“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம்.


We fear Gotabaya

கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவரது காரணம். அவருக்குப் பேசத் தெரியாது. கடினமான கேள்விகளால் அவர் இலகுவாகக் கொதித்தெழுபவர். அண்ணன் மஹிந்த மாதிரி அவர் இனிக்கப் பேசுபவர் அல்ல. இவ்வளவு காலமும் கட்டியெழுப்பிய அவரது பிம்பத்தின் நிஜம் தெரிந்துவிடக்கூடாது; தேர்தல் முடியும் மட்டும் அவர் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என அவரது மேய்ப்பர்கள் கருதியிருக்கலாம்.

அப்படியிருந்தும் அவரது உண்மையான முகம் அப்பப்போ வெளிவந்து விடுகிறது.

பொலநறுவவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஐ.தே.கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குத் தாவிய வசந்தா சேனநாயக்காவைச் ‘சுடச் சுட’ மேடையேற்ற முயன்றபோது ஊடகக் கமராக்கள் முகத்துக்குள் இருப்பதையும் உதாசீனம் செய்துவிட்டு “அவனைத் தூக்கிலிடுவேன்’ எனக் கத்தியவர் கோதபாய.

கேகாலையில் நடைபெறவிருந்த கூட்டமொன்றிற்கு மக்களை அழைத்துச் சென்ற ஒரு பஸ் வண்டியில் புத்தி பாதிக்கப்பட்ட (Down syndrome) ஒரு இளம் பெண் ஐந்து தடவைகள் வன்புணர்வு செய்யப்பட்டாள். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவோ அல்லது அவளிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறவோ அச்சம் காரணமாகக் காவற்துறை முனையவில்லை. முறைப்பாடு செய்யக்கூடாது என அவளது குடும்பத்துக்கு அழுத்தம் வேறு கொடுக்கப்படுகிறது. இச் சம்பவத்தைப் பற்றி அறிந்த மூன்று கேகாலை காவற்துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ராஜபக்சவின் கூட்டமொன்றில் கலந்துகொள்ள மறுத்தமைக்காக மாத்தளை மாவட்டத்தில் புத்த பிக்கு ஒருவர் பொதுஜன பெரமுன பிரதேச சபைத் தலைவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் 25% வாக்குகள் ராஜபக்சவுக்கே போடப்பட வேண்டுமென நாவலப்பிட்டி பொதுஜன பெரமுன நாட்டாமை மஹிந்தானந்த அளுத்கமகே முஸ்லிம் சமூகத்துக்கு விடும் எச்சரிக்கை காணொளியாக வலம் வருகிறது. “உங்களுக்காக நாங்கள் போராட வேண்டுமானால் எங்களுக்கு முஸ்லிம்களின் 25% வாக்குகள் வேண்டும்” என அவர் முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு எச்சரிப்பதாக அதில் காட்டப்படுகிறது.

வடக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீர் வீதித் தடைகள் மூலமும், இராணுவ மறிப்புகள் மூலமும், வாகாளர்களை எச்சரிப்பது சமீபகால சம்பவங்கள்.

வெள்ளை வான் காலத்து சூழ்நிலை மீளவும் ஒப்புவிக்கப்படுவது தெரிகிறது. கோதபாய வெற்றி பெற்றால் நாடு முழுவதும், சகல இனங்களும், ஒரு புதிய இருளான காலத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்பதற்கு மேற்கூறிய சில உதாரணங்களே போதும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் மூன்று விடயங்கள் உறுதிப்படுத்தப்படும். குடும்ப நிர்வாகம், ஊழல், மிருகத்தனம்.

உலகம் ஜனநாயகத்தை நோக்கி நகரும் வேளையில் கணிசமான எண்ணிக்கையான மக்கள் காடைத் தனத்தால் ஆளப்படுவேண்டுமென்று விரும்பும் நாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெருந்தெருக்களுக்காகவும், துறைமுகங்களுக்காகவும், விமான நிலையங்களுக்காகவும், தாமரைக் கோபுரங்களுக்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை அடகுவைக்க விரும்பும் மக்கள் இந்நாட்டில் மட்டும்தான் வாழமுடியும். நேற்றய வெள்ளை வான் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் தான் இன்றய நாளின் அறிவுசார் கோட்பாட்டாளர்கள்.

இது தேர்தலுக்கு முன்பான கடைசிப் பதிப்பு. வருகிற ஞாயிறு இந் நாட்டின் 7வது நிறைவேற்று ஜனாதிபதி தெரிசெய்யப்பட்டிருப்பார். நவம்பர் 16 ம் திகதி எம் வாசகர்கள் சரியான வகையில் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆசியாவின் மூத்த ஜனநாயகத்தை ஒளிரச் செய்யுங்கள். உண்மையைச் சொல்ல முயற்சிக்கும் இப் பத்திரிகையின் ஊடகவியலாளர்களினதும், நாடெங்கிலுமுள்ள இதர ஊடகவியலாளர்களினதும் உயிர்கள் அச்சுறுத்தப்படாது இருப்பதற்காகவாவது சிந்தித்து வாக்களியுங்கள்.

நவம்பர் 16 தேர்தலில் 35 வேட்பாளர்கள் நிற்கின்றார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் இரண்டு பேர்களுக்கிடையேயான தேர்வு பற்றியது மட்டுமே.

அவர்களில் ஒருவர் எங்களுக்குத் தீராத அச்சத்தைத் தருபவர்.