நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலைசெய்ய முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
ரஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களான நளினியையும் பி.ரவிச்சந்திரனையும் விடுதலை செய்வதற்குத் தமக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 142 ஆவது கட்டளையின் பிரகாரம் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களைப் பாவித்து ஏ.ஜி.பேரறிவாளனை உச்சநீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்திருந்தது. ஆனால் அப்படியானதொரு நிலை நளினி, ரவிச்சந்திரன் விடயத்தில் இல்லை. வேண்டுமானால் அவர்களும் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்து பேரறிவாளனது விடுதலையோடு அதைத் தொடர்புபடுத்த முடியுமா என முயற்சிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
1991 இல் தமிழ்நாடு சிறீபெரும்புதூரில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜயகுமார், றொபேர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்றிருந்தனர். இவர்களில் பேரறிவாளன் சென்ற மே மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
“பேரறிவாளனது விடுதலையின் பின்னர் நளினியும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நான் நம்பியிருந்தேன். பேரற்வாளனின் தாயார் அற்புதம்மாள் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொண்டு இடையறாத முயற்சிகளின் மூலம் மகநது விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார். நளினியும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நான் நம்புகிறேன்” என ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியின்போது நளினியின் தாயார் பத்மா சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
நளினி குழந்தை ஒன்றுக்குத் தாயாக இருந்தபடியால் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குற்றம்சாட்டப்பட்டவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வழிசெய்தார் எனவும், தற்போதைய முதல்வர் எம்.கே.ஸ்டாலினும் மீதியுள்ள ஆறுபேரையும் விடுவிக்க முயற்சி செய்வார் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாக நளினியின் தாயார் மேலும் தெரிவித்தார். (தி நியூஸ் மினிட்)