India

நாகபட்டினம் – காங்கேசந்துறை பாதை சேவை இம்மாதம் ஆரம்பம்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு நாகபட்டினம் – காங்கேசந்துறை பாதைச் சேவை இம்மாத முடிவில் (பெப். 2024) ஆரம்பமாகவுள்ளதென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்துள்ளார். அதே வேளை தலைமன்னார் – ராமேஸ்வரம் பாதை மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தரைவழிப்பாதை ஆகிய திட்டங்களும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்பாதைச் சேவையின் மூலம் சுற்றுலாச் சேவைகள், ஹொட்டேல் தொழில்துறை மற்றும் புதிய தொழில்வாய்ப்புக்க்ளை அப்பிரதேச மக்களுக்கு வழங்கமுடியுமெனவும் அதே வேளை இப்பிரதேசத்தில் வாழும் மீனவ சமூகங்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்க முடியுமெனவும் இந்தியா நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 110 கி.மீ. தூரமுள்ள இரு துறைகளுக்குமிடையிலான இச்சேவை தினமும் ஒரு தரம் நடைபெறவுள்ளதாகவும் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு நாகபட்டினத்திலிருந்து புறப்படும் பாதை காலை 11:00 மணிக்கு காங்கேசந்துறையை அடையுமெனவும் பின்னர் பி.ப. 1:30 மணிக்கு மீளப் புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு நாகபட்டினத்தை வந்தடையுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் ஒருவர் அதிக பட்சம் 40 கி.கி. எடையுள்ள பொதியைக் கொண்டு போகலாமெனவும் இதற்கான கட்டணம் இந்திய ரூ.7670 (USD 90) எனக்கூறப்படுகிறது.

தமிழ்நாடு மறிற்றைம் சபையினால் நிர்வகிக்கப்படும் இச்சேவையைப் பாவிக்க விரும்புபவர்கள் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் தமது விருப்பத்தைப் பதிவு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.