நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை உறுதியான திட்டங்களை முன்வைக்கவேண்டும் – ஐ.ஒன்றியம்

பெப்ரவரி 28, 2020

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காமல் பார்க்கக்கூடிய வகையில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதற்கும், குடிமைச் சமூகங்கள், சுயாதீன ஊடகங்கள், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், ஏற்ற வகையில் ஆணித்தரமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 வது அமர்வில், ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பித்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தொடர்பாக பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாத அது தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றி, காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல் போன்றவற்றை உள்ளடக்கிய காத்திரமானதும், நீடிக்கக்கூடியதுமான நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்கவும், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பணியாற்றவும் இலங்கை அரசு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென அவ்வறிக்கையில் ஐ.ஒன்றியம் கூறியுள்ளது.

“ஐ.நா. தீர்மானம் 30/1 ஐ இனிமேலும் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கை எடுத்த முடிவு குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். ஐ.நா. மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்தும் செயலாற்றுவதன் மூலம் போருக்குப் பின்னான மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணயத்தின் ஆதரவுடன் செயற்பட வாய்ப்புண்டு. சட்டம், ஒழுங்கு, மனித உரிமைகள், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் இலங்கை காத்திரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு என்றும் உண்டு” என ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கைதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் விடயத்தில், அதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையைத் தொடர்ந்தும் பிரயோகிக்கும்படியும், அத்தோடு அதனை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை அரசு முயற்சிகளி மேற்கொள்ளவேண்டுமெனவும் அது பரிந்துரைத்துள்ளது.