India

நாகபட்டினம்-காங்கேசந்துறை கப்பல் பயண சேவை நாளை ஆரம்பம்!

பயண நேரம் மூன்று மணித்தியாலங்கள்

போர் காரணமாக கடந்த நான்கு தசாப்தங்களாக நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு-காங்கேசந்துறை கப்பல் பயண சேவை நாள (அக்டோபர் 14) முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்திய கப்பல் கூட்டுத்தானத்துக்குச் சொந்தமான விரைவு சேவைக் கப்பலான சேரியப்பாணி என்னும் கப்பல் இம் முதல் பயணத்தை ஆரம்பித்துவைக்கவுள்ளது. இச்சேவைக்கான பரீட்சார்த்த ஓட்டம் அக்டோபர் 8, ஞாயிறு அன்று காலை 9.40 இற்கு நாகபட்டினத்தில் ஆரம்பமாகியது என்றும் காங்கேசந்துறை துறைமுகத்தை அடைய சுமார் 3 மணித்தியாலங்கள் எடுத்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பயணத்திற்கான கட்டணம் 7,670 இந்திய ரூபாய்கள் எனவும் இதற்கான டிக்கட்டுகளை விற்கும் பணி மூன்றாம் தரப்பு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் 50 கிலோ வரையான எடையுள்ள பொதிகளைக் கொண்டு செல்ல முடியும். கப்பலில் 14 பணியாளர்களை விட 150 பயணிகள் பயணம் செய்யலாம். சுங்கம், வெளி விவகாரம், கப்பல் போக்குவரத்து, குடிவரவு மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு சேவைத் திணைக்களங்களின் மத்திய, மாநில அலுவலகங்கள் நாகபட்டினம் துறைமுகத்தில் சேவைகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் கொழும்பு ஊடாக செல்லாது விரைவாக யாழ்ப்பாணம் செல்ல இக்கப்பல் சேவை உதவியாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

2009 இல் போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களின் பிந்நர் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியின் போது தமிழ்நாடு – இலங்கைக்கிடையேயான இரண்டு கப்பல் சேவைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. ஒன்று ராமேஸ்வரம் – தலைமன்னார் சேவை மற்றது தூத்துக்குடி – கொழும்பு சேவை. இம்முயற்சி பின்னர் கிடப்பில் போடப்பட்டு கடந்த ஜூலை ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து இம் முனைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை-இந்திய கப்பல் சேவை நூற்றாண்டு காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. சென்னைக்கும் கொழுபுக்குமிடையேயான தபால் போக்குவரத்து தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ‘தபாற் கப்பல்’ மூலமாகவே நடைபெற்று வந்தது.