News & AnalysisUS & Canada

நாடுகடத்தப்படவிருக்கும் பிலிப்பீனோ சுகாதாரப் பணியாளருக்கு இரண்டாம் தடுப்பூசியைத் தர மறுக்கும் கனடா

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்லோ எஸ்காரியோ கனடாவின் பிரபல மருத்துவமனையொன்றில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர். கனடாவிலிருந்து நாளை அவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். இவ்வேளை அவர கனடிய அரசிடம் கேட்பதெல்லாம் தனது நாடுகடத்தலை 40 நாட்களுக்குத் தள்ளிப்போடும்படி மட்டுமே. கனடிய மத்திய அரசு அதற்கு மறுத்து விட்டது.

36 வயதுடைய கார்லோ எஸ்காரியோ சுகாதாரப் பணியாளராக இருப்பதனால் அவருக்கு முதல் தடவை கொடுக்கப்படும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது தஹ்டுப்பூசியைப் பெறுவதற்கு அவர் 40 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் பணக்காரருக்கும், அரசியல் பலமுள்ளவர்களுக்கும் மட்டுமே ஃபைசர் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு சீனாவின் ‘சைனோஃபார்ம்’ அல்லது ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ மாத்திரமே வழங்கப்படுகிறது. எனவே தனக்கு இரண்டாவது ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்வரை தனது நாடுகடத்தலை 40 நாட்களுக்குப் பின்போடும்படி எஸ்காரியோ கேட்டு வருகிறார். ஆனால், கனடிய எல்லைக்காவல் அதிகாரிகள் அவரது கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.

“நோய்த் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து எல்லா இடங்களிலுமிருக்கிறது. அது பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என எல்லைக்காவல் அதிகாரி கூறியதாக ‘தி ஸ்ரார்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்காரியோ, 2014 ம் ஆண்டிலிருந்து, ரொறோண்டோ பொது வைத்தியசாலையில், இரத்த மாற்று உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். 2007 ல் கனடாவுக்கு வந்த அவருக்கு 2010 இல் நிரந்தர வதிவுரிமை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவரது வதிவுரிமை விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுக்கப்பட்டது என்ற காரணத்தால் அவருக்கு வழங்லப்பட்ட நிரந்தர வதிவுரிமை மூன்று வருடங்களின் பின்னர் மீளப்பெறப்பட்டுவிட்டது.

இன்று (மே 13) அவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படவுள்ளார். அவருக்கு வழங்கப்படவிருக்கும் இரண்டாவது தடுப்பூசி ஜூன் 11 ம் திகதியே வழங்கப்படும். அதுவரை தனது நாடுகடத்தலைப் பின்போடுமாறு அவர் கனடிய அரசைக் கேட்டிருந்தார். ஆனால் அரசு அதற்கு மறுத்துவிட்டது.

“முன்னரங்க சுகாதாரப் பணியாளராக நான் பணியாற்றிய காரணங்களுக்காகவேனும் கனடா எனக்கு இந்த சொற்ப நாட்கள் அவகாசத்தைத் தருமென நான் மனதார எதிர்பார்க்கிறேன்” என்கிறார் எஸ்காரியோ.

கனடிய சட்டம்

கனடிய குடியுரிமையையை பலமாக்கும் சட்டம் (Strengthening Canadian Citizenship Act (SCCA)) ஸ்டீபன் ஹார்ப்பர் அரசினால் கொண்டுவரப்பட்டது. இதன் பிரகாரம் குடிவரவு விண்ணப்பத்தின்போது தவறான தகவல்களைக் கொடுத்திருப்பது தெரியவரும் பட்சத்தில் விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்ட குடியுரிமையை மீளப்பெறும் அதிகாரம் கனடிய அரசுக்கு உண்டு.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குடிவரவு அமைச்சரே ஒருவரது குடியுரிமையை மீளப்பெறும் ஆணையைப் பிறப்பிப்பார். சில சிக்கலான சந்தர்ப்பங்களில் மத்திய நீதிமன்றம் சம்பந்தப்படவேண்டியும் ஏற்படலாம். மே 28, 2015 இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஆனாலும், தவறான தகவல்களைக் கொடுத்து கனடாவுக்கு வந்த ஒருவர் தற்போது ட்றூடோ அரசில் அமைச்சராகவிருக்கிறார் என்றொரு குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் முன்னரங்க சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் எஸ்காரியோ போன்றவர்களது தேவைகள் அதிகமாகவிருக்கின்றன. குறைந்த பட்சம் அவரது 40 நாள் நீடிப்பு கோரிக்கையை அரசு வழங்கவேண்டும்.