Spread the love

கொழும்பு மே 18, 2020: இன மத பிரிவினைகளைக் குறைக்க, முந்திய அரசு ஆரம்பித்த இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என ஐ.தே.கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போர் முடிவுற்ற 11 ஆண்டு நிறைவின் ஞாபகார்த்தமாக ஐ.தே.கட்சி ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.

நமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிந்து 11 வருடங்களாகின்ற இன்றைய நாளில் இப் போரின் காரணமாகத் தமது உயிர்களை இழந்த அத்தனை பேரையும், அதே வேளை தமது பங்களிப்புக்களைச் செய்த எமது துணிச்சலான பாதுகாப்பு படைகளையும் நினைவு கூர்வோம்.



30 வருடங்களுக்கு மேலாக, எமது தேசம் இனரீதியாகப் பிளவுபட்டு, எங்கள் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருந்தனர். போரின் முடிவு, அதன் காயங்கள் ஆறி, மக்கள் முன்னோக்கி நடைபோடுவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்ததுமல்லாது, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையும் எழுதி வைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிக்குள் காத்திரமான தீர்வொன்றைப் பெறுவதற்கு இக் கட்சி எப்போதுமே உறுதியோடு செயலாற்றி வருகிறது.

2015 இலிருந்து எமக்குத் தரப்பட்ட ஆணையின் பிரகாரம், எமது கட்சி, போரின் போதும், அதற்குப் பிறகும், பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து, நிலையான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தரும் நோக்கில் செயற்பட்டு வந்திருக்கிறது.

இது விடயமாக நாம் பல முன்னேற்றங்களைக் கண்டிருந்தோம் ஆனாலும், அதை முடித்துவைப்பதற்கு மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலமும், செயற்பாடுகள் மூலமுமே, இன் நாட்டின் தலைவர்களாகிய நாம் இன, மத பிளவுகளைக் குறைக்கவும், எமது நிலத்தில் இன்னுமொரு இரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும். எமது அடுத்த தலைமுறைகளூக்காக நாம் இதைச் செய்தேயாகவேண்டும். இனவாதமும், இனவன்முறையும் எமது தீர்வுமுயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும்.

இவ்வறிக்கை, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.


Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | அனைத்துலக மருத்துவ அமைப்பின் (IMHO) நிவாரணப் பணிகள்