ற குழுக்களும் அவற்றின் நடவடிக்கைகளும் நிரந்தரமாக மூடப்பட்டுவிடுகின்றன. பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்படும்போது இக் குழு புதிய அங்கத்தவர்களோடு மீளவும் உருவாக்கப்பட்டு அவற்ரின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது சட்டம்.
இதே வேளை அரசை விமர்சிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினரான அனுர பிரியதர்ஷன் யாப்பா இக் கலைக்கப்பட்ட குழுவிற்குத் தலைமை தாங்கியவராவார். இவர் போன்று வேறு பலரும் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபடியால் அவர்களை அகற்றுவதற்காகவே ஜனாதிபதி இப் பாராளுமன்ற ஒத்திவைப்பைச் செய்தார் எனவும் செய்திகள் கசிந்திருந்தன. முந்திய அரசில் அமைச்சராக இருந்த யாப்பா தற்போதைய அரசாங்கத்தில் ஓரங்கட்டப்பட்டிருந்தார் எனவும் சமையல் வாயு வெடிப்பு விடயங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்து தனது விமர்சனங்களை முன்வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. இவ் வாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவரும் பொறுப்புக் காணப்படவில்லை.
“வாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவரும் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை. வெளிநாட்டில் என்றால் இப்போது நிறுவன்ம உரிமையாளர்கள் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள். இங்கோ எதுவுமே நடைபெறவில்லை என்பது போல விடயங்கள் நடைபெறுகின்றன. இந் நிலை நாட்டில் அராஜகம் ஆட்சி செய்யவே வழிவகுக்கும். இங்கு ஆட்சி என்பதே நடைபெறவில்லை. இதை நான் நிதியமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தேன். நான் பார்க்கிற வரை “அமைச்சரவைக்கு எதிர்ப்பக்கத்தில் யாரோ இருக்கிறார் போலவிருக்கிறது” என யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை ஆசியாவில் பயணம் செய்துகொண்டிருக்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் அந்தோனி பிளிங்கனை ஜனாதிபதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாகவும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவசர சந்திப்பொன்றுக்காகப் புறப்படுகின்றார் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.