World

நாடகம் முடிவுற்றது | ஜனாதிபதி ட்றம்ப் நிரபராதி!

செய்தி அலசல் / சிவதாசன்

பெப்ரவரி 5, 2020

அமெரிக்க ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தாரெனக் கூறி அவரைப் பதவியிலிருந்து அகற்றவேண்டுமெனக் கோரி செனட் சபையில் இன்று எடுத்துக்கொண்ட வழக்கின் தீர்ப்பு சற்று முன் அறிவிக்கப்பட்டது.

செனட் சபையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது 52 பேர் ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்படக் கூடாதெனவும் 48 பேர் அகற்றப்படவேண்டுமெனவும் வாக்களித்திருந்தார்கள். குடியரசுக் காட்சியைச் சேர்ந்த செனட்டர் மிட் றொம்னி ஒருவரே தனது கட்சி சாராது வாக்களித்திருந்தார்.

செனட் சபையில் ஜனாதிபதி ட்றம்பின் கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மை வகிப்பதால் இம் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

ஜனாதிபதி மீது சாட்டப்பட்ட இரண்டு குற்றங்களாவன:

  1. அதிகார துஷ்பிரயோகம் (abuse of power). அதாவது தனது அதிகாரத்தைப் பாவித்து யூகிக்கிறேன் ஜனாதிபதியிடம் தன் அரசியல் எதிரியான ஜோ பைடன் மீதான அழுக்குகளைத் தரும்படி கேட்டு அமெரிக்கா ஏற்கெனவே கொடுக்கவிருந்த கடனுதவியைபி பேரமாகப் பேசியது.
  2. விசாரணைக்குத் தடையாகவிருந்தது (obstruction of justice). அதாவது இக் குற்றம் தொடர்பாக கீழ்ச்சபை விசாரணைகளை மேகொண்டபோது அவற்றுக்கு சாடசிகளை வழங்கவிருந்தவர்கள் மீது முறையற்ற தடங்கல்களை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி, இரண்டு விடயங்களில் குற்றவாளியெனக் கண்டு கீழ் சபையான பிரதிநிதிகள் சபை இவ் வழக்கை டிசம்பர் 18ம் திகதி, மேல் சபைக்கு விசாரணைக்காக அனுப்பியிருந்தது. நீதிமன்றத்தில் நடைபெறுவதை போல சாட்சிகள் அழைக்கப்பட்டு குறுக்குவிசாரணை செய்யப்படவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அச் சாட்சிகளை அழைப்பதத்திற்கு மேல் சபையின் சம்மதம் தேவை. மேற்சபையில் தமது பெரும்பான்மையைப் பாவித்து குடியரசுக் கட்சி சாட்சிகள் விசாரிக்கப்படுவதைத் தடுத்துவிட்டதால் வழக்கு குறுக்கு விசாரணை செய்யப்படாமலேயே வாக்கெடுப்புக்குச் சென்றுவிட்டது. அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதி நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

செனட் சபையில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை இருக்கிறதென்றும், தீர்ப்பு இப்படித்தான் வந்து முடியுமென்றும் தெரிந்தும் ஏன் இவ்வளவு நாடகமும், இத்தனை பொருட் செலவில் ஆடவேண்டுமென்ற கேள்வி எழலாம்.

அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: அமெரிக்க நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரையில் அதன் பிரதிநிதிகள் தமது மூத்தோர் எழுதிய அரசியலமைப்பை ஏறத்தாழ ஒரு புனித நூல் போலப் பாவிப்பது வழக்கம். அதன் பிரகாரம் ஜனாதிபதி ட்றம்ப் மீதான குற்றச்சாட்டுகள் அரசியலமைப்புச் சடங்குகளுக்கேற்ப இரு சபைகளினாலும் முறையாகக் கையாளப்பட்டதென்ற பதிவு பாராளுமன்ற வரலாற்றில் பதியப்பட வேண்டும்;
இரண்டு: சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந்தால் ட்றம்பின் மீதான பல அழுக்குகள் வெளிக்கொணரப்பட்டு அவை எதிர்வரும் தேர்தலில் அவரது வெற்றியைப் பறிப்பதற்கான சந்தர்ப்பங்களுண்டு என அவரது அரசியல் எதிரிகள் விரும்பியமை. அவருக்கு எதிரான சாட்சிகள் மிகவும் வலுவுடையதாக இருந்ததும் உண்மைதான்.

எனவே நடந்து முடிந்தது ஒரு நாடகமெனினும், அதற்கான அவசியமும் இருந்தது என்பதே உண்மை.

வழக்கமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் உறுப்பினர்கள் கட்சி சார்பின்றி வாக்களிப்பதுண்டு. இந்தத் தடவை செனட் சபையில் செனட்டர் மிட் றொம்னி ஒருவரைத் தவிர மற்றெல்லோரும் கட்சி சார்பான நிலைப்பாட்டை எடுத்தமை உறுப்பினர்கள் மீது கரி பூசப்பட்டதான சம்பவமாகவே வரலாற்றில் பதியப்படும் என நம்பலாம்.